Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் – 157 – ஆசிரியர் தலையங்கம்

ஈழமக்களின் இறைமைப் பாதுகாப்பே மாவீரர்களின் தலைமை நோக்கு

ஈழத்தமிழர்களின் 32வது ஆண்டு மாவீரர் வாரம் இன்று 21.11.2021 இல் தாயகத்திலும் உலகில் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் தமிழகத்திலும் தொடங்குகிறது.

இந்நேரத்தில் மாவீரர் வாரத்தின் நோக்குகள் மூன்று குறித்து எடுத்து நோக்குதல் நடைமுறைப் பயனளிக்கும்.

ஒன்று ஈழத்தமிழர்களின் தேசிய வீரர்களை  நினைவழியா மரணத்தை வென்ற மாவீரர்கள் எனப் போற்றும் வரலாற்றுக் கடமையை முன்னெடுப்பது.

இரண்டு அவர்கள் எவ்வாறு ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்கான சிற்பிகளாக உள்ளனர் என்பதை அறிவூட்டுவதன் வழி சமகால ஈழத்தமிழர் வரலாற்றை உலக வரலாற்றுடன் இணைத்தல்.

மூன்றாவதும் அதிமுக்கியமானதுமானது, ஈழத்தமிழர்களின் இறைமைப் பாதுகாப்பே மாவீரர்களின் தலைமை நோக்கு என்பதை மனதிருத்தி, அவர்களே எல்லா விதமான ஈழத் தமிழர்களின் அரசியல் எழுச்சிக்கும் வித்தாக அமைய வேண்டும் என்ற உறுதியுடன் செயற்படல்.

11 1989 இல் தனித்தனியாக இல்லாமல் ஒரு நாளில் மாவீரர்கள் எல்லார்க்குமான மாவீரர் நாள் அமைய வேண்டும் என்றே பாதுகாப்புச் சிக்கல்கள் நிறைய இருந்த நேரத்தில் அடர்காட்டில் இருந்து தொடங்கப்பட்டது. இதனை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உணர்ந்து ஒரே அணியாக ஒற்றுமைப்பட்டு நின்று, மாவீரர் நாளை முன்னெடுக்க வேண்டும். உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இடையேயுள்ள விருப்பு வெறுப்புக்களை மாவீரரின் பெயரால் களைந்து பொது வேலைத் திட்டத்தில் இணைய வேண்டும். பல தளங்களில் இன்று சனநாயக வழியில் பயணிக்க வேண்டியிருந்தாலும், தனித்தன்மைகளைப் பேணும் அதே நேரத்தில் பொதுத் திட்டமொன்றின் வழி ஒற்றுமையான குரல்தரவல்ல குடை நிழல் அமைப்பொன்றை உருவாக்குவோம் என்பதே இந்த 32ஆவது ஆண்டு மாவீரர் நாளுக்கான உறுதி மொழியாக அமையட்டும். இது சனநாயகத்தின் வழி பயணிக்கும் முயற்சியில் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் தொடர்பு கொள்வதற்கான உத்தியோகபூர்வமான அமைப்பொன்றின் தேவைக்கும், பலரும் பலவாறாக உழைப்பையும், நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் போக்குகளை ஒழுங்கு படுத்தவும் உதவும்.

