Home ஆசிரியர் தலையங்கம் இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 161 ஆசிரியர் தலையங்கம்

சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை அனைத்துலக ஈழத்தமிழர்களின் பங்களிப்புக்கான அழைப்பு

ஈழத்தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக வரலாற்றில் சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை, புதிய இயல் ஒன்றைத் தொடக்கி வைத்துள்ளது. சீனா யார் எவ்வாறு கூறினாலும், 21ஆம் நூற்றாண்டின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிக செல்நெறிகளைத் தீர்மானிக்கும் உலகின் சத்தியாக உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. அந்த வகையில், உலகின் மக்களில் ஒருவராக உள்ள ஈழத்தமிழர்களுடன் அவர்களது தொடர்பு விருப்பு என்பது இயல்பான ஒன்றாகவே உள்ளது.

சீனாவின் உலகப்பார்வை என்பது, தன்னை உலக மக்களின் தேவைகளுடன் இணைத்துக் கொள்வதன் மூலம், தனது பொருளாதாரத்திற்கான மூலவள வழங்கல்களைப் பெருக்க உதவும் வகையிலும், தனது நாட்டுடனான தரை கடல் நேரடிப் பாதைகளை அதிகரிப்பதன் வழி பொருட்களும் தேவையான மனித மூலவளமும் தங்கு தடையின்றி நகர்வதை உறுதிப்படுத்தும் வகையில், தனது நிதிப்பகிர்வை நீண்ட கால உடன்படிக்கைகளின் வழி உலக நாடுகளுக்கு வழங்குவதாகவும் அமைகிறது. அதே வேளை அந்த நிதிப்பகிர்வின் வழியான நிகரஇலாபத்தை ஒரு தனி மனிதனோ அல்லது தனி நிறுவனமோ உச்சப்படுத்தி அனுபவிக்க அனுமதிக்காது, ஒரு எல்லையின் மேல் மறுபகிர்வு வழியாகப் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கச் செய்து நாட்டின் நலிவுற்ற மக்கள் நல்வாழ்வுபெற வைக்கவும் சீனா முயற்சித்து வருகிறது.

இங்கு இரண்டு விடயங்கள் முதன்மை பெறுகின்றன. ஒன்று தான் தொடர்பு கொள்ளும் நாட்டின் அரசியலில் நேரடித் தாக்கமெதையும் மேற்கொள்ளாமல், அந்த நாடுகளைத் தனது அனைத்துலக நிதிப் பெருக்கத்திற்கான கருவியாக்கிக் கொள்வது. அடுத்தது ஒவ்வொரு நாட்டிலும் அந்த அந்த நாட்டின் அரசியலமைப்பையோ சட்ட ஒழுங்குகளையோ மீறாது எந்த வகையில் அந்த நாட்டுடனான தனது வர்த்தக மேலாண்மையைச் சட்டப்படி உறுதி செய்து கொள்ள முடியுமோ அந்த வகையில் தனது இருப்பை அந்த மண்ணில் உறுதியாக்கிக் கொள்வது.

இந்த உள்நாட்டு அரசியலில் பங்குபற்றாது மிகவும் நுணுக்கமான முறையில் நிதிக்கடனாலும் நிதி உதவிகளாலும் ‘பொது வளர்ச்சி’ யை ஊக்குவித்து, அதன் வழி ‘பொது நன்மையை’ வலியுறுத்தல் என்பதே சீனாவின் வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. இந்த வெளியுறவுக் கொள்கை  இதுவரை வெறுமனே ‘பொது நன்மை’ என்ற கருத்தியலை மட்டும் முன்வைத்து தமக்கான உலக மேலாண்மைகளை உறுதிப்படுத்தி வந்த மேற்குலக அரசியல் தத்துவத்தைப் பின்தள்ளி, அரசியலுக்கு மேலான வகையில் உலக மக்களுடனான பொருளாதார இணைப்பைச் சீனா மிக வெற்றிகரமான முறையில் அமைத்துக் கொள்ள உதவுகிறது. இதன்வழி எந்த மேற்கத்திய நாடுகள் தனக்கு அரசியலால் எதிர்வினையாற்ற முயற்சிக்கின்றனவோ அந்த நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் சீனா முதலீட்டை ஏற்படுத்தியுள்ளமை 21ஆம் நூற்றாண்டின் உலக சமூக அரசியல் பொருளாதார ஆன்மிகக் கொள்கை உருவாக்கல்களில் சீனச் சிந்தனையை உலக மக்கள் தாமாகவே ஏற்க வைக்கும் பலத்தைச் சீனா பெற்றுள்ளது.

