இலக்கு மின்னிதழ் 150-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 150 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 150 ஆசிரியர் தலையங்கம்:

இன்றைய சிறிலங்கா ஆட்சி என்பது, பின்வரும் மூன்று தன்மைகளைக் கொண்டதாக உள்ளது.

முதலாவது, ஈழத்தமிழர்களின் நாளாந்த உயிர் வாழ்வுக்கு அடிப்படையான நிலவளம், நீர்வளம், மற்றும் தொழில் முயற்சிகளைத் திட்டமிட்ட வகையில் பறித்து, அவர்களின் வாழ்வை நிலைகுலைக்கிறது. இதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பின் கோரிக்கை புள்ளிவிபரத்துடன் இவ்வாரத்தில் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டாவது, இதனை எதிர்த்துத் தமது உயிரையும், உடைமைகளையும், வாழ்வையும் ‘மக்களாட்சி முறைமைகளின் கீழ்’  காப்பாற்ற முயற்சிக்கும் ஈழத் தமிழர்களைக் காரணமின்றிக் கைதுசெய்து, நீதிமன்ற விசாரணையின்றித் தடுத்து வைத்துச் சித்திரவதைப் படுத்தவும், வலிந்து காணாமலாக்கவும், பயங்கரவாதிகள் எனக்கண்ட இடத்தில் சுடவும், சுட்ட இடத்தில் விசாரணையின்றி எரிக்கவும், ஒற்றையாட்சிச் சிங்களப் பெரும்பான்மைக் கொடுங்கோன்மைப் பாராளுமன்றச் சட்டவாக்கத்தால், காலத்துக்குக் காலம் சட்டத்தகுதி வழங்கி, ஈழத்தமிழர்களின் இருப்பை இழக்க வைக்கிறது. இதனை ஐரோப்பியப் பாராளுமன்றம் உட்பட்ட அனைத்துலக அமைப்புக்களின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெறுங்கள் என்ற கோரிக்கையை மறுத்து, அதனை முன்னையை விட மோசமான மனித உரிமை வன்முறைச் சட்டமாகப் புதுப்பிக்கும் சிறிலங்காவின் இன்றையச் செயல் உறுதிப்படுத்துகிறது.

மூன்றாவது, ஈழத்தமிழர்கள் மீதான இத்தகைய அனைத்துலக சட்டங்கள், முறைமைகள், ஒழுங்குகளுக்கு எதிரான ‘சிங்கள இனவெறி – பௌத்த மதவெறி ஆட்சியை’, ‘சனநாயக ஆட்சி’ எனச்  சிறிலங்கா உலகில் நிலைநாட்டி வருகிறது. வல்லாண்மை மற்றும் பிராந்திய மேலாண்மை நாடுகளுக்கு, நாட்டின் மூலவளங்களையும், மனிதவளத்தையும், நில நீர்ப்பரப்புக்களையும் அவை விரும்பியவாறு பயன்படுத்த அனுமதிப்பதன் வழியாக, அவற்றைத் தன்வயப்படுத்தி, இதனைச் சிறிலங்கா செய்கிறது.  உலக அரசியலில் எதிர் எதிரான சீனாவையும் அமெரிக்காவையும், பாகிஸ்தானையும், இந்தியாவையும் ஒரே காலத்தில் தனக்குக் கடன் வழங்கும், நிதியுதவி வழங்கும், ஆயுத உதவி மற்றும் படைகளுக்கான பயிற்சி என்பவற்றை வழங்கும், ஆதரவு நாடுகளாக்கி, சிறிலங்கா உலக அரசியலிலே நரித்தந்திர அரசாங்கம்தானே என முடிசூடி, தனது பொருளாதார வங்குரோத்து நிலையிலும் தப்பிப்பிழைத்து வருகிறது.

சிறிலங்கா உலகை ஏமாற்றும், இந்த வெற்றிக்களிப்பில், தனக்குப் பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள பௌத்த பேரினவாதிகளின் “எங்கள் சிங்கள நாடு – எங்கள் சிங்கள இனம் – எங்கள் பௌத்த மதம்” இதற்குப் பெயர்தான் ‘சிறிலங்கா’ என்ற கோட்பாட்டை, பௌத்த மடாதிபதிகளின் ஆசியுடன், தனது அரசாங்கத்தின் கொள்கையாகவும், கோட்பாடாகவும், ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற சீன பாணியிலான ஆட்சியாகப் புதிய அரசியலமைப்பின் மூலம் உறுதிப் படுத்துவதற்குப் பெயர்தான் ‘உள்ளகப் பொறிமுறை’.

