Home ஆசிரியர் தலையங்கம் இலக்கு மின்னிதழ் 163 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 163 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 162 ஆசிரியர் தலையங்கம்

2022இல் சமத்துவமின்மைகளை மாற்றுவதன் மூலம் பாதுகாப்பான அமைதி வாழ்வை உருவாக்குவோம்

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் மனிதகுல வரலாற்றிலும், இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள பேரினவாத இனஅழிப்பால் பாதிக்கப்பட்டு வரும் ஈழத்தமிழர் வரலாற்றிலும், பாதுகாப்பான அமைதியில்  வாழ்வதற்கான புதிய செல்நெறியினை உருவாக்க வேண்டிய ஆண்டாக 2022 தொடக்கம் பெறுகிறது. இதற்கான செல்நெறியாக ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான அனைத்துலக மனித உரிமைகள் நாள் மையக்கருவான ‘சமத்துவமின்மைகளை மாற்றுவதால், மனித உரிமைகளைப் பேணுதல்’ என்பது அமைகிறது. அதாவது சமகால வரலாற்றில் உள்ள சமத்துவமின்மைகள் மாற்றப்பட்டாலே, மனிதஉரிமைகள் பாதுகாக்கப்படும் என்பது 2022ஆம் ஆண்டுக்கான தெளிவான செல்நெறியாக உள்ளது.

அனைத்துலகையும் பொறுத்த மட்டில், மக்களின் ஆற்றலான அவர்களின் அனுபவமும், அறிவும் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான அறிவியலாகவும், முற்தடுப்பு முறைகளாகவும் கட்டியெழுப்பப்பட்டு, எல்லா நாடுகளுக்குமான சமபகிர்வாக மக்களின் ஆற்றல் நெறிப்படுத்தப்பட்டு, இணைக்கப்பட்டாலே, உலக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான அமைதி வாழ்வு மீளும் என்பது கோவிட் பெருந்தொற்றுக் கால அனுபவ உண்மையாக உள்ளது. இதற்கு உலகின் ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் இறைமைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அரசாங்கங்கள் ‘மனித நலம்’ என்னும்  தலைமைச் சிந்தனையுடன் நாடுகளின் வளப் பகிர்வுகளை மற்றைய நாடுகளுடன் மேற்கொள்ள வேண்டும். இதில் நிதிவளப் பகிர்வு என்பது மிகச் சிக்கலான ஒன்றாக இருந்தாலும், அதனை விடச் சிக்கலானதாக வல்லாண்மைகளின் மேலாண்மை என்பது அமைகிறது.

இதே நிலைதான் இலங்கையிலும், ஈழத்தமிழர்களுக்கும் உள்ளது. இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த பேரினவாத ஈழத்தமிழின அழிப்பு அரசியல் என்னும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் ஈழத்தமிழர்களின் ஆற்றலாக உள்ள அவர்களது அனுபவத்தையும், அறிவையும் சிங்கள பௌத்த பேரினவாத இனஅழிப்பு அரசியலுக்கு எதிரான தேச நிர்மாண செயற்பாட்டு ஆற்றலாக கட்டியெழுப்புவதற்கு ஈழத்தமிழர்கள் முயற்சித்தாலும்,  உலக வல்லாண்மைகளினதும், பிராந்திய மேலாண்மைகளதும் சந்தைநல, இராணுவநல அடிப்படையிலான சிறிலங்கா அரசாங்கத்துக்கான நிதி மதி ஆயுத உதவிகளே மிகப்பெரிய தடைகளாக உள்ளன.

