Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்


இலக்கு மின்னிதழ் – 159 – ஆசிரியர் தலையங்கம்

இலண்டன் அசெம்பிளி நிறைவேற்றியுள்ள தமிழர் மரபுரிமை மாதத்துக்கான தீர்மானம்

இலண்டன் அசெம்பிளி என்பது இலண்டன் மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட முடிவுகளும், செயல் திட்டங்களும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 உறுப்பினர்களைக் கொண்ட சபை. தற்போது இலண்டன் அசெம்பிளியில் 11 தொழிற் கட்சி  உறுப்பினர்களும், 9 பழமைவாதக் கட்சி உறுப்பினர்களும், 3 பசுமைக் கட்சி உறுப்பினர்களும், 2 தாராண்மைவாதக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். இந்த இலண்டன் அசெம்பிளி தைப்பொங்கல் இடம்பெறும் ஜனவரி மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாட வேண்டுமென்னும் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. இனி இதனை இலண்டன் மேயரும் 32 மாநகரசபைகளும் முன்னெடுப்பதற்கான அடுத்த கட்ட வேலைகளை இலண்டன் வாழ் தமிழர்கள் தங்கள் பரப்புரைகள் மூலம் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

ஹவுன்சிலோ, கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ், ரிச்மண்ட் அப்போன் தேம்ஸ் ஆகியவற்றின் பழமைவாதக் கட்சியின் உறுப்பினர் மதிப்புக்குரிய நிக்கலஸ் ரோஜர்ஸ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழர் மரபுரிமை மாதப் பிரேரணை பின்வருமாறு அமைந்துள்ளது:-  “இலண்டன் தமிழ்ச் சமுதாயம் சிறிலங்கா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்து வாழும் தமிழர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டளவில் 15000 தமிழர்கள் மருத்துவர்களாகவும், தாதிமாராகவும், முன் வரிசை உடல்நல நிர்வாகிகளாவும், தேசிய உடல்நல சேவையில் பணியாற்றுகின்றனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் எங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், ஆசிரிய உதவியாளராகவும் பணியாற்றுகின்றனர். இலண்டனில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட எங்கள் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்றவர்களைப் பராமரிக்கும் சமூகப் பராமரிப்பு நிலையங்கள் தமிழர்களால் செயற்படுத்தப்படுகின்றன. தமிழர்கள் தங்கள் சமூகப் பொருளாதார, பண்பாட்டு, அரசியல் பணிகளால் ஐக்கிய இராச்சியத்தினைக் கட்டியெழுப்பும் இழைகளாக உள்ளனர்.

2ஆவது உலகப்போரில் றோயல் விமானப்படையில் சேவையாற்றியது முதல் இன்று அஸ்ரா செனிக்கா தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடித்தல் வரை அவர்களின் பங்கு உண்டு. அவர்களுடைய தாய்நாட்டில் நடைபெறும் அவமானகரமான செயல்களும், துன்புறுத்தல்களும் வன்முறைப்படுத்தல்களும் இங்கு ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களின் குடும்பங்களதும், நண்பர்களதும் நலவாழ்வை மிக மோசமாகப் பாதிக்கின்ற சூழலிலேயே அவர்கள் இந்த நாட்டுக்கான பங்களிப்புக்களைச் செய்கின்றார்கள். இலண்டன் அசெம்பிளி தமிழ்ச் சமுதாயத்திற்கு எங்களுடைய நகரத்திற்கு அவர்களது விலைமதிக்க இயலாத பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்து, அவர்களது பங்களிப்பால் பெருமையுறுகிறது. தைப்பொங்கல் அறுவடைப் பெருவிழா வரும்  14ஆம் திகதியை உள்ளடக்கிய ஜனவரி மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அமைக்க வேண்டுமென இந்த அசெம்பிளி கருதுகிறது. இலண்டன் மேயரையும், இலண்டன் மாநகரசபைகளையும் எங்கள் தமிழர் சமுதாயத்திற்கு மதிப்பளித்து ஆதரவு அளிக்கும் வகையில் இதனைக் கொண்டாடுமாறு அழைக்கின்றோம்.”

