Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர்களது அறவழிப்போராட்டங்களும் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 202

ஈழத்தமிழர்களது அறவழிப்போராட்டங்களும் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 202

ஈழத்தமிழர்களது அறவழிப்போராட்டங்களும்
அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும்

சிறிலங்கா அரசாங்கத்தின் படைகளால் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நீதிக்காக அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இரண்டாயிரம் நாட்களுக்கு மேலாக 158 போராட்டக்காரர்களை போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட உடல் வேதனைகளாலும் உள அழுத்தத்தினாலும் இழந்து விட்ட நிலையிலும் தொடர்ந்து அறவழியில் வன்முறையிலாப் போராட்டத்தை முன்னெடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக வன்முறையில்லா நாள் அக்டோபர் 2ம் திகதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிலைப்படுத்தி இடம் பெறுகிறது.
மகாத்மா காந்தி 1930களில் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக “நேரிய வழிகளால் நேரியதை அடைதல்” என்னும் விருதுவாக்கியத்துடன் உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்தியதை நினைவுகூர்ந்து அனைத்துலக வன்முறையிலா நாள் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்டாலும் ஈழத்தமிழர்களின் சமகால வரலாற்றில் வன்முறையிலா உணவுத்தவிர்பப்பு போரில் ஈடுபட்ட தியாகி திலீபனையும் அன்னை பூபதியையும் இந்தியா மரணமடைய அனுமதித்து மகாத்மா காந்தியின் நற்பெயருக்கே பங்கத்தை ஏற்படுத்தியதை உலகு நன்கு அறியும். இன்றுவரை இந்தியா இதற்கான கவலையைக் கூடத் தெரிவியாதிருப்பது வன்முறையிலாப் போராட்டங்களில் இளையவர்கள் நம்பிக்கையிழக்க வைக்கிறது.
“போராட்டம் முக்கிய தேவை என்னும் நிலையில் செயலறு நிலையில் இருப்பதையும் பணிந்து கிடப்பதையும் நிராகரித்துப் போராட்டத்தை வன்முறைகளைப் பயன்படுத்தாது முன்னெடுத்தல் என்னும் தொழில்நுட்பத்தை வன்முறையிலாச் செயற்பாடு எனலாம். வன்முறையிலாச் செயற்பாடு முரண்பாடுகளை தவிர்ப்பதோ அல்லது கவனியாதிருப்பதோ அல்ல. அரசியலில் ஆற்றலுள்ள முறையில் பதிலளிப்பதற்கு மக்கள் சக்தியை ஆற்றலுள்ள முறையில் பயன்படுத்துதல்” என வன்முறையிலாப் போராட்டத்திற்கு, ‘வன்முறையிலாப் போராட்டத்தின் அரசியல்’ என்னும் நூலை எழுதிய பேராசிரியர் ஜீனி சார்ப் வரைவிலக்கணம் தந்துள்ளார்.
வன்முறையிலாப் போராட்டத்தின் முக்கிய கோட்பாடாக “ஆளுபவர்களின் சக்தி மக்களின் விருப்பிலேயே தங்கியுள்ளது என்பதால் மக்களின் விருப்பையும் ஒத்துழைப்பையும் வன்முறையிலா போராட்டத்தால் விலக்கிக் கொள்வதன் மூலம் ஆளுபவர்களின் சக்தியை நலிவடையச் செய்தல்” என்பது அமைகிறது.
வன்முறையிலாப் போராட்டம் மூன்று வகைகளில் நிகழலாம். முதலாம் வகை, வன்முறையிலா எதிர்ப்பையும் வற்புறுத்தலையும் ஊர்வலங்களையும் மற்றும் விழிப்புநிலைப்போராட்டங்களையும் உள்ளடக்கும். இரண்டாம் வகையில் ஒத்துழையாமைப் போராட்டங்கள் இடம்பெறும். மூன்றாம் வகையில் வன்முறையிலாத முறையில் மறியல் செய்தல், இடத்தை அடைத்தல் போன்ற தலையிடுதல்கள் அமையும்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் 1930களில் டொனமூர் அரசியலமைப்பு பிரித்தானிய காலனித்துவ அரசால் கொண்டுவரப்பட்டதன் பின்னரான தேர்தலை யாழ்ப்பாண காங்கிரசு புறக்கணித்து ஓத்துழையாமையை வன்முறையிலாமுறையில் வெளிப்படுத்தி ஈழத்தமிழர்களின் அறவழிப்போராட்டத்தை தொடக்கி வைத்தது. ஆயினும் சிங்களவர்களை மட்டும் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