இந்தக் கருத்தியலைக் கடந்த எதார்த்த நிலை அரசியல் என்பது, சீனாவை எந்த அனைத்துலகச் சட்டத்தாலும் அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இயலாத பேராற்றலாக அறிவியல் தொழில்நுட்பத் துறையிலும் முன்னிறுத்தி வருகிறது. இதனால் சீனாவுடன் சந்தைத் தொடர்பு கொள்ளாது முற்றுரிமையுடன் வர்த்தகத்தில் செயற்படும் நிலையில் இன்று உலகின் எந்த நாடுகளும் மட்டுமல்ல, மக்கள் இனங்களும் இல்லை. அதே வேளை சீனா ஆட்சியில் உள்ள அரசுக்களுடன் தனது சட்டரீதியான உடன்படிக்கைகளை மேற்கொண்டு, தனது உற்பத்தி நிறுவனங்களை அமைத்தாலும், அதன் வழியான வேலை வாய்ப்புக்களில் அந்த நிறுவனங்கள் இருக்கின்ற நாட்டு மக்களுக்கும் இடமளிக்கும் கூட்டு முயற்சிகளையும் முன்னெடுக்கத் தவறுவதில்லை.  சீனா குறித்த இந்த எதார்த்தப் பார்வையை இன்றைய ஈழத்தமிழர்கள் நெஞ்சிருத்தினாலே சீனத்தூதரகத்தினரின் யாழ்ப்பாண வருகை என்பது எந்த அளவிற்கு முக்கியமானதாக அமைகிறது என்ற எண்ணத்தைப் பெற முடியும்.

அடுத்து இதற்கான சீனாவின் உலகப் பார்வை என்பது, இன்று அதன் மூன்று கோட்பாடுகளால் நிலைநிறுத்தப்படுகிறது. ஒன்று அது பலமான கட்டமைப்புகளுடனேயே அது அரசாக இருந்தாலும் சரி அல்லது தனியார் அமைப்புக்களாக இருந்தாலும் சரி தனது தொடர்பாடலை முன்னெடுக்கிறது. இந்த விடயத்தில் தான் சீனத்தூதரகத்தினரின் யாழ். வருகை என்பது அனைத்துலக ஈழத்தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி நிலையைத் தனது பொருளாதார முயற்சிகளுடன் இணைக்கின்ற முயற்சியாக அமைகிறது. குறிப்பாகச் சொன்னால், சீனாவின் ஈழத்தமிழர் தாயகப் பகுதிகளிலான பொருளாதார நோக்குகளும், ஈழத்தமிழர்களின் பொருளாதார நோக்குகளும் இணைப்புப் பெற்ற முறையிலான முதலீடுகள், மூலவளப் பகிர்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறுவதற்கு அனைத்துலக ஈழத்தமிழர்களின் பங்களிப்புக்கான அழைப்பாகவே இதனைக் கருதி, அனைத்துலக ஈழத்தமிழர்கள் செயற்பட வேண்டும். சீனாவின் மூலதன எழுச்சியுடனும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடனும் ஈழத்தமிழர்களின் அறிவும் ஆற்றலும் நிதி வளங்களும் இணைக்கப்படல் காலத்தின் தேவையாக உள்ளது.

மக்களை மையமாகக் கொண்ட கோட்பாட்டை உருவாக்கிச் செயற்படுதல் சீனாவின் இரண்டாவது கோட்பாடு. இதில் சீனா அரசியலுக்கு அப்பால் தங்கிவாழாத பொருளாதார முறைமையை உருவாக்குதல் என்பதிலேயே அக்கறையுள்ளதாக உள்ளது. ஏனெனில் தங்கி வாழவைக்கும் பொருளாதார முறைமையே அரசியல் அடிமைத்தனம் உறுதிப்படுவதற்கான மூலகாரணமாக உள்ளது. எனவே ஈழத்தமிழர்கள் தங்கிவாழும் பொருளாதார நிலையில் நின்று தங்களை விடுவித்துக் கொள்வதற்கு ஏற்ற திட்டங்களைச் சீனாவுடன் விவாதிக்க வேண்டிய நேரமிதுவாக உள்ளது.

சீனா தனது தொடர்பாடலை மக்கள் நலன்களில் மேம்பட்ட கட்சியொன்றின் வழியாகவே செய்தல் என்பது சீனாவின் மூன்றாவது கோட்பாடு.  எனவே ஈழத்தமிழர்கள் மக்கள் நலன்களில் மேம்பட்ட கட்சி ஒன்றை குடைநிழல் அமைப்பாக, இன்று தமிழர் தாயகங்களில் உருவாக்கிக் கொள்ளாவிட்டால், சீனாவின் பொருளாதார முதலீடுகள் உதவிகள் குறித்த புதிய முயற்சி குறுகிய காலத்தில் செயலற்றதாகி விடும். தங்களுடைய அரசியல் சிந்தனைகளுக்கு அப்பால் பொருளாதாரத்தில் ஒரு உறுதியான பொருளாதாரக் கோட்பாட்டை இதுதான் ஈழத்தமிழர் தாயகப் பகுதிகளின் பொருளாதாரக் கோட்பாடு எனப் பகிரங்கமாக வெளிப்படுத்த ஈழத்தமிழர்களின் அனைத்துலக வளவாளர்களின் கூட்டிணைப்பு ஒன்று உடன் உருவாக்கப்பட வேண்டும். இதில் சமூக பொருளாதார அரசியல் சட்ட வர்த்தக புத்திஜீவிகளும் வர்த்தகர்களும் தொழிலாளர்களும் இணைந்த தொழில்கட்சியாக ஒரு கட்சி உருவாகுமானால், அதனுடன் சீனா செயற்படுவது சீனாவுக்கும் ஈழத்தமிழருக்கும் ஏற்புடைய வளர்ச்சியைத் தரும் என்பதே இலக்கின் எண்ணம்.

 

Exit mobile version