ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை எந்தச்சூழ்நிலையிலும் ஒத்திவைக்கப்பட முடியாத பிரச்சினை | இலக்கு மின்னிதழ் 180 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 180 ஆசிரியர் தலையங்கம்

ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை எந்தச்சூழ்நிலையிலும் ஒத்திவைக்கப்பட முடியாத பிரச்சினை

சிறிலங்காவின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தேசிய அரசாங்கம் ஒன்றின் தேவை குறித்துப் பலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய அரசாங்கம் என்றால் என்ன என்பது குறித்தும், அத்தகைய ஆட்சிமுறைமை இலங்கையின் அரசியல் பண்பாட்டுக்கு நடைமுறை சாத்தியமாகுமா? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது.

1931இல் 2ம் உலகப்பெரும்போர்க் காலத்தில் உலகளாவிய நிலையில் பொருளாதார மந்தநிலை வளர்ச்சியடைந்த வேளையில், பிரித்தானியாவின் ஆளுங்கட்சியாக அந்நேரத்தில் இருந்த தொழிற்கட்சியினர், வேலையில் இல்லாதவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நிதி உதவிகளில் வெட்டினை ஏற்படுத்திப் பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்ய முயன்றனர். இதற்குத் தொழிற்கட்சியின் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துத் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகிய பொழுது, பழமைவாதக்கட்சி மற்றும் தாராண்மைவாதக் கட்சியினர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆட்சிக்கு ஆதரவு தருமாறு அழைப்பு விடுக்து ‘தேசிய மீட்புக்கான அரசாங்கம்’ ஒன்றை நிறுவுமாறு, அந்நாளையப் பிரித்தானியப் பிரதமர் ராம்சே மக்னலோட்டை தாராண்மைவாதக் கட்சியின் தலைவர் கேர்பட் சாமுவேல் கோரியதன் பேரில் 24.08.1931இல் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

இந்தத் தேசிய அரசாங்கம் வரிகளை உயர்த்தி ஊதியங்கள் மற்றும் மக்கள் நல நிதி உதவிகளைக் குறைத்து, சுதந்திர வர்த்தகத்தையும், அதுவரை வழக்கில் இருந்த திறைசேரியில் இருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதியளவுக்கு பணத்தாள்களை அச்சிடும் முறைமையையும் கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. அதாவது மக்களின் வரிகளை உயர்த்தல், ஊதியங்கள் மக்கள் நலன்களைக் குறைத்தல் போன்ற செயற்பாடுகள் வழியாக அரசாங்கத்தின் பொருளாதாரத்தைப் பேணுதல் என்பது ஒரு தேசிய அரசாங்கத்தின் தலையாய நோக்காக அமையும். இந்தப் பொறிமுறையின் வெற்றிக்கு சட்டத்தின் ஆட்சி அனைவரதும் மக்களாட்சிக்கான சுதந்திரமான பங்களிப்புக்கள் என்பன முன்நிபந்தனைகளாக அமையும். கூடவே புதிய அரசியல் முறைமை ஒன்றின் உலகளாவிய பரவலுக்கும் ஏற்புடைமைக்கும் இந்த முறைமை வழிவகுக்கும் என்பதும் இந்தப் பொறிமுறையின் செயற்படுத்தலின் பக்கவிளைவாக அமையும்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி என்பதே முதன்மைப் பிரச்சினை. அனைத்து மக்களின் சுதந்திரமான மக்களாட்சிக்கான பங்களிப்பு என்பது இலங்கையில் மக்களாட்சி முறைமையின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை மறுக்கப்பட்டு, சிங்கள பௌத்த நாடாகவே இலங்கையின் அனைத்து சமூக பொருளாதார அரசியல் ஆன்மிகச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதே பிரித்தானியக் காலனித்துவத்தின் அரசியல் தவறினால் ஈழத்தமிழ் மக்களின் விருப்புப்பெறப்படாத முறையில் தமிழர்களின் இறைமையைத் தன்னுள் உள்ளடக்கிக் கொண்ட சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களின் தொடர் அரசியலாக உள்ளது. அதிலும் 1948இல் இலங்கைத் தீவுக்குப் பிரித்தானியக் காலனித்துவம் சுதந்திரம் வழங்கியகாலம் முதலாக 74 ஆண்டு காலமாக இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்னும் முத்திறப்பட்ட இனஅழிப்புக்களையே சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் விருப்பைப் பாராளுமன்ற முறைமைக்கு ஊடாக நிலைப்படுத்தல் என்கிற அரசியல் கொள்கையாகவும் கோட்பாடாகவும் தனது படைபல மேலாண்மையுடன் கூடிய நிர்வாகத்தின் வழியாக இலங்கைத் தீவின் மக்களாட்சியாக எல்லாச் சிங்கள அரசாங்கங்களும் முன்னெடுத்து வந்துள்ளன என்பது இலங்கையின் அரசியல் வரலாறு.