1949 களில் மலையக மக்களின் குடியுரிமை சிங்கள அரசால் பறிக்கப்பட்ட பொழுது மலையகத் தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரக போராட்டதை முன்னெடுத்த பொழுது அவர்களை பெருந்தோட்டப் பொருளாதாரத்தை வளப்படுத்தவும் நிதிமுகாமைத்துவத்தை ஒழுங்குபடுத்தவும் வேலைகளுக்கு அழைத்து வந்த பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் அதனைக் கவனத்தில் எடுக்கத் தவறினர்.
அவ்வாறே 1956இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது இலங்கைத் தமிழ்த்தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தை தொடங்கிய பொழுதும் அதனை அரசபாதுகாப்புடன் சிங்களக் காடையர்கள் வன்முறைகளால் முறியடித்து நாடெங்கும் தமிழர்களின் உயிருக்கும் உடலுக்கும் உடைமைகளுக்கும் இனங்காணக் கூடிய அச்சுறுத்தல்களை முன்னெடுத்தனர்..
1958இல் அரசியல் அதிகாரப் பரவலாக்கலை மாவட்டசபைகள் மூலம் முன்னெடுக்கச் செய்யப்பட்ட பண்டா- செல்வா உடன்படிக்கையை கண்டிப் பாதயாத்திரை எச்சரிப்புடன் கூடிய வன்முறைப் போராட்டங்களை முன்னெடுத்துக் கிழித்தெறியச் செய்ததன் பின்னர் நாடளாவிய நிலையில் இனஅழிப்பை சிங்களப்படைகளுடன் சிங்களக் காடையர்களும் சேர்ந்து செய்தனர். பொருளாதாரக் குற்றங்களும் வெளிப்படையாகத் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்டன
1960களில் சத்தியாக்கிரகத்தால் வடக்கு கிழக்கில் அரச நிர்வாகமே தமிழர்களிடை 3மாதங்கள் செயலிழந்து போய் அஞ்சல் முத்திரை தமிழர்களால் வெளியிடப்பட்டுத் தங்களுக்கான தபால் விநியோகம் தொடங்கப்பெற்ற நிலையில் படைபலம் கொண்டு அதனைச் சிங்கள அரசாங்கம் முறியடித்தது.
1965 இல் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ்மொழி சிறப்புப் பயன்பாட்டுச் சட்டம் டட்லி சேனநாயக்காவால் அறிவிக்கப்பட்ட பொழுது சிங்கள காடையர்களால் வன்முறைகளால் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இதே ஆண்டில் கல்வி அமைச்சர் ஈரியக்கொலை தமிழ் மாணவர்களின் உயர்கல்விக்கு எதிரான தரப்படுத்தல் சட்டத்தை கொண்டு வந்த பொழுதும் 1970களில் அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகம்மட் தரப்படுத்தலை முன்னெடுத்த வேளையிலும் ஈழத்தமிழ் மாணவர்கள் செய்த அறவழி எதிர்ப்பு ஊர்வலங்கள் சிங்கள அரசால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
1972இல் சிங்கள பௌத்த குடியரசுப் பிரகடனம் ஈழத்தமிழர்களை அரசற்ற தேசஇனமாக மாற்றிய பொழுது அந்தக் குடியரசு அரசியலமைப்புக்கு எதிராகப் பலவகையில் ஈழத்தமிழர்கள் வன்முறையிலா முயற்சிகளை முன்னெடுத்த நேரத்தில் ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வன்முறையிலா சனநாயகப் போராட்டங்கள் படைபலம் கொண்டு ஒடுக்கப்பட்டதன் பின்னணியிலே ஈழத்தமிழர்களின் உயிருக்கும் உடலுக்கும் உடைமைகளுக்கும் இனங்காணக்கூடிய அச்சம் நாளாந்த வாழ்வாக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஈழத்தமிழர்களின் ஆயுத எதிர்ப்பு அவர்களின் நாளாந்த வாழ்வில் அவர்களின் உயிரையும் உடலையும் உடைமைகளையும் பேணுவதற்கான முக்கிய தேவையாயிற்று. இதன் பின்னர் 1972 முதல் 2009 வரை சிறிலங்கா ஈழத்தமிழின அழிப்பை தனது அரசகொள்கையாக முன்னெடுத்து மனித உரிமைகள் வன்முறைகள், யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்த பொழுது உலகநாடுகளும் அமைப்புக்களும் உரிய நேரத்தில் அதனைத் தடுக்கத் தவறியதன் விளைவாக 176000க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களின் உயிரை இனஅழிப்புக்குள்ளாக்கி ஈழத்தமிழர்களின் தாயகத்தின் அனைத்து உட்கட்டுமானங்களையும் அழித்து ஒழிப்பதையே இன்றுவரை தங்கள் அரசியல் கொள்கையாகத் தொடர்கிறது. இனியேனும் உலகநாடுகளும் அமைப்புக்களும் ஈழத்தமிழர்கள் வன்முறையிலாப் போராட்டங்களில் நம்பிக்கை வைக்கக் கூடிய முறையில் அனைத்துலக சட்டங்களால் குற்றம் இழைத்தவர்களை தண்டித்து உலக பாதுகாப்புக்கும் அமைதிக்கும் உதவ வேண்டும் என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது.

Exit mobile version