Home ஆசிரியர் தலையங்கம் இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 178 ஆசிரியர் தலையங்கம்

பழைய அரசியல்வாதிகள் அனைவரும்  பதவி விலக்கப்பட்டாலே தீர்வு வரும்

காலிமுகத்திடல் இலங்கையர் போராட்டம் அன்றாட வாழ்வுக்கான உணவு மருந்து எரிபொருட்கள் போன்றன இன்மையின் காரணமாக எழுந்துள்ள மனிதாயப் போராட்டம். இதனால் இந்த இன்மைகளுக்கு மூலகாரணமாக நாட்டின் பொருள் வளத்தைக் கொள்ளையடித்து டொலர் பில்லியன்களாக இலங்கைக்கு வெளியே முதலீடுகள் செய்து வாழும் ராசபக்ச குடும்பத்தினரின் பாதுகாவலர்களாக விளங்கும் இன்றைய சிறிலங்காவின் அரச அதிபர் கோட்டா வீட்டை போ என்னும் மக்கள் குரல் இலங்கை முதல் உலகின் நாடுகள் எங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

அவ்வாறே இன்றைய சிறிலங்காவின் பிரதமர் மகிந்தா உட்பட அனைத்து ராசபக்சாக்களும் அவர்களின் உறவினர்கள் நண்பர்களும் மக்கள் நிர்வாகிகளாக மாற்றப்பட்டுள்ள அவர்களின் கட்டளைகளைத் தலைமேற்கொண்டு செயற்படும் படைத்தலைமைகளும் பதவி விலக வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாகி யுள்ளது என்பதும் உலகிற்குத் தெளிவாக உணர்த்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் சிங்கள இளையவர்களின் எழுச்சிப் போராட்டமாக மாறியுள்ள இந்த போராட்டத்தில் அனைத்து நடுத்தர வர்க்க மக்களும், உழைக்கும் மக்களும் வயது வேறுபாடின்றி பங்கேற்று காலிமுகத்திடலே, இன்று கோட்டாவை போகவைக்கும் கிராமம் என்னும் பொருளுடைய ‘கோட்டாகோகம’ என்னும் கிராமமாகப் போராட்ட உணர்வுள்ள மக்களால் மாற்றப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் அனைத்தும் மகிந்த குடும்பத்தினரின் புகைப்படங்கள் ஓட்டப்பட்டு மக்கள் அரசத் தலைவரையும், பிரதமரையும், அமைச்சர்களையும் குப்பைத் தொட்டிகளாகக் கருதுகின்றார்கள். அவர்களுக்கான அரசியல் பணிவைக் கொடுக்க மறுத்து வருகிறார்கள் என்கிற செய்தியை உலகிற்கு அளித்துள்ளது.

2022ம் ஆண்டுத் தமிழ் சிங்கள சித்திரைப் புதுவருடப்பிறப்பு இந்தக் கோட்டாகோகம கிராமத்திலேயே பால் பொங்கி ஆண்டுப்பிறப்பு கொண்டாடப்பட்டமை, கோட்டாவும் அவரது ராசபக்ச குடும்ப ஆட்சியும் நீங்கும் வரை காலிமுகத்திடலில் மக்கள் வாழ்ந்து போராடும் கிராமமாக அது விளங்கும் என்பதையும், இந்த மக்கள் போராட்டத்தை சிறிலங்கா அரசு படைபலம் கொண்டு நசுக்கினாலும் கூட, குறுகிய காலத்தில் முடித்து வைக்க முடியாது என்கிற உண்மையையும் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் தாங்கள் சிறிலங்காப் பிரதமர் மகிந்தாவின் பேச்சுவார்த்தை அழைப்பை மறுத்து, தங்களுடன் பேசுவதானால் இறங்கி கோட்டாகோகம கிராமத்திற்கு வந்து பேசுமாறு, அங்கு ஒரு நாற்காலியைப் போட்டு சிறு கூடாரத்தையும் போராடுபவர்கள் அமைத்துள்ளனர்.

