இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 171 ஆசிரியர் தலையங்கம்

உக்ரேன் மக்களுக்கு ஒரு நீதி ஈழத்தமிழ் மக்களுக்கு வேறு நீதியா?

உக்ரேனில் ரசியா செய்த யுத்தக் குற்றங்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த அனைத்துலக யுத்தக்குற்ற நீதிமன்ற விசாரணைகள் உடன் தொடங்கப்பட வேண்டும் என்னும் அறிவுறுத்தல்கள் தாக்குதல் நடத்தப்பெற்று 36 மணித்தியாலங்களுக்கு இடையிலேயே வலுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது. உலகின் குடிமக்கள் என்ற தகுதியுள்ள உக்ரேன் மக்களுக்கான நீதி வழங்கலுக்கான உலக நாடுகளின் இம்முயற்சியை ஈழத்தமிழர்களும் உலகெங்கும் வரவேற்கின்றார்கள். ஆனால் உலகின் தொன்மைக் குடிகளான ஈழத்தமிழ் மக்களாகிய தங்களுக்கு  அதே யுத்தக்குற்றச் செயல்களையும், மனிதாயத்திற்கு எதிரான குற்றச் செயல்களையும் செய்தவர்களுக்கு நீதி வழங்குவதற்கான விசாரணையை அறிவிக்கக்கூட 13 ஆண்டுகளா?

அப்படியானால் உக்ரேன் மக்களுக்கு ஒரு நீதி ஈழத்தமிழர்களுக்கு வேறுபட்ட நீதியா என உலகும் சட்டத்தின் ஆட்சியில் சமத்துவமின்மையைக் காட்டுவதற்கு உலக நாடுகள் மேலும் உலக அமைப்புகள் மேலும் இயல்பாகவே கேள்வி எழுப்புகின்றனர்.  அதுவும் சிறிலங்காவில் நடைபெற்ற அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான முதன்மைக் குற்றப்பத்திரிகையைத் தயாரிப்பதற்கான ஆவணச் சேகரிப்பை தொடங்குமாறு தனி அலுவலகத்தையே உருவாக்கிச் செயற்பட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினை நெறிப்படுத்திய நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதியை முன்னெடுப் பதற்கான பெரிதான எந்த நடைமுறைகளையும் காணவியலாத நிலை உலக அரசியல் முறைமைகளால் தொடர்கிறது.

இந்நிலையில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ், சிறிலங்காவுக்குச்  சாதகமான முறையில் ஐக்கிய நாடுகள் மனிதப் பேரவையின் முடிவுகளை அழுத்தப்படுத்துவதற்காக,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது ஆண்டுத் தொடர் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெனிவாவுக்கு வந்துள்ளார். இவரது இந்த அழுத்தப்படுத்தலை வெற்றிபெற வைப்பதற்கான மனித உரிமைகள் பேரவையில்  உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற  இந்தியா உட்பட்ட சிறிலங்காவின் நட்பு நாடுகள் பலமான ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையிலேயே, பீரிஸ் ஜெனிவா வந்துள்ளார்.

இந்தியா இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் 13ஆவது பிரிவு நடைமுறைப் படுத்தப்பட்டால் அது இலங்கையில் தமிழர்கள் மரியாதையான வாழ்வு (Dignity of life) வாழ்வார்கள் எனக் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பேசி,  உறுப்பு நாடுகள் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை கவனத்தில் எடுக்காதவாறு தடுத்து, சிறிலங்காவின் இறைமைக்கும் ஒருமைப் பாட்டிற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. இந்த சிறிலங்காவுடனான நட்புறவாடலை இந்துமா கடலில் தனது பாதுகாப்பை சிறிலங்காவின் கடற்பரப்பாக ஆங்கிலேய ஆட்சியின் பின் இருக்கும் ஈழத்தமிழரின் இந்துமா கடல் பரப்பிலும் தான் உறுதிப்படுத்தப் பயன்படுத்த வேண்டுமென்ற இந்தியாவின் முயற்சி பெருவெற்றி பெற்றுள்ளது.

