இலக்கு மின்னிதழ் 173 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 173 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 173 ஆசிரியர் தலையங்கம்

இராணுவ ஆட்சிக்கான புதிய அரசியலமைப்பும் அனைத்துலக நாடுகள் அமைப்புகளின் மௌனமும்

சிறிலங்கா ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் ஆட்சிக் கொள்கையினைக் கொண்ட புதிய அரசியலமைப்பை, சட்டவாக்கம் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் நிறைவு செய்து வருகிறது. இந்தப் புதிய அரசியலமைப்பு, நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் நிறைவேற்றும் சட்ட அமுலாக்க வலுவாண்மையை தனது படையினருக்கு வழங்குகிறது. இதனால் 1979இல் சிறிலங்கா பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் சந்தேகத்துக்கு உரியவர்களைக் கண்ட இடத்தில் சுடவும், சுட்ட இடத்தில் விசாரணையின்றி அவர்களின் உடலங்களை எரிக்கவும் தனது ஆயுதப் படைகளுக்கு வழங்கிய கட்டற்ற அதிகாரம், தற்பொழுது ஒருவரைக் கைதாக்கிப் பதினெட்டு மாதத்துள் அல்ல பன்னிரெண்டு மாதத்துள் செய்யக் கூடிய அரசியலமைப்புச் சட்டச் செயலாகத் தரம் உயர்த்தப்படவுள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்பில் தேசிய பாதுகாப்புக்கும், ஓருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல்கள் வருகின்ற நேரத்திலும், மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளிலும் தவிர மற்றைய நாளாந்த வாழ்வில் மக்களின் சுதந்திரத்தில் இராணுவத் தலையீடு மக்களாட்சி நாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தன்னை மக்களாட்சி முறைமை கொண்ட நாடாக உலகிற்கு வெளிப்படுத்தி வரும் சிறிலங்கா, தனது இராணுவத்திற்கு மக்களின் நாளாந்த வாழ்வில் விருப்பப்படி தலையிடும் அதிகாரத்தை கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வந்து, தற்பொழுது முழுஅளவில் இராணுவ ஆட்சியொன்றை ஒரு நாடு ஒரு சட்டம் என்கிற அரசியல் கொள்கை உருவாக்கமாக அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தும் முயற்சியில் தனது இலக்கை நெருங்கி வருகிறது.

தன்னுடைய ஆட்சியை தனக்கிருக்கும் பலமான அரசு என்னும் பாராளுமன்றப் பலம் கொண்டு கோட்டபாய ராசபக்சாவால் வேண்டிய காலத்துக்குத் தொடர முடியும். அந்த அளவுக்கு அவரது அரசாங்கம் பலமான அரசாங்கம். அப்படியாயின் இந்தப்புதிய அரசியலமைப்பின் நோக்கு என்ன எனச் சிந்திக்கையில்தான் ஈழத்தமிழர்களுடைய வெளியக தன்னாட்சி உரிமையினை அனைத்துலக சட்டவலுவில்லாது செய்தல் என்பதே இதன் நோக்கு என்பது தெளிவாகும். இதற்கு ஈழத்தமிழர் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் அவசியம்.

22.05.1972இல் சிங்கள பௌத்த சிறிலங்காக் குடியரசை சிறிமாவோ ஈழத் தமிழர்களின் குடியொப்பம் பெறப்படாது தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தினார். இதனால் அதுவரை சோல்பரி அரசியலமைப்பின் வழி மாட்சிமை தங்கிய மகாராணி 2வது எலிசபேத் அவர்களின் முடிக்குரிய பிரித்தானிய அரசிடம் தொடர்ந்து இருந்த வந்த இலங்கைத் தமிழர்களின் இறைமை, அந்தச் சோல்பரி அரசியல் அமைப்பைச் சிறிமாவோ வன்முறைப்படுத்தியதால்,  இலங்கைத் தமிழர்கள் இடம் இயல்பாகவே மீண்டது. இதனால் நாடற்ற தேச இனம் என்கிற அரசியல் வரைவிலக்கணத்துள் தங்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அடைவதற்கான விடுதலைப் போராட்ட மக்கள் இனமாக, ஈழத்தமிழர்கள் எனவும் ஈழத்தமிழர் தாயகம் இலங்கையின் வடக்குக் கிழக்கு எனவும் வரலாற்றுப் பரிணாமத்தை ஈழத்தமிழர்கள் பெற்றனர்.

