இலக்கு மின்னிதழ் 160 ஆசிரியர் தலையங்கம்

மின்னிதழ் 160 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 160 ஆசிரியர் தலையங்கம்

இனங்கள் என்ற தகுதியை ‘கூட்டங்கள்’ என மாற்றும் முயற்சி

இலங்கைத் தீவு சிங்கள இனத்தவரின் நாடு. பௌத்த ஆகமச் சட்டங்களின் வழியான ஆட்சிக்குட்படுத்தப்படும் நாடு. இதுவே சிறிலங்காவின் ஒரு நாடு ஒரு சட்டம் என்கிற அடிப்படையில் படுவேகமாக உருவாகி வரும் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பின் பிரகடனமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் மூவகைப்பட்ட மக்களாக சிங்களரல்லாத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

  1. இலங்கையை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தாயகமாகக் கொண்டுள்ள இலங்கையின் தேசிய இனத்தவரான ஈழத்தமிழ் மக்கள்,
  2. வர்த்தகத்திற்கு வந்து மிக நீண்ட காலமாக இலங்கையைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மதத்துவச் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள்,
  3. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் பெருந்தோட்டப் பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியாவில் இருந்து வேலை செய்வதற்கான அனுமதியுடன் கொண்டு வந்து இருநூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இனத்துவச் சிறுபான்மை மலையகத் தமிழர்கள்

என்னும் மூன்று இன மக்களும் இலங்கையின் குடிகள் என்ற வகையில் இலங்கை அரசியல் அமைப்பின் சட்ட ரீதியான பாதுகாப்புக்கும், அமைதியான வாழ்வுக்கும், உரிய வளர்ச்சிகளுக்கும், அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில், தகுதியுடைய மக்கள். இந்நிலையில் இவர்கள் ‘குடிகள்’ என்ற அடிப்படையில் சட்டத்தின் முன் சமமான ஆட்சியைப் பெறுவதற்கு உரிமையுள்ள மக்கள் இனங்கள்.

அதிலும் இலங்கைத் தமிழர்கள் அல்லது ஈழத்தமிழர்கள் அல்லது தமிழீழத்தவர்கள் என்ற அடையாளத்தை உடையவர்கள், இலங்கையின் தேச இனமாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுள்ள மக்கள். தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும், வளர்ச்சிகளையும் தம்மை ஆள்பவர்களாகக் கூறிக்கொள்பவர்கள் உறுதி செய்யாது விட்டால், தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவுசெய்யும் உரிமையுள்ள மக்கள். இதனை உள்ளகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களை ஆள்பவர்களாகக் கூறிக்கொள்ளும் சிறிலங்காவுக்கு எடுத்துச் சொல்லி, தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும், வளர்ச்சியையும் உறுதி செய்யுமாறு கேட்கும் உரிமையுள்ளவர்கள்.

இதனைத் தங்களை ஆள்பவர்கள் செய்யாது விட்டால், அனைத்துலக நாடுகளையும், அனைத்துலக மக்களையும், அனைத்துலக அமைப்புக்களையும் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் தங்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையினை ஏற்று, அதன் அடிப்படையில் தாங்களே தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும், வளர்ச்சிகளையும் கொண்ட ஆட்சியை அமைப்பதை உறுதி செய்து, அதற்கு உதவுமாறு கேட்கும் அனைத்துலகச் சட்ட உரிமையுள்ளவர்கள்.

இந்த தாயக தேசிய தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தீர்வு பெற அனைத்துலகச் சட்டத் தகுதியுள்ள ஈழத்தமிழர்களையும், தேசிய இனத்துவச் சிறுபான்மை இனங்கள் என்ற அடிப்படையில் தங்களுக்கான அரசியலுரிமைளைப் பெறத் தகுதியுள்ள முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழர்களையும், இலங்கையில் வாழ்ந்து வரும் ‘கூட்டங்கள்’  என சிங்கள பௌத்த பேரினவாதச் சிறிலங்கா அரசாங்கம் வரைவு செய்ய முற்படுகிறது. இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கத்தின் சலுகைகளில் அல்லது நல்லெண்ணத்தில் வாழவேண்டிய மக்கள் கூட்டங்களாக இந்த இலங்கைத் தீவின் மூவகைப்பட்ட மக்களையும் அரசியலமைப்பால் வரையறை செய்து, முழு இலங்கையையும் சிங்கள நாடாகச் சட்டப் பிரகடனம் செய்வதே புதிய அரசியலமைப்பின் மைய நோக்கு.