தனது இந்த உள்ளகப் பொறிமுறையினை ஈழத்தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் ஏற்கின்றார்கள், இனி, வெளியகப் பொறிமுறைகள் கொண்டு, மனித உரிமை வன்முறைகள், யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த விசாரணைகள் சிறிலங்காவில் தேவையில்லை எனத், தானும் தன் சகபாடிகளும் அனைத்துலகச் சட்ட வன்முறைப்படுத்தல்களுக்கான விசாரணைகளில் இருந்து விடுபடுவதை உறுதியாக்குவதே, சிறிலங்கா அரச அதிபரின் உள்ளகப் பொறிமுறையின் கீழ் பேசவாருங்கள் என்ற புலம்பெயர் தமிழர்களுக்கான அழைப்பு.

தங்களுக்குத் தாங்களே புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளென முடிசூட்டிக் கொண்ட சிலர், சிறிலங்கா அரச தலைவரின் தூண்டலுக்கு தாங்கள் ஏங்கிக் காத்திருந்தது போல, உடன் பதில் அளித்து, இவ்வளவு அறியாமையுள்ளவர்களா? அல்லது தன்னலமுள்ளவர்களா? புலம்பெயர் தமிழர்கள் என்ற திகைப்பை ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவும், அமைதிக்காகவும் உழைக்கும் உலக அமைப்புக்களிடை தோற்றுவித்துள்ளனர்.

அதேபோல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கையில் ‘தமிழர்களின் கண்ணியமான வாழ்வை’ உறுதிப்படுத்துங்கள் என்ற குறைந்த பட்சக் கோரிக்கையை விடுத்த உடனேயே, முகத்தில் அடித்தமாதிரி அதிகாரப்பரவலாக்கல் என்ற பேச்சுக்கே  இடமில்லை என்ற ராசபக்ச சகோதரர்களின் அழைப்பை ஏற்று இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் சிறிலங்காவுக்கான பயணம் என்பது, இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கான தனது குறைந்த பட்சக் கோரிக்கைகளையும் விட்டு விலகிச் சிறிலங்காவின் நலன்சார் செயற்பாடுகளை ஈழத்தமிழர்களுக்கான தனது தீர்வாகவும் முன்னெடுக்கப் போகிறதா என்ற  கவலையை உலகெங்கும் உள்ள தமிழர்களிடை தோற்றுவித்துள்ளது.

சிறிலங்கா ஈழத்தமிழர்களுக்கு இதுதான் வாழ்வென இன்றல்ல நேற்றல்ல ஈழத்தமிழர்கள் நாடற்ற தேசஇனமாக்கப்பட்ட 22.05.1972 முதல் இன்று வரை  அரை நூற்றாண்டு காலமாக மீளவும் மீளவும் உறுதியாக்கி வருகிறது. இந்நிலையில், ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையினை இன்னுமேன் உலகும், இந்தியாவும் ஏற்க மறுக்கிறது என்பதை உலகத் தமிழர்கள் கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலான தீர்வு என்பதும், வெளியகப் பொறிமுறை வழியான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு என்பதும், ‘மட்டுமே’, ஈழத்தமிழர்களின் இருப்பும் மனித உரிமைகள் உட்பட்ட அரசியல் உரிமைகளும் உறுதிப்பட்டு, அவர்கள் இனஅழிப்பு அபாயத்தில் இருந்து விடுபடவும், அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்ட பரப்பான இந்துமா கடல் அமைதிக் கடலாகத் தொடரவும் உதவும் என்பதே இலக்கின் எண்ணம்.  தங்கள் தன்னலப் போக்குகளைக் கைவிட்டுப் புலம்பெயர் தமிழர்கள் தங்களுக்கான ஒரு குடைநிழல் அமைப்பில் இணைவதன் வழியாகத் தான் நினைத்த எவரும் தாங்கள் ஈழத்தமிழர்கள் சார்பாகப் பேசப்புறப்படும் அபாயத்தைத தவிர்த்துக் கொள்ளலாம் என்பது முக்கியமான விடயம்.