Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில் சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா | ஆசிரியர் தலையங்கம்...

நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில் சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 187

ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 18

நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில்
சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா

சிறிலங்கா இந்திய பொருளாதார உதவியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ளவதைத் தவிர வேறுவழியில்லாதநிலையில் இந்தியாவிடம் இருந்து கடனுதவி எரிபொருள் உதவி, அரிசி உதவியென தொடர்ச்சியாகப் பொருளாதார உதவிகளைப் பெற்று தான் வாழும் நிலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக செப்டெம்பர் மாதமளவில் இலங்கை ரூபாவின் வீழ்ச்சியால் இந்திய ரூபாவை இலங்கை பயன்படுத்த வேண்டி வருமென இலங்கையின் முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜேயசிங்க மே 27இல்  செய்த எச்சரிப்பும், . அத்துடன் இந்தியா வழங்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் நாட்டில் உள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய பாரதூரமான நிலை ஏற்படும் என்னும் அவருடைய எதிர்வு கூறலும், உண்மையாக்கக் கூடிய முறையிலேயே, மேலும் 500 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியாவிடம் இருந்து பெற சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அணுகிவருகிறார். அத்தடன் இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 50000 மெற்ரிக் தொன் அரிசியியை சிறிலங்கா இறக்குமதி செய்ய இருப்பதும் காமினி விஜேசிங்க மே மாதத்தில் கூறியமையை வேகப்படுத்துகிறது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தோற்றுவித்து வரும் இத்தகைய அபாயங்களை உணர்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வகையில், நாட்டின் உற்பத்தியைப் பெருக்கக் கூடியதாக, இலங்கையின் ஒவ்வொரு குடியினையும் சமத்துவமாக மதித்து, ஒவ்வொரு குடிக்கும் வலுவளிக்க வேண்டிய முறையில் சட்டவாக்கங்களையும் நிர்வாகத்தையும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் சட்ட அமுலாக்கத்தையும் செய்யாது,  நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் ஆட்சி அதிகாரத்தைக் குறைத்து பிரதமருடன் பகிர்வதிலேயே சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் கொண்டுவரவிருக்கும் 21வது அரசியல் திருத்தத்தில் ஐனாதிபதிக்கே தொடர்ந்தம் தாம் விரும்பியவாறு அமைச்சுக்களைத் தனதாக வைத்திருக்கும் அதிகாரத்தை வழங்கிய நிலையிலேயே மாற்றம் செய்யப்பட இருப்பதால் இந்த 21வது அரசியல் திருத்தம் என்பதும் நடைமுறையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தில் பெரிய மாற்றம் எதையும் செய்யாது,  மக்களின் போராட்ட உணர்வினைத் திசைமாற்றும்  முயற்சியே என அரசியல் எதிர்வு கூறுபவர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் சீனபாணியில் ஒரேநாடு என்னும் கொள்கையையே தமது நாடு தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 50வது கூட்டத் தொடரின் பொது அமர்வில் உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரிவு 2இல் குறிப்பிடப்பட்டுள்ள  நாட்டின் இறையாண்மையை மதித்து தலையிடாமையை கைக்கொள்ளல் என்பதை ஐக்கியநாடுகள் சபை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் சிறிலங்காவின் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட நாட்டின்  சம்மதம் மற்றும் ஒத்துழைப்போடு ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றத்துக்குப் பயன் அளிக்கும் எனவும் கூறியுள்ளனர். கூடவே எமது தேசிய முன்னுரிமைகளுக்கு இணங்க பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ந்து இணைந்து செயற்படத் தயாராக சிறிலங்கா இருப்பதாக சிறிலங்காவின் பிரதிநிதி கூறியுள்ளமை, பொருளாதார நெருக்கடி நேரத்திலும் சிறிலங்கா மனித உரிமைகளை வன்முறைப்படுத்தி ஈழத்தமிழின அழிப்பினை அதன் தலைமை அரசியற் கோட்பாடாகவே தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

பௌத்தத்தை சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தங்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் சிங்கள பௌத்த அரசியலை வன்மையாகக் கண்டிக்கும்,  பௌத்த கற்கைகளுக்கான வல்பொல ராகுல நிறுவனத்தின் நிறுவனர் கல்கண்டே தம்மானந்த தேரர், 30 வருட இனமோதலுக்கு யாரும் மன்னிப்புக் கேட்காத நிலையில் நீதியில்லாது முன்னேற முடியாது எனவும் எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் ராசபக்ச குடும்பத்தைப் போன்றே மன்னிப்பு கேட்காத நிலையிலேயே “பொருளாதார நெருக்கடியில் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணலாம்” எனச் செவ்வி அளித்தமை பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணமே சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில்லாத நிலையும்,  எல்லாவித அரச வலுவூட்டல்களையும் சிங்கள பௌத்தர்களுக்கே அளித்துத், தமிழர்களைச் அரசியல் பங்களிப்பு விலக்குச் செய்த சிங்கள அரசாங்கங்களே என்பதை மறைக்கும் நரித்தந்திர அழைப்பாகவே உள்ளது.
சுருக்கமாகச் சொன்னால் இந்தியப் பொருளாதார உதவிகளுடன் சீனபாணியிலான ஒரே நாடு என்னும் அரசியல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதே பிரதமர் ரணில் உட்பட்ட ராசபக்ச குடும்ப ஆட்சியின் நோக்காகவும் போக்காகவும் தொடரும் என்பது உறுதியாகிறது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தானும் சிறிலங்கா ஜனாதிபதியும் இணைந்து முன்னெடுக்க முனையும்  தேசிய முன்னுரிமைகள்  எவை என்பதனைத் தெளிவுபடுத்தல் இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.

அவ்வாறே தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் சம்பந்தர் அவர்கள் இதுதான் ஈழத்தமிழர்கள் தங்களின் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்கள் மண்ணின் இறைமையைப் பேணும் மக்களின் பாதுகாப்பான அமைதி வளர்ச்சிகளுக்குரிய தீர்வாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதை ஈழத்தமிழர்களின் உயிர்த்தியாகங்களின் நோக்குகளுக்கு மாறில்லாதவகையில் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த தேசியக் கொள்கைகளை இருவரும் தங்களின் இனத் தனித்துவங்களின் அடிப்படையில் எந்த அளவுக்குத் தெளிவாக்குகின்றார்களோ அதன் அடிப்படையில் தான் இந்தியாவும் உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கானதும் முஸ்லீம் மலையகக் குடிமக்களது அரசியல் உரிமைகளுக்கானதுமான அரசியல் தீர்வொன்றை உதவிகளுக்கான முன்நிபந்தனையாக வைத்து இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்பதே இலக்கின் எண்ணம்.

Exit mobile version