தற்பொழுது சிறிலங்காவில் சீன – இந்திய நேரடி மோதல் நிலைகள் அதிகரிக்கின்றன. மார்கழியில் வடக்கிற்கான சீனத்தூதராலய அதிகாரிகள் வருகையை அடுத்து சீன வெளிவிவகார அமைச்சரே ஜனவரி 8ம் 9ம் திகதிகளில் சிறிலங்காவுக்கு வருகை தருவதுடன் புத்தாண்டு 2022 ஆரம்பமாகிறது.  தனது ஆட்சிப்பிழைகளால் வங்குரோத்து நிலைக்குப் பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் சிறிலங்காவை மீட்டு விடும் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உலக வங்கி நாணயமாற்றுச் சபை வழி அமெரிக்காவும் செயற்பட்டு வருகின்றன. உலக நாடுகள் அமைப்புக்களிடம்,  கடன், உதவி, முதலீடு என்னும் மூவழிகளில் தன்னை வங்குரோந்து நிலையில் நின்று காத்துக் கொள்ளும் சிறிலங்கா, வடக்கிலும் கிழக்கிலும் பிரகடனப்படுத்தப்படாத இராணுவ ஆட்சியை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் சனவரி 1ம் நாளில் கத்தோலிக்க திருச்சபை கொண்டாடும் உலக மக்களின் அமைதிக்கான நாள் செய்தியில் இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நினைவுகளை வைத்திருப்பவர்களுக்கும் அதாவது மூத்தோருக்கும் வரலாற்றை முன்னெடுப்பவர்களுக்கும் அதாவது இளையோருக்கும் இடையிலான உரையாடலை உருவாக்குவதே அமைதியை முன்னெடுக்கும் வழிகளுக்கான மிகப் பெரிய சமூகச் சவாலாக உள்ளது” எனக் கூறியுள்ளமை அனைவரதும் கவனத்திற்கு உரிய ஒன்றாக உள்ளது.

கோவிட் 19 பெருந்தொற்று தாக்கத்தின் வழியான மனித குல அழிவுகளின் பாதிப்புக்களை மிகநீண்ட காலத்திற்கு அனுபவிக்கப் போகிறவர்கள் இளையோர்களே. அவ்வாறே இலங்கைத் தீவில் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பு அரசியல் நடவடிக்கைகளின் பாதிப்புக்களை நீண்ட காலத்திற்கு அனுபவிக்கப் போகின்றவர்களும் ஈழத்தமிழ் இளையோர்களே.

உலகிலும் சரி, ஈழத்திலும் சரி நிகழ்காலத்தில் உறுதியாக நின்று கொண்டு கடந்த காலத்தை நோக்கி அந்த அனுபவத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய ஆண்டாக 2022 அமைகிறது. இதில் முதியவர்கள் வாழ்வே சமகால வரலாறாக இளையவர்கள் முன் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி காரண காரியத் தொடர்புகளுடன் கற்பிக்கப்பட்டாலே, இளையவர்கள் அந்த வரலாற்றை மாற்றுகின்ற வரலாற்றை முன்னெடுக்க முடியும். முதியவர்கள் வரலாற்றில் இழந்தவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இளையவர்களுக்கு ஏற்படுத்தாது, வரலாற்றையே இழப்பாகக் காண்பித்து,  மிதித்தவர்கள் காலடிகளையே  எதிர்காலத்திற்கான வழியாகப் பின் செல்லுமாறு உரையாடல்களை வளர்ப்பது எந்த வகையிலும் சமத்துவமின்மைகளை மாற்றிப் பாதுகாப்பான அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டாது.

அதிலும் சிறிலங்கா ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் 2022இல் அரசியலமைப்பு மூலமும் சிங்கள பௌத்த இனஅழிப்புக்குச் சட்டத்தகைமை அளிக்கப்போகிறது. இதனை தடுப்பதற்கு இளையவர்களின் வரலாற்றை முன்னெடுக்கும் ஆற்றல் முதியவர்களின் வரலாற்றை நினைவுபடுத்தும் அனுபவத்துடன் இணைக்கப்படல் மிக முக்கியமாகிறது. இதனைச் செய்ய இயலாத மூத்த ஈழ அரசியல் தலைமைகள் 2022இலாவது தங்களின் மூப்பையும் பிணியையும் கவனத்தில் எடுத்து இளைப்பாறி இளையவர்களை இணைக்கக் கூடிய தலைமைக்கு வழி விடுவார்களாக. இனி எவராயினும் எங்காயினும் ஈழத்தமிழர்களின் இறைமை என்கிற அடிப்படை உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து இலங்கையில் சிங்களவர்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளுக்கும் உரியவர்கள் ஈழத்தமிழ் மக்கள் என்பதையும் ஈழத்தமிழர்கள் உலகால்  மறக்கப்படக் கூடிய மக்களாக  அல்ல, மதிக்கப்பட வேண்டிய மக்களாக  வாழ்கின்றனர் என்பதையும்  உலகுக்கு எடுத்து உரைத்துச் சமத்துவமின்மையை மாற்றுவதன் மூலம் ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பான அமைதி வாழ்வு மீள அனைத்துலகத் தமிழர்களும் உழைக்கும் ஆண்டாக 2022 அமைய வேண்டும் என்பதே இலக்கின் எண்ணம்.

Exit mobile version