“எங்களுக்கு நஞ்சு குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னுடைய பிள்ளைக்கு வாழ்வதற்கு நாடு இல்லாமல், பொருளாதாரத்தில் உடைந்து கொண்டு அதன் விளிம்பு நிலைக்குப் போய்விட்டது. எங்கள் வாழ்வே முடிந்து விட்டது. கோட்டாவிற்கு வாக்களித்த பொழுது அவரை எங்கள் சிங்கமாகக் கருதினேன். அவர் சிங்கமல்ல நாய்.” என்ற சந்த உப்புல் என்னும் ரிக்சா தொழிலாளியின் கருத்து பிரித்தானியக் கார்டியன் 09.04. 22 நாளிதழில் வெளியாகி, சிங்களவர்கள் 2020இல் தங்களின் சிங்கமாக ஆட்சியில் அமர்த்திய கோட்டாவை நாயாக அடித்து விரட்டத் துடிக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியது. 14.04.22 இல் பிரித்தானிய கார்டியன் நாளிதழில் வெளிவந்த கட்டுரை கோட்டாவை ‘டேர்மினேட்டர்’ எனப் போற்றிய சிங்களவர்கள் இன்று ‘கிரிமினல்’, ‘துரோகி’, ‘திருடன்’, ‘பைத்தியக்காரன்’, என அடைமொழி கொடுத்தே பேசுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளது. ‘வெள்ளை வாகன’ அரசியலின் தலைவன் கோட்டா என்பதையும் கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இன்றும் கோட்டாவின் ஆணையில் தமிழ்ப் பகுதிகளில் ஈழத்தமிழர்கள் சிறிலங்காப் படைகளால் சித்திரவதைக்குள்ளாகி வருவதையும் விஜே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் குறித்த வேறு ஒரு கட்டுரையை வெளியிட்டு கார்டியன் பத்திரிகை கோட்டாவின் கொலைவெறி அரசியலை உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. ராசபக்சாவின் குடும்பத்தவர்கள் தற்போது மக்களுக்கு அஞ்சி தாங்கள் கொள்ளையடித்த டாலர்களைக் காப்பாற்ற கட்டுநாயக்கா அனைத்துலக விமான நிலையத்தின் கண்காணிப்புக் கருவிகளை நிறுத்தி வைக்குமாறு மேலிடம் விடுத்த கட்டளையின் பின்னணியில் நாட்டை விட்டுத் தப்பியோடிக் கொண்டிருப்பதாக இந்தியாவின் ‘த இந்து தமிழ்’  நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. நாமல் ராசபக்சா கத்தார் நாட்டில் உள்ள ALBC  நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார் எனவும் இப்பொழுது இலங்கையின் டாலர்கள் எங்கே போயிருக்கும் என்பது தெளிவாகிறது எனவும் அக்கட்டுரை எடுத்து விளக்கியுள்ளது.

அதேவேளை நிருபமா ராசபக்சாவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் பிரித்தானியா, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் எட்டு நிறுவனங்களை நடத்தி 160 மில்லியன் அமெரிக்க டாலர்களை வங்கிக் கணக்காக வைத்திருப்பதை பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளிப்படுத்தியதால், குற்றவாளியாகச் சுட்டப்பட்டு தீர்ப்பளிக்கப்பட வேண்டிய நீதிமன்ற வழக்கு இருக்கும் நிலையிலும், அவர்களும் தப்பிச் சென்றுள்ளனர். மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கில் உள்ள  அரச தலைவரின் நெருங்கிய நண்பர் நிசங்க சேனாதிபதியும் தப்பிச் சென்றுள்ளார். இவற்றை எல்லாம். ‘த இந்து தமிழ்’ கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது. தற்பொழுது நாமல் ராபக்சாவை பிரதமராக்கித் தன் தம்பியைக் காத்ததுபோல தன் மகனையும் காக்க மகிந்தா முனைவதாகவும் செய்திகள் வருகின்றன. இவை எல்லாம் சிறிலங்கா அரச தலைவரும் பிரதமரும் உடனடியாகப் பதவி விலக்கப்படாவிட்டால், சட்டத்தின் ஆட்சி என்பது முற்று முழுதாகச் சிதைக்கப்பட்டு இராணுவ சர்வாதிகார ஆட்சி தோன்றும் என்கிற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையைத் தடுப்பதற்குரிய புதிய ஆட்சியில் சிங்களவர்களதும், தமிழர்களதும், முஸ்லீம், மலையக மக்களதும் பழைய அரசியல்வாதிகள் அனைவரும் வெளியே குப்பைத் தொட்டிகளில் தள்ளப்பட்டு, இலங்கையின் பல்லின பன்மொழி பலபண்பாண்டுத் தன்மைகளை மனதிருத்தும் இளையவர்களின் அரசியல் வரவாகவும், அந்த இளையவர்கள் தமிழ் சிங்கள தேச இனங்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை ஏற்ற நிலையில், முஸ்லீம் மலையக மக்களின் அரசியல் உரிமைகளைச் சமத்துவத்துடன் வழங்கும் முறையிலான அரசியல் அமைப்புத் திட்டமொன்றை உருவாக்க உறுதியுள்ளவர்களாகவும் அமைந்தால்தான், இந்தப் போரட்டத்தின் எதிர்பார்ப்பான இலங்கை மக்கள் அனைவரதும் பொருளாதார வாழ்வியல் சீர்பெறும் என்பதே இலக்கின் எண்ணமாக உள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை இலங்கைக்கு உதவும் நாடுகள் நிபந்தனையாக முன்வைத்தாலே இது நடைமுறைச் சாத்தியமாகும்.

Exit mobile version