அதிலும் 22.05.1972இல் பிரித்தானிய காலனித்துவ அரசு எந்த சோல்பரி அரசியலமைப்பின் வழி இலங்கை அரசாங்கத்தின் இறைமையை பிரித்தானிய அரசுடன் பகிர்வு செய்து இலங்கையின் மத சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தினால் பிரித்தானிய பிரிவிக்கவுன்சிலின் தீர்ப்பே அதிஉயர் உச்ச இறைமை கொண்டதாக அமைத்ததோ அந்த சோல்பரி அரசியலமைப்பை சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான கூட்டரசாங்கம் வன்முறைப்படுத்தி ஈழத்தமிழர்களை நாடற்ற தேசஇனமாக்கியதை அடுத்து, இன்றுவரை ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தங்களது பிரிக்கப்பட இயலாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உருவாக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

1978 முதல் 2009 வரை ஈழத்தமிழ் மக்களின் நடைமுறை அரசாகச் சீருடை அணிந்த முப்படைகளுடனும், நிதி நீதி நிர்வாக கட்டமைப்புக்களுடனும் செயற்பட்ட தமிழீழ ஆட்சியினை, சிறிலங்கா இனஅழிப்பின் மூலம் 176000க்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த வரலாற்றின் வழி மீண்டும் ஆக்கிரமித்தமை சமகால வரலாறு. இந்த அனைத்துலக சட்டங்களையும், ஒழுங்குகளையும், முறைமைகளையும் வெளிப்படையாக எந்தவித அச்சமுமின்றி மீறிய சிங்களத் தலைமைகளே 2009 முதல் இன்றுவரை பதின்மூன்று ஆண்டுகள் தொடர்ந்தும் அதே முத்தரப்பட்ட இனஅழிப்பு செயற்பாடுகள் மூலம் ஈழத்தமிழர்களுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை நடைமுறை வாழ்வாக்கி, அவர்களின் அரசியல் பணிவை படைபல மேலாண்மை மூலம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் சிறிலங்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடியே இந்த சிறிலங்காவின் இனஅழிப்பு நோக்கிலான அரசியல் தலைமையான மகிந்தா முதல் கோட்டா வரையான ராசபக்ச குடும்ப ஆட்சியாளர்களின் இராணுவ மனோநிலையும் மக்களுக்கு இனவெறி மதவெறி உணர்வுகளை ஊட்டி மயக்கி இலங்கை அரசாங்கத்தின் நிதி வளங்கள் அத்தனையையும் தமது குடும்பங்களுக்கான நிதி வளங்களாக மாற்றிக்கொண்டதன் விளைவு என்பது உலகறிந்த உண்மை.  இந்தப் பொருளாதார நெருக்கடி சீராக வேண்டுமானால், இலங்கைத் தீவின் இறைமையுள்ள தேசஇனங்களான இலங்கைத் தமிழர்களும், சிங்களர்களும் தங்கள் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கி, அந்த அரசியலமைப்பின் வழி இலங்கைத்தீவின் குடிகளாக உள்ள இலங்கை முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் உடைய அரசியல் உரிமைகளை சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் சுதந்திரமாகவும் அவர்கள் வாழும் வகையில் முழுமை செய்தல் வேண்டும். இதுவே ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கான ஒரே தீர்வாக உள்ளது. இதனை மனதிருத்தி தமிழ்த் தலைமைகளும், இந்தியாவின் தலைமைகளும், அனைத்துல நாடுகளும் அமைப்புக்களும் இன்றைய இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடியை அணுக வைக்க வேண்டிய பெரும் பொறுப்பில் உலகெங்கும் புலம்பதிந்து வாழும் தமிழர்கள் உள்ளனர் என்பதை இலக்கு இடித்துரைக்கக் கடமைப்பட்டுள்ளது.

Tamil News