Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 205

ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 205

ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை
இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பது இனப்பிரச்சினையல்ல இறைமைப்பிரச்சினை. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கையில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றாகிய ஈழத்தமிழர்கள் உடைய உயிருக்கும் உடலுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக்கூடிய அச்சத்தைக் கடந்த 75 ஆண்டுகாலமாக அளித்து வரும், ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய, பிரித்தானிய காலனித்துவகால, அனைத்துலகப்பிரச்சினை.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கையின் மூத்த தேசஇனமாக இறைமையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் அரசியலை 1947 செப்டெம்பர் 20 இல் காலனித்துவ பிரித்தானிய அரசால் நடத்தி முடிக்கப்பட்ட இலங்கைப் பாராளுமன்றத்துக்கான முதல் தேர்தலே மாற்றியமைத்து இன்றைய ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினைக்கான தொடக்கமாகியது.
27.09. 1947 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் டி. எஸ். சேனநாயக்கா பிரதமராகி 08.10. 1947 இல் முதல் அமைச்சரவை கட்டமைக்கப்பட்டு 14.10. 1947 இல் முதலாவது பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று, 11.11. 1947 இல் இலண்டனிலும் கொழும்பிலும் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, 12.11. 1947இல் முதலாவது மேலவைக் கூட்டம் நடைபெற்று 13.11.1947 இல் இலங்கைச் சுதந்திர மசோதா பிரித்தானியப் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு 25. 11. 1947 இல் பிரதிநிதிகள் சபை பாராளுமன்றமாகச் சம்பிரதாயபூர்வமாக கூட்டப்பட்டு மறுநாள் 26.11. 1947 இல் பிரதமர் டி. எஸ் சேனநாயக்காவால் சுதந்திர மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அன்று இழக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் இறைமையை மீட்டெடுக்கும் மனிதவலுவாக ஏழு ஆண்டுகளின் பின்னர் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தோற்றமும் 26.11. 1954 இல் வரலாற்றில் கட்டமைக்கப்பட்டது ஒரு அதிசயமான திகதி ஒற்றுமையாகவும் அமைகிறது 01.12.1947 இல் அன்றைய நிதிஅமைச்சரான ஜே. ஆர். ஜயவர்த்தனாவால் இலங்கைப் பாராளுமன்றத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு 05.12. 1947 இல் சுதந்திர மசோதா பாராளுமன்றத்தில் 59க்கு 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டு 10.12. 1947 இல் பிரித்தானிய மகாராணியாக அன்று விளங்கிய மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் மகாராணி அவர்களின் கையொப்பத்தைப் பெற்றது. அன்று முதல் ஈழத்தமிழ் மக்களின் மக்கள் போராட்டம் அவர்களால் தேர்ந்தெடுக்ப்பட்ட இலங்கைப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் மூலம் 1975 இல் தந்தை செல்வநாயகம் சிறிலங்காப் பாராளுமன்றத்திற்கு ஈழத்தமிழர்களை ஆளும் அரசியலமைப்புச் சட்ட உரிமையில்லையென ஈழத்தமிழர்களுக்கான தன்னாட்சி உரிமைப் பிரகடனத்தை சட்டபூர்வமாக உலகுக்கு அறிவித்து அதிலிருந்து விலகிய காலம் வரை 28 ஆண்டு காலப் பாராளுமன்றப் போராட்டமாக அமைந்தமை ஈழத்தமிழரின் சமகால முதற்கட்ட வரலாறு.
மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமை அனைத்துலக தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான வகையில் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றக் கொடுங்கோன்மையால் பறிக்கப்பட்ட வரலாற்றுத் தவறின் அனுபவத்தில் இலங்கைத் தமிழர்கள் தங்களின் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக விளங்கிய நல்லூரில் தங்களின் கடைசி அரசன் சங்கிலியனின் உருவச்சிலைக்கு முன்னால் தங்களின் இறைமையின் தனித்துவத்தை உலகுக்கு வெளிப்படுத்தி 1949 இல் அக்காலத் இலங்கைத்தமிழர்களின் தலைவரான தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியை நிறுவினர்.
இந்தக்கட்சியின் 23 ஆண்டுகால எல்லாவிதமான ஜனநாயகப் போராட்டங்களையும் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் படைபலம் மற்றும் சிங்கள அரசபயங்கரவாதம் கொண்டு வன்முறைப்படுத்தி 22.05. 1972 இல் சோல்பரி அரசியலமைப்பையும் வன்முறைப்படுத்தி இலங்கைத் தமிழர்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியை இழந்த நிலையில் 22.05. 1972 இல் தன்னிச்சையாக சிங்கள பௌத்த சிறிலங்காக்குடியரசை சிங்கள அரசாங்கம் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழர்களை அரசற்ற தேசஇனம் என்ற நிலைக்குத் தள்ளினர்.
இந்த ஒடுக்குமுறை அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் முதலில் ஈழத்தமிழகம் எனத் தங்கள் வரலாற்றுத் தாயகத்தை அடையாளப்படுத்திய இலங்கைத் தமிழர்கள் அதன் வளர்ச்சியில் தங்களுக்கான நடைமுறைஅரசை (De-facto) தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைமுறைப்படுத்திய பொழுது தங்கள் தாயகத்தைத் தமிழீழம் என முன்னிலைப்படுத்தினர். இந்தத் தமிழீழ மக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் பொறுப்பை இந்தியா தன்பொறுப்பாக நிலைப்படுத்த முனைந்து சுதுமலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைப் பொறுப்பேற்று நடாத்திய பொதுக்கூட்டத்தில் சுதுமலைப்பிரகடனத்தைத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட பொழுது இந்தியா அப்பொறுப்பில் தவறுமாயின் மீளவும் தமிழீழ மக்கள் போராட்டத்தைத் தொடருவார்கள் என்ற முன்நிபந்தனையையும் அறிவித்தே அடையாள ஆயுத ஓப்படைப்பைச் செய்தார். ஆயினும் இந்தியா தனது பொறுப்புத்துறப்பை அரசியலாக்கிய நிலையில் 1987ம் ஆண்டு செப்டெம்பர் 26 இல் தியாகதீபம் திலீபனின் உணவுமறுப்பு அமைதிப்போராட்டம் உயிர்க்கொடையாக அமைந்த பொழுது இலங்கைப் பாராளுமன்றம் உருவாகி 42 ஆண்டுகளின் பின்னர் தமிழீழ மக்களின் மண் மீட்புக்கான மக்கள் போராட்டம் வேகம் கொண்டெழுந்தது. இந்தப் போராட்டத்தையே 17.05. 2009 இல் சிறிலங்கா முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் மூலம் ஒடுக்கி இன்றுவரை ஈழத்தமிழ் மக்களுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தைப் படைபல நிர்வாகம் மூலம் ஏற்படுத்தி அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான ஆட்சிமுறையைத் தொடர்கிறது. இந்நேரத்தில் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் இந்த வரலாற்று வளர்ச்சியை மறந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற அடிப்படையில் நடக்க முற்படுவது ஈழத்தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து ஒருநாடு ஒரு சட்டம் என எதனைச் சிறிலங்கா சாதிக்க நினைக்கிறதோ அதற்கு பக்கத்துணையாகும் செயலாகவே அமையும். ஈழத்தமிழர்களும் உலகத் தமிழர்களும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சிளை இறைமைப்பிரச்சினை என்பதை உண்மையாகவும் நேர்மையாகவும் உலகின் முன் உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டும்தான் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வைப் பெறலாம் இது பிரிவினையும் அல்ல பயங்கரவாதமும் அல்ல. இந்த உண்மை ஏற்கப்படாத எந்தத் தீர்வும் எந்தக் காலத்திலும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாகாது என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது.

ஆசிரியர்

Exit mobile version