இதன் அடையாளமாகச் சிறிலங்காவின் நிதியமைச்சர் பசில் ராசபக்ச இந்தியாவுக்குச் சென்று, சிறிலங்காவின் கடற்படையினரின் திறன் அதிகரிப்பதற்கான இந்திய ஒத்துழைப்பை மேலும் வளர்த்து இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மூன்று பாதுகாப்பு உடன்படிக்கைகளில் கையெழுத்திடவுள்ளார். இதனால் சிறிலங்காவுக்கு இரண்டு டோர்னியர் விமானங்கள்  நாலாயிரம் தொன் மிதக்கும் கப்பல்துறை என்பன இந்தியாவால் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், குருகிராமில் உள்ள இந்தியக் கடற்படையின் இந்தியப் பெருங்கடலிற்கான தகவல் இணைப்பு மையத்தில் உள்ள இந்துமா கடலின் பத்து நாடுகளின் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட சிறிலங்காவைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவரையும் இந்தியா இணைத்துக் கொள்கிறது. இதன்வழி இனி இந்துமா கடல் மீதான சிறிலங்காவின் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் கடற்படைக்கு இந்திய கடற்படை வளங்கள் அத்தனையும் உறுதுணையாக இருக்கும் என்கிற புதிய இந்துமா கடல் ஒழுங்குமுறை உருவாக்கப்படுகிறது.

இதனால் இந்தியா 13ஆவது திருத்தத்தை இனி முன்னெடுக்க வேண்டிய தேவை கூட அதற்கு முக்கியமானதாக அமையுமா என்பது கேள்வியாகவே உள்ளது. ஏனென்றால் சிறிலங்காவை அது தனது பொருளாதாரத்தில் வங்குரோத்து நாடாக தற்போது மாறிக்கொண்டிருப்பதில் இருந்து உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கென்ற பெயரில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைக் கொடுத்து இந்தியா மீட்டுவிடுகிறது. இதன்வழி சிறிலங்காவின் இறைமையையும், தன்னாதிக்கத்தையும், ஓருமைப் பாட்டையும் பாதுகாக்கின்ற பாதுகாவலனாகவும் இந்தியா தன்னை முன்னிலைப் படுத்துகிறது. அவ்வாறாயின் தன்னுடைய கடல்சார் நலன்களுக்காக ஈழத் தமிழர்களின் இறைமையின் தொன்மையையும், தொடர்ச்சியினதும் அனைத்துலக நாடுகளின் ஏற்புடைமைக்கு, அதாவது ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமைக்கு, இந்தியாவே முதற்தடைக்கல்லாக மீளவும் செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்விலும் சிறிலங்காவுடைய இறைமையை மீறி மனித உரிமைகள் ஆணையகம் செயற்படாதவாறான எல்லாப் பாதுகாப்புகளையும் இந்தியாவே செய்யும் என்பதும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாகவே உள்ளது. இதற்கிடை உக்ரேன் பிரச்சினை, ஆசிய நாடுகள் ஓரணியில் செயற்படும் நிலை ஒன்றையும் தோற்றுவிக்கலாம். இதனையும் சிறிலங்காவும் இந்தியாவும் இணைந்து பயன்படுத்தி ஈழத்தில் சிறிலங்கா செய்த அனைத்துலகக் குற்றங்களுக்கான விசாரணைகளுக்கான அனைத்துலக பொறிமுறைகளைத் தவிர்த்து, உள்ளக பொறிமுறைகள் மூலம் தீர்வுகளும், நீதிகளும் அடையப்பட வேண்டுமென்னும் போக்கையும் உருவாக்கலாம்..

இந்தப் போக்கை முறியடிப்பதற்கு ஈழத்தமிழர்கள் சிறிலங்காவால் அனுபவிக்கும் இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு குறித்த உண்மை நிலைகளைக் காலம் தாழ்த்தாது சான்றாதரங்களுடன் வெளிப்படுத்தும் கடமையும், ஈழத்தமிழர்கள் சார்பாக முடிவெடுக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்கே இருக்கக் கூடிய வகையில் உலகம் செயற்பட வேண்டுமென வலியுறுத்தும் பொறுப்பும், புலம் பதிந்து வாழும் ஈழத்தமிழர்களுடையதாகவே உள்ளது. இதனால் புலம்பதிந்த ஈழத்தமிழர்களுடைய தலைமையாக உலகம் ஏற்றுச் செயற்படக் கூடிய ஒரு பொதுக்கட்டமைப்பை, விரைவாகவும் தன்னலத்தன்மைகளைக் கடந்ததாகவும், புலம்பதிந்த ஈழத்தமிழர்கள் உண்டாக்குவதிலேயே ஈழத்தமிழினத்தின் உரிமைகளின் எதிர்காலம் உள்ளதென்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News