இதனால் இலங்கைத் தமிழர்களின் தேசியப் பிரச்சினை, அவர்களின் இறைமையின் அடிப்படையிலான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்வு வழியான பாதுகாப்பான அமைதியான ஆட்சியை உருவாக்குதல் மூலம் தீர்வு பெற வேண்டிய ஒன்றாக உள்ளது. முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் பிரச்சினை அவர்களுக்கான அரசியல் உரிமைகள் அரசியலமைப்பு வழியாக உறுதி செய்யப்படுகிற தீர்வாக அமைய வேண்டியுள்ளது. இதுவே இலங்கைத் தமிழர்களும், முஸ்லீம்களும், மலையகத் தமிழர்களும் ஒன்றிணைந்து ஒரே அரசியல் அணியாக சிங்களப் பெரும்பான்மையினரின் பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சியை மாற்ற இயலாதுள்ளதற்கான முக்கிய காரணம்.

இந்நிலையில் இலங்கைத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர் பொதுப் பிரச்சினைகளில் இணைவும், சிறப்புப் பிரச்சினைகளில் தனித்துவமும் கொண்ட பொதுச் சமூகக்கொள்கை உருவாக்கல் வழியாக தங்களின் உயிர், உடைமைகள், நாளாந்த வாழ்வு என்பவற்றைப் பாதுகாத்து, உறுதிப்படுத்தக் கூடிய பொதுவான வேலைத்திட்டமொன்றில் இணைவதன் வழியாகவே சிங்கள பௌத்த பெரும்பான்மையே ஆட்சியாகக் கட்டமைவுற்றுள்ள இன்றைய சூழலில் சமூகநீதியை நிலைநிறுத்த முயல வேண்டும்.

இலங்கையின் அரசியலமைப்பு வழியாக நீதியான ஏற்புடைய தீர்வை உருவாக்க உதவ முற்படும் அனைத்துலக நாடுகளும் இலங்கைத் தமிழர்களின் தேசியப் பிரச்சினை அவர்களின் இறைமை, தன்னாட்சி உரிமைப் பிரச்சினை என்கிற உண்மைத் தன்மையையும், முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழர்களின் பிரச்சினை தேசிய இனத்துவ மதத்துவ சிறுபான்மையினர் பிரச்சினை என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு பெறப்பட வேண்டிய பிரச்சினை என்பதையும் கவனத்தில் எடுத்து, தீர்வினை ஏற்படுத்த உதவிடல் வேண்டும். அத்துடன் தொடர்ந்து இனஅழிப்புக்கு உள்ளாகி வரும் அதீத மனிதாய தேவைகளை உடைய நலிவுற்ற சமுதாயமாக இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். இதனால் சிறிலங்காவின் இறைமையை மீறி, இத்தகைய மக்களுக்கு அவர்களுக்கான மனிதாய உதவிகளை நேரடியாகக் காலந்தாழ்த்தாது செய்தல் அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்புடைய கடமை என்கிற அடிப்படையில் செயலாற்ற வேண்டும். இந்த உண்மைகளை உரக்கச் சொல்லி நாடுகளையும், அமைப்புக்களையும் நேர்மையும் உண்மையுமான முறையில் இலங்கையின் மக்கள் இனங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த புலம்பதிந்து வாழும் அனைத்து தமிழரும் ஒற்றுமையாகவும், உணர்ச்சி வயப்படாமலும் வலியுறுத்த வேண்டும் என்பதே இலக்கின் எண்ணம்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad இலக்கு மின்னிதழ் 160 ஆசிரியர் தலையங்கம்