மக்கள் இறைமையை இழந்துள்ள அரசாங்கம் அனைத்துலக உதவிகளால் நிலைபெற முயற்சி | இலக்கு மின்னிதழ் 179 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 179 ஆசிரியர் தலையங்கம்

மக்கள் இறைமையை இழந்துள்ள அரசாங்கம் அனைத்துலக உதவிகளால் நிலைபெற முயற்சி

இலங்கைத் தீவில் இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் இறைமையை இழந்துள்ளமையை வெளிப்படுத்தும் வகையில் ‘கோட்டா ஊருக்குப் போ’ போராட்டங்கள் கடந்த சில வாரங்களாகத் தொடர்கின்றன. எந்தச் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தின் வாக்குகளால் இலங்கைத் தீவின் இறைமையாளர்களாக கோட்டா, மகிந்தா ராசபக்ச குடும்பத்தினர் வந்தார்களோ, அதே மக்கள் தொகுதியால் இன்று பதவி விலகும்படி பலமாக வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நேரத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இலங்கைத்தீவில் உள்ள ஈழத்தமிழர்களின் இறைமையை இல்லாதொழிப்பதற்கும், வரலாற்றின் பரிணாமத்தில் இலங்கைக் குடிகளாக வாழும் உரிமையுள்ள மக்களான இலங்கை முஸ்லீம்கள், மலையகத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதற்கும், முப்படைகளுக்குப் பெருந்திரளான தேசிய வருமானத்தைச் சிங்கள அரசுகள் செலவிட்டமையே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான மூல முதல் காரணம். அவ்வாறே மக்கள் நலனுக்கும் நாட்டின் வளர்ச்சிக்குமென வழங்கப்பட்ட அனைத்துலக நாடுகள் அமைப்புக்களின் நிதி உதவிகள் நிதிக்கடன்கள் கூட படையினர் சுகவாழ்வுக்கும், படைக்கலக் கொள்வனவுக்குமே செலவிடப்பட்டமையே இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான துணைக்காரணம்.

இந்த முதல் துணைக்காரணங்களில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில், சந்தை நல, இராணுவ நல நோக்குகளுடன், இந்தியா அதீத அக்கறையுடனும், அமெரிக்கா துரித ஈடுபாட்டுடனும், சீனா தனது இந்துமா கடல் மேலாண்மை நோக்கிலும் வழங்கும் நிதி உதவிகள், நிதிக்கடன்கள் அனைத்தையும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் இறைமையை இழந்துள்ள அரசாங்கம், தனது இறைமையை மக்கள் மேல் நிலைநிறுத்துவதற்கான வலுக்களாக மாற்றி ஆட்சியைத் தொடர்கிறது. இந்த அனைத்துலக உதவிகளின் பின்னணியில் அக்டோபர் மாதத்துள் படைபல அழுத்தங்கள் மூலம் தமக்கான முழு அளவிலான மேலாண்மையை நிறுவிக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் இன்றைய ஆட்சியாளர்கள் முழுஅளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விடத்தில் பௌத்த மகாசங்கங்கள் நான்கு இணைந்து, நாட்டின் அரசியல் அமுக்கக் குழுக்களாகத் தாங்கள் உள்ளமையை உறுதி செய்யும் வகையில் அரச தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான உடன் செயற்திட்டமொன்றை உருவாக்காவிட்டால், பௌத்த சங்கப் பிரகடனம் ஒன்றை வெளியிடுவோம் என அச்சுறுத்தல் வகையான கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது தற்போது நடைபெறும் சிங்கள மக்களின் அரசுக்கு எதிரான போராட்டம் பௌத்த சிங்கள நாடு என்ற அரசியல் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாதென்பதற்கான நேரடி அமுக்கச் செயலாகிறது. எனவே இந்தச் சிங்கள மக்களின் போராட்டமும் நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கான மூலகாரணமாகிய, இலங்கையின் தேச இனமாகிய ஈழத்தமிழர்கள், குடிமக்களாகிய முஸ்லீம், மலையக மக்கள் ஆகியோரது சுதந்திர சமத்துவ சகோதரத்துவ வாழ்வை உறுதிப்படுத்தலுக்கான எந்த அரசியலமைப்பு மாற்றத்தையும் ஏற்படுத்த பௌத்த பீடங்கள் அனுமதிக்காது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேவேளை பிரதமர் மகிந்தா, கோட்டாவே பொருளாதார நெருக்கடிக்கு முதல் காரணம் எனவும், பசில் உடைய அணுகுமுறைகள் துணைக்காரணம் எனவும் கருத்துப்பட சிறிலங்காப் பாராளுமன்றத்தின் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாயிலாக உலகுக்கு செய்தி வெளியிட்டுள்ளார். இது அனைத்துலக நாணய நிதியம் இலங்கையின் மூன்று வருடத்திற்கான பட்டயக் கணக்காளரால் பரிசோதிக்கப்பட்ட கணக்கறிக்கையை, உதவிகள் கடன்கள் குறித்து ஆராய்வதற்கான முன்நிபந்தனையாக அறிவித்துள்ள நிலையில், தனியொருவரின் நிர்வாகத் தவறு என்று, கணக்கில் காணப்படக் கூடிய ஒழுங்கீனங்களை நியாயப்படுத்துவதற்கான முதல் அடியாக அமைகிறது.

தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கு அதிக அளவில் முப்படைகளுக்கும் ஒதுக்கப்படும் நிதியத்திலும், முப்படைகளின் ஆட்தொகையிலும் குறைப்புக்கள் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை அனைத்துலக நாணய நிதியத்தால் வற்புறுத்தப் படுவதைத் தடுக்கும் முன் உத்தியாகவே றம்புக்கனை போராட்டக் காரர்களை நகர காவலர்கள் படுகொலை  செய்த நிகழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் இருந்த வாகனத்தை வெடிக்க வைத்து ஊரையே எரிக்க முயன்றமை இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கான காரணமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடவே பொதுமக்களின் ஆடையில் நகர காவலர்கள் இராணுவத்தினர்க்கான சீருடைகள் இன்றி நடத்தப்பட்ட இந்தப் படுகொலைகளை போராட்டக்கார்களிடையில் உள்ள முரண் அணிகளின் செயற்பாடு என்கிற கதையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

கூடவே திரிகோணமலையில் வீதித்தடைகள், வீதியில் எரியூட்டல்கள் நடத்தப்பட்ட சம்பவமானது, திரிகோணமலையை மையமாக வைத்து படைபலத்தின் தேவை நாட்டின் தேசிய பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் நிலைப்படுத்தத் தேவை என்னும் அனைத்துலகத்திற்கான நியாயப்படுத்தலுக்கான இன்றைய ஆட்சியாளர் களின் தொடக்க முயற்சிகளாக உள்ளன. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டக் காலத்தில் அதனை ஒடுக்கச் சிங்கள அரசுகள் கையாண்ட அத்தனை உத்திகளும் படிப்படியாகப் புத்துயிர் பெறுகின்றன. அதே வேளை எதிர்க்கட்சிகள் எரிகிற நெருப்பில் கொள்ளி பிடுங்கி வாழும் பாணியில் தாங்கள் ஆட்சி மாற்றத்தைத் தங்களுக்கான ஆட்சியேற்புக்கான ஒன்றாக மாற்றக் கூடிய வகையிலேயே சமகால நிகழ்வுகள் குறித்த தங்களின் அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர். முஸ்லீம் தலைமைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்நிலையில், சிறிலங்கா அரசியலில் ஈழத்தமிழர்கள், மலையக மக்கள், முஸ்லீம் மக்கள் அவரவர்களின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிகத் தனித்துவங்களை இழக்காத நிலையில், தங்களுடைய உயிர் வாழ்தலுக்கும், உடைமைகளைப் பேணுதலுக்கும், நாளாந்த வாழ்வின் தொழில் முயற்சிகளை உறுதிப்படுத்து வதற்குமான ஒரு சனநாயக குடைநிழல் அமைப்பில் இணைய வேண்டும். அதில் இதுவரை அரசியலில் தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாத தங்களிடையுள்ள புத்திஜீவிகள், சமூக மூலதன முதலீட்டில் அக்கறையுள்ளவர்கள், சமயத்தில் சமூகத்தில் தங்கள் தன்னலமில்லாத சேவைகளால் மதிக்கப்படுபவர்கள், ஆற்றல்கள் கொண்ட இளையவர்கள், விழிப்புணர்வுள்ள மாணவர்கள், உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்கள் ஆகியோர்க்கு முடிவெடுக்கும் உறுப்புரிமை அளிக்கப் பட்டாலே,  எல்லா வழிகளிலும் படைபல சர்வாதிகாரத் தன்மையுடைய இன்றைய ஆட்சியில் இருந்து விடுபட இயலும் என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News