பின்னர் 1978ம் ஆண்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள அரச அதிபர் ஆட்சி முறையை அரசியலமைப்புத் திருத்தத்தின் வழி நீலன் திருச்செல்வம், ஜெயரெட்ணம் வில்சன் போன்ற இலங்கைத் தமிழர்களாகப் பிறந்த சட்ட வல்லுனர்களின் மூளைப்பலம் கொண்டே ஜே. ஆர் ஜயவர்த்தனா உருவாக்கினார். அதனைச் சிங்கள சட்ட வல்லுநரான எல்.ஜே. எம் குரேயின் தலைமையில் வெளிப்படுத்தினார். இதனை உலக நாடுகளுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் எல்லா மக்களுக்குமான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கி மக்களாட்சியைத் தான் சிறப்பிப் பதாகவே அவர் அறிவித்தார்.

அத்துடன் பொருளாதார முடிவுகளை எடுப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுள்ள அரச அதிபர் முறை வேகமளிக்கும் என  உலக முதலாளித்துவ நாடுகளை மகிழச் செய்து, அவர்களின் ஆதரவுடன்  நடைமுறையில் சிங்கள பௌத்த மேலாண்மையை அகலப்படுத்தி, ஈழத்தமிழின அழிப்பு அரசியலை ஆழப்படுத்தினார். இதுவே 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின் நடைமுறைப் பயன்பாடாகியது.  ஆயினும் அதே 1978 முதல் 2009 வரை ஈழத்தமிழ் மக்கள், தமிழீழ மக்களாகத் தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் தம்மை வெளிப்படுத்தி தங்களுக்கான அரசு நோக்கிய அரசை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமது வரலாற்றுத் தாயகத்தில் நடைமுறைப்படுத்தியமை உலக வரலாறாக உள்ளது.

இது ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி வெளிப்பட்டு விட்டமைக்கான வரலாற்றுச் சான்றாகியது.  இந்தத் தமிழர்களின் நடைமுறை அரசை இனஅழிப்பின் மூலம் சீர்குலைத்து, மகிந்த கோட்டபாய சகோதரர்கள்,  ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமை ஏற்பின் காலத்தைப் பின்னடைய வைத்துள்ளனர். ஆயினும் அவர்களாலோ வேறு யாராலோ ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமைக் கோரிக்கையை இனி அழிக்க முடியாத அளவுக்கு ஈழத்தமிழினம் இன்று உலகத் தமிழினமாகி, ஈழமக்களின் உண்மைகளின் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர் தாயகத்தில் இராணுவ ஆட்சியைக் கொண்டு வந்து, அதனை பெரும்பான்மை மக்களின் அரசின் உறுதிப்பாட்டுக்கான செயற்பாடு எனக்காட்டி,  ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமைக்கு அடிப்படையாக உள்ள நாடற்ற தேசஇனம் அவர்கள் என்னும் நிலையை மாற்றும் அரசியல் சதிச் செயலில் கோட்டபாய இறங்கியுள்ளார். ஈழத்தமிழர்களின் இறைமையை நிலை நிறுத்தும் அவர்களின் பிறப்புரிமையின் அடிப்படையிலான அரசியல் முயற்சிகளை வெறுமனே குடிவரவு பெற்ற மக்கள் கூட்டமொன்றின் வாழ்வியல் தேவைகளின் வெளிப்பாடு எனக் காட்டி,  அதனைத் தனது ஆட்சியிலும்,  அரசியல் அதிகார பகிர்வுகள் இல்லாத ஈழத்தமிழின அழிப்புக்கான தண்டனை நீதியோ பரிகார நீதியோ இல்லாத உள்ளகப் பொறிமுறைகளால் தீர்க்க முடியும் என உலகுக்குக் காட்டுவதே இந்தப் புதிய அரசியலமைப்பின் தலையாய நோக்கு.

இதனை உலகநாடுகளுக்கும் அமைப்புக்களுக்குத் சான்றாதரங்களுடன் தெளிவு படுத்தி சிறிலங்கா இராணுவ ஆட்சிக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதைப் பார்த்து மௌனமாக இருந்து மீளவும் மற்றொரு ஈழத்தமிழின இனஅழிப்பைச் சிறிலங்கா செய்ய அனுமதிக்கும் உலக நிலையை முற்கூட்டியே தடுத்து நிறுத்தல், உலகத்தமிழினமாக உள்ள புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களின் தலையாய கடமை, என்பது இலக்கின் எண்ணம்.

Tamil News