மேலும் இவர் தமிழர் மரபுரிமை மாதப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையில் “இவர்களின் இந்த பொதுநல சேவைகள் அவர்கள் வெளியே அனுபவித்த துன்புறுத்தல்களதும், ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகளதும் பின்னணியில் அமைந்துள்ளது.” எனவும் குறிப்பிட்டார்

இந்த வகையில் இந்தத் தமிழர் மரபுரிமை மாதம் என்பது ஈழத்தமிழர்களின் உழைப்பால் இலண்டன் வாழ் உலகத் தமிழர்கள் அனைவருக்குமான தமிழர் மரபுரிமை மாதமாகத் தை மாதம் கொண்டாடப்படுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

தமிழர் மரபுரிமை மாதப் பிரேரணையில், ஈலிங் அன்ட் கிளிங்டன் தொழிற் கட்சி உறுப்பினர் மதிப்புக்குரிய டாக்டர் ஒன்கார் சகோட்டா அவர்கள் உரையாற்றுகையில் “திரை மறைவில் இந்த நகரத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் பகுதியாகவே தமிழர்கள் உள்ளனர். அவர்கள் இந்தத் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், குடிமை வாழ்வுக்கும் பங்களித்து வருகின்றனர். ஆயினும் அவர்களில் பலரும் தங்கள் தாயகத்திலிருந்து கொடுமைப்படுத்தல்களுக்கும், போருக்கும் தப்பி வந்தவர்கள்” என்றார்.

பரந்த இலண்டனின் பழமைவாதக் கட்சி உறுப்பினரான மதிப்புக்குரிய சான் பெய்லி அவர்கள் உரையாற்றுகையில் “தமிழர்கள் மிக மோசமான துன்புறுத்தல்களுக்குத் தப்பி வந்தவர்கள். அவர்கள் இலண்டனுக்கு வழங்கிய விழுமியங்களின் வழி இலண்டன் அவர்களை வரவேற்று உலகுக்கு அவர்கள் அதீத தேவையில் உள்ள மக்கள் என்ற செய்தியைச் சொல்கிறது. ஆபிரிக்க மக்கள் அவர்களுக்கான கறுப்பு வரலாற்று மாதத்தில் அளப்பரிய நன்மைகளைப் பெறுகின்றார்கள். பண்பாட்டு வாழ்வில், தனிப்பட்ட வாழ்வில், நிதி வாழ்வில், உணர்ச்சிகளின் வாழ்வில், ஆன்மிக வாழ்வில் உங்களின் வரலாற்றை ஆண்டின் குறித்த காலத்தில் ஒழுங்கமைக்கப்படும் இம்மரபுரிமை மாதம் மூலம் நீங்கள் வெளிப்படுத்துவது அவற்றுக்கான ஏற்புடைமையையும் பலன்களையும் தரும்.” என்றார்.

இந்த இரண்டு உறுப்பினர்களது உரைகளும், இலண்டன் நகரின் வளர்ச்சிக்குத் தமிழர் அளித்த பங்களிப்புக்களையும், அவர்கள் நீதியை, நியாயத்தை உலகிடம் வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களாகப் புலம்பதிந்து வாழ்கின்றனர் என்பதையும் உறுதி செய்தன.

பார்க்கிங் அன்ட் டகனம், சிட்டி ஒவ் இலண்டன், நியூகாம், டவர்கம்லெட் ஆகியனவற்றின் தொழிற்கட்சி உறுப்பினரான மதிப்புக்குரிய உன்மெஸ்தேசாய் அவர்கள் தனது உரையில், இலண்டனுக்கான  தமிழர்களின் முதல் அலையாக 1983ஆம் ஆண்டு யூலை இன அழிப்பின் பின்னர் தமிழர்கள் வந்த காலத்தில், இலண்டனில் 1984இல் நடைபெற்ற முதலாவது தமிழர் ஒற்றுமைப் பேரணியில் தான் கலந்து கொண்டமையை நினைவு கூர்ந்தார்.  யாழ்ப்பாண மாநகரம் குண்டு வீச்சுக்களால் அழிக்கப்பட்டமையைக் கண்டித்து போரின் பயங்கரத் தன்மையே ஈஸ்ட்காமில் தமிழர்களை அகதிகளாகக் குடியேறவைத்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.  போரால் இரண்டு வீட்டுக்கு ஒரு வீட்டினர் தங்கள் அன்பானவர்களை இழந்து வாழும் அவல நிலையையும் எடுத்துரைத்தார். இவருடைய உரை தமிழ் மரபுரிமை மாதம் ஈழத்தமிழர்களின் அளப்பரிய தியாகங்களுக்கு ஊடாக எழுகிறது என்ற உண்மையை உலகுக்கு மேலும் தெளிவாக்கியது.

உள்ளூராட்சி நிலையில் இலண்டன் தமிழர்களுக்கு தமது வரலாற்றைப் பண்பாட்டை வெளிப்படுத்தக் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பம்,  தமிழ் இளம் தலைமுறைக்கு இந்த மாதத்தில் அவர்களது பள்ளிகளிலேயே அதனைச் செய்யும் பொறுப்பை இலண்டன் தமிழர்களுக்கு அளித்துள்ளது. தமிழர் மரபுரிமை மாதத்தை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிக்கும் ‘இலக்கு’ இதன் வழி உருவாகும் பொறுப்பைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் கூடவே வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

Exit mobile version