இலக்கு மின்னிதழ் 164 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 164 ஆசிரியர் தலையங்கம்இலக்கு மின்னிதழ் 164 ஆசிரியர் தலையங்கம்

ஈழ – மலையகத் தமிழர் முஸ்லீம் மக்கள் பாதுகாப்புக்கு ‘சமூகநீதி’ கோரலே ஒரேவழி

கடந்த  ஆண்டு முடிவு மாதமான டிசம்பரில் சீனாவின் சிறிலங்காவுக்கான தூதுவர் கீசென்ஹொங், தமிழர் தேசத்தின் கலாச்சார மையமான யாழ்ப்பாணத்திற்கு வந்து, தமிழரின் பண்பாட்டைப் போற்றி, நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வேட்டி உடுத்திச் சென்றதும் அல்லாமல், தூதரக மட்டத்திலான சிறு உதவிகளையும் வழங்கினார். பருத்தித்துறைக்குப் போய் தனது குழுவினருடன் தானியங்கி சிறு விமானத்தைப் பறக்க விட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்திடம் அல்லாது எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசாவிடம் 20 மில்லியன் ரூபா பெறுமதியான  எட்டு சீறுநீரக நோயாளிகளுக்கு உதவும் கருவிகளை வழங்கினார். அதேவேளை சிறிலங்காவுக்கு சீனா மேலும் 1.5 பில்லியன் டொலர்களை உதவி, அதன் டொலர் நெருக்கடியைக் குறைக்கக் கூடிய முறையில் டொலர் கையிருப்பை 1.6 பில்லியனில் இருந்து 3.1 பில்லியனுக்கு உயர்த்தி, சீனாவின் நிதிப் பிடியினையும் உறுதி செய்தார்.

இந்தச் சீனாவின் சமகால நடவடிக்கைகளின் பின்னணியில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி, சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வமான வருகை அமைந்துள்ளது. 2020இல் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் யாங் யீச்சியும்,  2021 இல் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய்பெங்கும் சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ வருகை தந்திருந்தனர். இந்த வருகைகள் எல்லாமே சீனாவின், சிறிலங்காவில் உள்ள முதலீடுகளிதும் சேவைகள் மற்றும் ஆட்கள், பொருட்கள், நகர்வுகளதும் சுதந்திரத்தின் உறுதிப்பாடுகளுக்கும், வளர்ச்சிகளுக்கு மெனச்  சொல்லப்பட்டாலும், சிறிலங்கா பகிரப்பட்ட இறைமையுடன் உள்ளது என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்தும் செயலாகவும் உள்ளது.

