இலக்கு மின்னிதழ் 172 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 172 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 172 ஆசிரியர் தலையங்கம்

ஈழத்தமிழின அழிப்புக்கான தண்டனை நீதியும் பரிகார நீதியுமே அமைதி தரும்

சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் நல்லிணக்க முயற்சிகள் குறித்த எழுத்து மூல அறிக்கை 04.03.2022 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2020 இல் சிறிலங்காவில் யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமைகள் வன்முறைப்படுத்தல்கள் என்பனவற்றில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்ற தனியாட்களை, அனைத்துலக நீதி விசாரணை ஆணையின் வழி விசாரிப்பதற்கான, முதல்நிலைக் குற்றப் பத்திரிகையைத் தயார்  செய்வதற்கான, சான்றாதாரங்களை ஆவணப்படுத்த தனி அலுவலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் கட்டமைக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் இவற்றின் முன்னேற்றம் குறித்த வாய்மொழி அறிக்கையை 2021 இலும், எழுத்து மூல அறிக்கையை 2022இலும் அனைத்துலக மனித உரிமைகள் பேரவைக்குச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு மனித உரிமைகள் ஆணையாளரின், சிறிலங்கா குறித்த அறிக்கை ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கும் தண்டனை நீதி, பரிகாரநீதி நோக்கிய முயற்சிகளுக்கான முக்கியமான அறிக்கையாக அமையுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும் எதிர்பார்த்தவாறு சிறிலங்காவில் நடைபெற்ற  அனைத்துலகக் குற்றச் செயல்களுக்குத் தண்டனை நீதி வழங்குவதற்கான முதல்நிலைக் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கான வளர்ச்சியாக இது  அமையவில்லை. அனைத்துலக நீதி விசாரணை ஆணை வழி அனைத்துலக விசாரணை ஒரு சிலருக்கு என்ற பேச்சும் கூட இல்லாது, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளின் அழுத்தங்களால் முன்னையது போலல்லாது சிறிலங்காவையே அனைத்தையும் உள்ளக பொறி முறைக்குள் செய்வதற்கு அனுமதிக்கும் மென்மைப்படுத்தப்பட்ட உரையாடலாக இவ் அறிக்கை தாக்கலாகியுள்ளது. அது மட்டுமல்ல, சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களின் மேலான இனஅழிப்பை நடத்திய உண்மை மறைக்கப்பட்டு, யுத்தக்குற்றத்தை அல்லது மனிதாயத்துக்கு எதிரான குற்றத்தை படையினரில் சிலர் செய்தனர் என்கிற பார்வை அகலமாக்கப்படுவதை அறிக்கை உணர்த்துகிறது.

அவர்கள் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறையுள் விசாரிக்கப்பட வேண்டும் என்னும் கருத்து மெதுவாக வளர்ச்சி பெறுகிறது. இதனால்தான் சிறிலங்காவில் பாதிப்புற்றவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, சிறிலங்கா அரசாங்கத்தினை ஒழுங்கான சட்ட ஆட்சியில் நீதியை வழங்குமாறு வழிகாட்டும் அறிக்கையாகவே இவ்அறிக்கை வெளிவந்துள்ளது. இதனால் இதனைச் சிறிலங்காவின் மனித உரிமை நலன்பேணு அறிக்கையாகவே கருத வேண்டியுள்ளதே தவிர, இது பாதிப்புற்ற ஈழத் தமிழர்களின் மனித உரிமை பேணலுக்கான வழியாக அமையவில்லை. எனவே தனிப்பட்ட முறையில் அல்லாது ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் பொதுவான கூட்டு முயற்சி ஒன்றின் மூலமே ஈழத்தமிழர்க்கான மனித உரிமைகளை அடையும் ஒன்றாக இதனை முன்னெடுக்க முடியும்.