மேலும் இன்றும் சிறிலங்கா அரசாங்கம் மாவீரர் நாளுக்கான பாதுகாப்புச் சிக்கல்களை நிறையவே ஏற்படுத்தி ஈழத்தமிழர்களின் பண்பாட்டு மனித உரிமையை உலக நாடுகளின் மன்றத்தின் நெறிப்படுத்தல்களையும் பொருட்படுத்தாது மறுக்கும் அரசாகத் தன்னை உலகுக்கு மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்திச் சிங்கள இனவெறியையும், பௌத்த மதவெறியையும் கொண்டு ஈழத்தமிழர்களை படைபலம் மூலம் அடக்கி ஆள்கிறது. தனக்குப் பாராளுமன்றத்தில் அதீத பெரும்பான்மையுண்டு, தன் அரசாங்கம் பலமான அரசாங்கம் என ஆளத் தொடங்கிய கோத்தபாயா, இன்று தனது அரசாங்கத்தின் சமூக பொருளாதார அரசியல் ஆன்மிகப் படுதோல்விகளால், உலகின் பலவீனமான அரசாங்கமாக மட்டுமல்ல, பிறநாடுகளில் தங்கி வாழும் வங்குரோத்து அரசாகவும் தனது அரசை வெளிப்படுத்தி நிற்கிறார். இதனால் அவரது ஆட்சியைச் சிங்கள மக்களே எதிர்க்கும் நிலை இயல்பாகின்ற இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகத் தமிழர்கள் என்னும் தமிழ்பேசும் மக்கள் மேலான இனவெறி மதவெறித் தூண்டல்களை ஏற்படுத்தி தனது அரசாங்கத்தை நிலைப்படுத்த அவர் முயலக் கூடும் என்கிற பலத்த சந்தேகம் உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு உண்டு. எனவே ஈழத்தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகத் தமிழர்கள் ஒருங்கிணைந்த ஒரு குடைநிழல் அமைப்பு ஒன்று தாயகத்தில் சமகாலத்தின் முக்கிய தேவையாகிறது.

இரண்டாவது நோக்கான ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வின் சிற்பிகள் என்ற மாவீரர் நிலையை ஒவ்வொரு இளந்தமிழர்களுக்கும் பரப்புரையாக அல்ல, வரலாற்றுக் குறிப்பாக வழங்க வேண்டிய தேவையுள்ளது. இதில் இன்று ஈடுபட்டு ள்ளவர்கள் உணர்ச்சிகரமாக அல்ல, உணர்வு பூர்வமாக இயன்ற அளவுக்கு சான்றாதாரங்களுடன் இந்த அறிவூட்டலைச் செய்தால், அதுவே ஈழத்தமிழர்களின் சமகால வரலாறு எழுதும்  நெறியாகி, உலக வரலாற்றுடன் ஈழத்தமிழர் வரலாற்றையும் இணைக்கும்.

இன்று இந்தியா 13ஆவது திருத்தத்தை மீளவும் ஏதோ ஒரு வகையில் நடைமுறைப்படுத்தி, ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கிறது.  அமெரிக்காவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைச் சட்டத்தரணி என்ற வகையில் அழைத்து,  சிறிலங்காவின் அரசியலமைப்புக்குள் அடங்கலாக பொறுப்புக் கூறல் மற்றும் நிலையான அமைதியை புதிய அரசியலமைப்பு மூலம் முன்னெடுத்தல் என்கிற ஒரு முயற்சியை ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வாகக் கொண்டுவர முயற்சிக்கின்றது. அதே நேரம் சிறிலங்கா சனாதிபதியே உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களின் நிதிவளத்தை இலங்கையில் முதலிடப்பண்ணி, தனது இன்றைய அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்க புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்களுடனும் மற்றும் தனிப்பட்ட சிலருடனும்  ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அமைப்புக்குள் சில சலுகைகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைக்கான முன் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

இங்குதான் மூன்றாவதும் முக்கியமானதுமான ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்பது ஈழத் தமிழர்களின் இறைமையைப் பேணுதலும் பாதுகாத்தலும் என்ற மாவீரரின் தலைமை நோக்கு முக்கியத்துவம் பெறுகிறது.  ஒவ்வொருவரும் தமது முயற்சிகளுக்கான மூலைக்கல்லாக இதனை அமைத்துக் கொண்டு ஈழத்தமிழர் பிரச்சினைக்கான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். அதுவே உண்மையானதும் நேர்மையானதுமான தீர்வு ஒன்றுக்கான ஒரேவழி.

இவற்றை இந்த 32ஆவது ஆண்டு மாவீரர் வாரத்தில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழி உலகெங்கும் தெளிவாக்குவது காலத்தின் உடனடித் தேவையாக உள்ளது என்பது இலக்கின் எண்ணம்.

Exit mobile version