பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை | இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 185 ஆசிரியர் தலையங்கம்

பொருளாதார நெருக்கடியின் போர்வையில் மறக்கப்படும் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்று உலகளாவிய நிலையில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் சிங்கள அரசாங்கங்கள் பிரித்தானிய காலனித்துவம் திணித்த பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியில் மதவெறி, இனவெறி, மொழிவெறி, கொடுங்கோன்மைப் பாராளுமன்ற ஆட்சிமுறையைத் தொடர்வதே என்ற முக்கிய காரணி குறித்து யாருமே பெரிதாகப் பேசுவதாகத் தெரியவில்லை.

அபே ரட்ட (எங்களின் நாடு), அபே ஜாதிய (எங்களின் சிங்கள ஜாதி), அபே ஆகமய (எங்களின் பௌத்த மதம்) இதுதான் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்களின் மாற்றமுடியாத தாரக மந்திரமாக, யூன் 5ம் திகதி 1956இல் சிங்கள மட்டும் சட்டத்தை சிங்கள அரசாங்கம் தோற்றுவித்தது முதல் இன்று வரையான 66 ஆண்டுகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவே இலங்கையின் குடிகள் இலங்கையின் பொருளாதாரத்தை ஒன்றிணைந்த முறையில் வளர்ப்பதற்கான 66 ஆண்டுகாலத் தடையாகி இன்றைய நெருக்கடி தோன்றக் காரணமாகியது.

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் பெரு வளர்ச்சி பெற்று வரும் இன்றைய ஆட்சியாளர்களின் ஓரு நாடு ஒரு இனம் என்னும் சிங்கள பௌத்த பேரினவாதக் கோரிக்கை ஈழத்தமிழர்களின் தேசியப்பிரச்சினை என்பதையே மறந்துவிட்ட ஒன்றாக்குகிறது.  சீனாவின் ஒருகட்சி ஆட்சிமுறை போன்ற ஆட்சியினை தோற்றுவிக்கும் புதிய அரசியலமைப்பு பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் வேகமாக வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

அதே வேளை ஈழத்தமிழர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பொழுது அமைதிப் பேச்சுக்களுக்கு வழிப்படுத்துபவராகத் திகழ்ந்த நோர்வேயின் அரசியல் தலைவர்களில் ஒருவரான எரிக் சொல்கைம் அவர்கள், திருகோணமலையில் உள்ள மூலோபாய கற்கை நிலையத்திற்கு அளித்த பேட்டியில், இக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கான பின்வரும் நான்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 01. அமைதியான வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். 02. அர்த்தபூர்வமான மாற்றங்களுக்காகப் பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்குங்கள். 03. பொருளாதார இனப் பிரச்சினைகளுக்கு கூட்டுத் தீர்வு      04. இதனைக் காண்பதற்கு முற்போக்கான சிங்களவர்கள் முஸ்லீம்களுக்கு நேசக்கரம்.

ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையை நன்கறிந்த திரு. எரிக் கொல்கைம் அவர்களின் இந்த ஆலோசனைகள் அனைத்துலக மட்டத்தில் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக வலியுறுத்தப்பட்டு வரும் வழிகாட்டல்களின் தொகுப்பாகவே உள்ளது. இது ஈழத்தமிழர்களின் தேசியப்பிரச்சினை இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் மறக்கப்பட்டவொன்றாக உள்ளதன் சமகால வெளிப்பாடாகவும் உள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினை அவர்களின் மண் சார்ந்தது, அவர்களின் இறைமை சார்ந்தது என்பதைத் தெளிவாகத் தெரிந்த திரு. எரிக் சொல்கைம் அவர்களே அதனை மறந்து இலங்கை அரசில் வாழும் ஒரு சிறுபான்மை தமிழர்களின் பிரச்சினையாக அந்தப்பாணியில் தீர்வுக்கு ஆலோசனை கூறுவது வேதனையானது.