மேலும் ஈழத்தமிழர்களை சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைக்குள் தீர்வுகாண வைக்கும் நோக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் போக்கு மாறிவிட்டது என்பதற்குச் சான்றாக 43 ஆண்டு காலமாக உலகச் சட்டத்துறைக்கே அவமானகரமான சிறிலங்காவின் பயங்கரவாதச் சட்டத்தில் சிறுசிறு மாற்றங்களை தனக்கு மேலும் சாதகமான நிலையை, உருவாக்கச் செய்ய முற்பட்ட சிறிலங்காவின் செயலை பயங்கரவாதச் சட்டத்தில் முன்னேற்றகரமான திருத்தங்களைச் செய்வது போல் மனித உரிமைகள் ஆணையாளர் நம்பிக்கை தெரிவித்து வரவேற்றுப் பாராட்டியமை அமைகிறது. இவையெல்லாம் ஒருவகையில் சிறிலங்கா விரும்பியவாறு உள்ளகப் பொறிமுறை மூலம் இந்தப் பிரச்சினையை, சிறிலங்கா முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உத்தியாகவும் பார்க்கலாம்.

ஆயினும் கடந்த ஆண்டிலும் பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கப்படுத்தலையும் முன்னெடுப்பதற்கான ஆர்வமோ அக்கறையோ சிறிலங்காவுக்கு இருக்கவில்லை என்பதை இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது. அவ்வாறே காணாமலாக்கப்பட்டவர் களையும், அவர்களின் குடும்பங்களையும் ஏற்று அங்கீகரித்து, அவர்களின் நிலையினை அல்லது இருப்பிடத்தை அவசரமாக நிர்ணயம் செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பாதிப்புற்றவர்களுக்கோ, குடும்பங் களுக்கோ இழப்பீடுகளை வழங்க வேண்டுமெனவும் இவ்வறிக்கை வலியுறுத்தி யுள்ளது. முதலில் பரிகார நீதியை முன்னெடுக்கும் ஆர்வம் இல்லை சிறிலங்காவுக்கு என்னும் அறிக்கை எவ்வாறு சிறிலங்காவிடம் இருந்து உரிய  இழப்பீடுகளை பாதிப்புற்றோர் பெறலாம் என்பதற்கு தெளிவற்ற நிலையை உருவாக்குகிறது.

அரசின் சிவில் நிர்வாகத்தினைப் படை அதிகாரிகள் வழி நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்த ஆணையாளர். சில படையதிகாரிகள் அனைத்துலகக் குற்றச் செயல்களைச் செய்தவர்களாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களை சிறிலங்கா ஜனாதிபதி தண்டிக்க விருப்பற்றவராக, மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவராக உள்ளதையும் ஆணையாளர் எடுத்து விளக்கியுள்ளார். தண்டனை விலக்களிப்பு மூலம் சிறிலங்காப் படையினராக இருந்து நீதிமன்றங்களில் யுத்தக்குற்றச் செயல்களுக்காக தண்டனை பெற்றவர்களையும் சிறிலங்கா ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்தமையை கண்டிக்கும் ஆணையாளர், இந்த உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் ஜனாதிபதியின் செயலுக்கு எதிர்வினையாக எதனைச் செய்யவேண்டும் என்பதை விளக்கவில்லை.

இவைகளை எடுத்து நோக்குகையில், ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் இனஅழிப்பு நடைபெற்றது என்பதைத் தாங்களே ஆரம்பம் முதல் வலியுறுத்தத் தவறியதன் விளைவே இந்தக் குழப்ப நிலைகளுக்கு எல்லாம் காரணம் எனலாம். ஆணையாளர் பல தடவைகளில் ஈழத்தமிழர்கள் தங்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் செயற்படுவதை உலகு ஏற்கக் கூடிய வகையில் பல விடயங்களைக் கோடிட்டுக் காட்டினாலும், அவற்றை முன்னெடுத்து ஈழத் தமிழர்களுக்குச் சாதகமான அரசியற் செயற்திட்டத்தை ஏற்படுத்துவதில் ஈழத் தமிழர்களின் ஒற்றுமையீனங்கள் தடைகளை ஏற்படுத்துகின்றன. ஈழத்தமிழின அழிப்பு மீளநிகழாமை வேண்டுமென்றால், ஈழத்தமிழர்கள் ஒற்றுமையுடன் தங்களுக்கு நடைபெற்ற இனஅழிப்புக்குத் தண்டனை நீதியும், பரிகார நீதியும் தான் வேண்டுமென வலியுறுத்துவதே ஒரேவழி என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News