இதுவே இந்தியா தனக்குப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எனவும், அமெரிக்கா தனது இந்துமா கடல் மீதான முதலீடுகள், சேவைகள் மற்றும் ஆட்கள் பொருட்கள் நகர்வுகளுக்கான, சுதந்திரத்திற்கான முட்டுக்கட்டை எனவும் சிந்திப்பதற்கான அடிப்படையாக உள்ளது. எனவே சிறிலங்காவின் ஒவ்வொரு நகர்வுக்கும் இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாகவும் தனித்தும் தம்மாலான எதிர்வினைகளைக் கட்டமைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்தியா அயலக நாட்டுக்கு முக்கியத்துவம் என்ற தனது வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையிலும், அமெரிக்கா இந்துமா கடலில் பாதுகாப்பான அமைதியைப் பேணல் என்ற அடிப்படையிலும், அனைத்துலக சட்டங்கள் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப தனது நிதி மதி தொழில்நுட்ப உதவிகளையும், விமானங்கள் உட்பட்ட கருவிகள் வழங்கலையும், பாதுகாப்புக்கான படைகளுக்கான பயிற்சிகளையும், புலனாய்வுத் தகவல் பகிர்வுகளையும் செய்யும். இதனால் சிறிலங்கா இவ்வாண்டில் அனைத்துலக வல்லாண்மைகளின் நேரடி மறைமுக மோதல் களமாகவே காட்சியளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதற்கு முன்னாயத்தமாக இந்தியாவுடன் சிறிலங்காவின் தொடர்பை இதுவரை நட்பார்ந்த நிலையில் தொடர்ந்து கொண்டிருந்த சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இடத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவைப் பதில் பிரதமராக நியமித்தால், அது அமெரிக்க – இந்திய கூட்டு நட்பை முன்னெடுக்க உதவியாகும் என்கிற எண்ணத்தில் சிறிலங்கா அரசாங்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. முன்னர் உகண்டாவின் சிறிலங்காவுக்கான உயர் ஸ்தானிகராகவும் தற்பொழுது கென்யாவின் உயர் ஸ்தானிகராகவும் உள்ள வேலுப்பிள்ளை கனகநாதனால், கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் சந்தை நாடாகக் கருதப்படும் சென்மரினோவில் பதிவு செய்யப்பட்ட  மிகப்பெரிய செல்வந்தர்கள் பயணிக்கப் பயன்படுத்தப்படும் தனியார் விமானமொன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டதால், சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச, குடும்ப சமேதராய் திருப்பதியில் சாமி கும்பிடுவதற்கு 32 மில்லியன் டொலர் செலவில் திருப்பதி வெங்கடேசுவரப் பெருமாளை பக்தி ததும்பக் கும்பிட்டு மீண்டுள்ளார். மகிந்தவுக்கு உடல்நல ஓய்வு சிலகாலம் தேவை. பதில் பிரதமராக பசில் ஆள்கவென திருப்பதி வெங்கடேசுவரப் பெருமாள் வரங்கொடுத்து அனுப்பி வைத்துள்ளார் என்ற பேச்சுக்களும் அடிபடுகின்றன.

இதற்கிடை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புத் தலைமை இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, சிறிலங்காப் பாராளுமன்றத்தில் இறுதிக்கட்டத்தில் பணியாற்றிய தனது படை அதிகாரிகள் 51 பேருக்கு, அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வெளிப்படுத்தினார். அதேவேளை  பூகோள குற்றவியல் நீதிப்பணியகத்தின் தலைவர் மைக்கல் கொசக், சிறிலங்காவின் அமெரிக்கத் தூதுவர் மகிந்த சமரவீரவுக்கு மெய்நிகர் சந்திப்பு வழியாகப் பொறுப்புக் கூறலையும், மனிதஉரிமைகளைப் பேணுவதையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்திக் கூறியுள்ளார். சிறிலங்காவின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழர்களுக்கு உதவினால் தமிழர்கள் சீனாவை வெளியேற்ற எவ்வகையில் உதவுவர் எனத் தனது அமெரிக்க அழைப்பு விஜயத்தின் பொழுது கேட்டதாகக் கூறியுள்ளார். இவைகள் எல்லாம் அமெரிக்கா தமிழர்களின் பிரச்சினைகளை முன்வைத்தும் தனது நகர்வுகளைச் சிறிலங்காவில் செய்யத் திட்டமிடுகிறது என்பதைத் தெளிவாக்கியுள்ளன.

இந்நிலையில் ஈழ, மலையகத் தமிழர்கள், முஸ்லீம் மக்கள் ஒருங்கிணைந்து தங்கள் தங்களுக்கான சமுகநீதியை உறுதிப்படுத்துமாறு சீனா, அமெரிக்கா, இந்தியாவிடம் எந்த அளவுக்குப் பலமாகக் கேட்பார்களோ அந்த அளவுக்கே இந்த மூவின மக்களதும் பாதுகாப்பு எல்லா நிலையிலும் உறுதிபெறும் என்பதே இலக்கின் எண்ணம். இந்த மூவின மக்களுக்குமான பிரச்சினைகளும், அதன் தாக்கங்களும் பொதுவானதாகவும், வேறு வேறானதாகவும் உள்ளதால், அந்தத் தனித்துவங்களையும் அவற்றுக்கிடையான பொதுப் பண்புகளையும் மூன்று இனத்தவர்களும் கூடிப் பேசித் தொகுத்து ‘சமுக நீதிக்கான’ சான்றாதரங்கள் உடன் வெளியிட வேண்டிய நேரமிது.

Tamil News