மேலும் எரிக் சொல்கைம் அவர்கள், பல தசாப்த கால நெருக்கடிக்குப் பின்னரும் சிங்கள பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும்  கொள்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் முஸ்லீம்களுக்கான தன்னாட்சி என்ற விடயத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை எனப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். அனைத்து மக்களுக்கும் ஏற்ற விதத்தில் இந்த விடயத்திற்கு தீர்வைக் காண வேண்டுமென இலங்கை பிடிவாதம் பிடிப்பது  தீர்வு காலதாமதமாவதற்கான காரணம் என்பதையும் தனது செவ்வியில் தெளிவாக்கியுள்ளார். சிறிலங்காவின் இந்தப் பிடிவாதத்திற்குக் காரணம் ஈழத்தமிழர்களின் இறைமையையும், தேசஇனத்தன்மையையும் சிறிலங்கா கவனத்தில் எடுப்பதற்கு மறுப்பதேயாகும். இதனை உலகெங்கும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் எரிக் சொல்கைம் அவர்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவர்களாக உள்ளனர்.

சிங்கப்பூரின் லீகுவான்யூ அல்லது இந்தியாவின் நரேந்திரமோடி போன்றவர்கள் வழங்கிய தொலை நோக்குடன் கூடிய தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய  தலைவர்கள் இலங்கைக்குக் கிடைக்கவில்லை என்னும் எரிக் சொல்கைம் அவர்களின் கூற்று, இந்தியாவுக்கு மேற்குலக நாடுகள் அளிக்கும் இன்றைய முக்கியத்துவத்தின் வெளிப்பாடு எனலாம். ஈழத்தமிழர்களைப் பொறுத்த அனைத்துலகக் கருத்துருவாக்கத்தில் இந்தியா வகிக்கும் இடம் தெளிவாக உணரப்படக் கூடியதாக உள்ளது. ஈழத்தமிழர்கள்  இந்தியாவுடனான உரையாடல் ஒன்றைத் தொடங்கிட வேண்டியதன் அனைத்துலக முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.

இலங்கையின் உறுதியான பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் நன்மையளிக்கும் என்னும் கூற்று அரசியல் தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்காது, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து இலங்கை பொருளாதார நெருக்கடியையும் இனப்பிரச்சினை தீர்வுகளையும் செய்யலாம் என்னும் தவறான வழிகாட்டலாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியை தமிழர்கள் அனுபவிப்பதற்குரிய அரசியல் கலாச்சாரம் இலங்கையில் இல்லை என்பதால்தான் எரிக் சொல்கைம் அவர்களின் பேச்சுவார்த்தை முயற்சியின் போது தமிழர் தேசியத்தினர், இடைக்கால நிர்வாகம் ஒன்றை அனுமதிக்குமாறும் அந்த அடிப்படையிலேயே அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பலாம் எனக் கேட்டனர். இன்றும் வடக்கு கிழக்குக்கான இடைக்கால நிர்வாகம் அனுமதிக்கப்படுவதே இன்றைய பிரச்சினைகளுக்கான உண்மைத் தீர்வுக்கான முதற்படியாக அமையும்.

தற்போதைய பொருளாதாரத்தை புரிந்து கொள்ளக் கூடிய – பேச்சுவார்த்தைகளில் சிறப்பாக ஈடுபடக்கூடிய    ரணில் விக்கிரமசிங்கவை விட வேறு ஒரு இலங்கைத் தலைவரை நினைத்துப்பார்ப்பது கடினம். ரணில் சிறந்த பண்பார்ந்த மனிதர். ஆனால் அவர் ராஜபக்சாக்களை வீழ்த்தியவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனவும் எரிக் சொல்கைம் ரணிலைப் பாராட்டுவது, மேற்குலகின் மேலாண்மை இன்றைய சூழலில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் வகிக்கும் முக்கிய வகிபாகத்தைத் தெளிவாக்குகிறது. இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்கள் செயற்பட எரிக் சொல்கைம் சொல்கிற மாற்றங்களுக்கான பொது முன்னணியைத் தமிழர்கள் உருவாக்குவதும், அமைதி வழியில் போராட்டங்களைத் தொடர்வதும், முற்போக்கு சிங்கள முஸ்லீம் மக்களுடன் நேசக்கரம் நீட்டுவதும் கூட்டுத் தீர்வுகள் வழி இன்றைய சூழ்நிலையை எதிர் கொள்ள உதவும் என்பது இலக்கின் எண்ணமாகவும் உள்ளது.

Tamil News