இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்

வளர்த்தலும், பெருக்கலும் என்னும் சிறிலங்காவின் புதிய உத்திகள்

ஈழத்தமிழரின் ஒற்றுமையீனத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வளர்த்தல். இந்தியாவுடன் மீளவும் நல்லுறவுகளை நயமாகவும், பலமாகவும் பேசி வளர்த்தல். இதன் வழி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் இன்றைய முயற்சிகளை முறியடித்தல் என்பது சிறிலங்காவின் புதிய உத்திகளாகவுள்ளன.

ஈழத்தமிழர்களின் வெளியகப் பலமாக உள்ள ஈழத்தமிழர் புலம்பெயர் அமைப்புக்களை உள்ளகப் பொறிமுறைகளின் கீழ் பேச வாருங்கள் என்ற அழைப்பை பொருத்தமான இடமான ஐக்கிய நாடுகள் சபையில், பொருத்தமான ஆளான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அருகில் நின்று, பொருத்தமான காலமான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் தொடக்கக் காலத்தில், சிறிலங்காவை பலவீனமான அரசல்ல அனைவரையும் உள்ளடக்க விருப்புள்ள பலமான அரசெனக் காட்டும் நோக்கில், சிறிலங்காவின் அரச அதிபர் கோட்டாபய ராசபக்ச விடுத்தார். இந்தத் தூண்டலுக்கு, எசமான் சுண்டியதும் துள்ளிக் குதித்து ஓடும் நாய்க்குட்டிகள் போல எட்டுத் தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்களும் துள்ளிக்குதித்து உடன் பதிலளித்தமை அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய ராசதந்திர வெற்றியாயிற்று.

இந்த வெற்றியை கோட்டாபய ராசபக்ச,  இந்திய வெளிவிகாரச் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா அவர்களைக் கொழும்பில் சந்தித்த போது “இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனது எதிர்பார்ப்பு. அதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக் கொள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றி புலம்பெயர் தமிழர்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் பகிரங்க அழைப்பினை நான் விடுத்தேன்”  எனக் கூறித் தனது அரசாங்கம் ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கும் பலமான அரசாங்கமே என எடுத்துரைத்து மகிழ்ந்துள்ளார். ஆனால் “பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அவசியம்” என்பதையும் இந்திய வெளியுறவுச் செயலருக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்லி, தனது அரசாங்கம் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசாங்கமே என்பதை உறுதிப்படுத்தி, அதனை வளர்க்க இந்தியாவின் நட்புறவு அவசியமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் இலங்கைக்கு வருமாறு கோத்தபாயா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த இந்தியாவுடனான உறவுப் புதுப்பித்தல் என்பது, இந்தியாவுடைய இந்துமா கடல் மேலான சீனாவின் புதிய மேலாதிக்க முயற்சிகளுக்கு, இலங்கை கடற்பரப்புக்கள் தளமாகிறது என்ற அச்சத்தினைக் குறைப்பதற்கான புதிய மூலோபாயமாகவும் கோத்தபாயாவால் முன்னெடுக்கப்படுகிறது.  இதனை  உறுதி செய்யும் முறையில் “இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் எவரும் இலங்கையைப் பயன்படுத்திக் கொள்ள நான் இடமளிக்கப் போவதில்லை” என்னும் உறுதிமொழி இந்திய வெளியுறவுச் செயலருக்கு அவரால் அளிக்கப்பட்டுள்ளது. இதுதான் இலங்கை-இந்திய உடன்படிக்கையின் சாரம். இந்த வாக்குறுதி மூலம் கோத்தபாயா இலங்கை-இந்திய உடன்படிக்கை நோக்கை தான் நடைமுறைப்படுத்துவேன் என வாக்குறுதியளித்துள்ளதும் அல்லாமல், சீனாவுடனான தொடர்புகளைக் குறித்து சந்தேகப்பட வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் இலங்கை-இந்திய உடன்படிக்கையின் வழி சிறிலங்காவின் அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்கள் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்து, செயற்படுவதன் தேவை தொடர்பிலும் தான் அக்கறையாக உள்ளதாகக் கோத்தபாயா இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளருடன் பேசியுள்ளார்.  அதேநேரத்தில் பசில் ராசபக்ச வடமாகாணசபையின் தேர்தல் மார்ச் மாதத்திற்கு முன்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு, மார்ச் மாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத் தொடருக்கு இந்தியாவின் உதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியானவுடனேயே புலம்பெயர் தமிழர்களைப் போலவே எசமானின் சுண்டு விரல் ஓசைக்குத் துள்ளிக் குதித்து மகிழும் நாய்க்குட்டியாக மாவை. சேனாதிராசாவே மாகாணசபைத் தலைவர் வேட்பாளர் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடக விளக்கம் கொடுக்கத் தொடங்கி விட்டார்.

புலத்திலும், தாயகத்திலும் உள்ள ஈழத்தமிழின ஒற்றுமையீனத்தைத் தனது அரசியலைப் பலப்படுத்துவதற்கான துரும்பாகவும், இந்தியாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் வழியான ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடுகளைத் தடுக்கும் பாதுகாப்புக் கவசமாகவும் கோட்டாபய கட்டமைத்து வருகிறார். அதே வேளை புலம்பெயர் தமிழர்கள், இந்தியர்கள் என்னும் இருதரப்பினருக்கும் இலங்கையில் முதலீட்டு வசதிகள் என்னும் கவர்ச்சி வலையை அகலவிரித்து, புலம்பெயர் தமிழரும், இந்தியாவும் முதலீட்டாளர்களாக மாறித் தமக்கான பக்கத்துணையாக அமைவதற்கான திட்டத்தை முன்மொழிந்துள்ளார். தொடர்ந்து பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டிலும் கலந்து கொண்டு, தனது அரசைப் பலப்படுத்துவதற்காகக் ஸ்கொத்லாந்துக்கும் வருகை புரியவுள்ளார்.

இத்தகைய அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கும் வேளையில் ஊடகங்களே உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டு, மக்களுக்குத் தெளிவை அளிக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ரஸ்யாவிலும், பிலிப்பைன்சிலும் பணியாற்றும் ஊடகவியலார்கள் மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகிய இருவருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான நோபெல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் “தடையற்றதும் சுதந்திரமானதுமான ஊடகமே குழப்பமற்ற எதனையும் தவறவிடாத தகவல்கள் கிடைக்க உதவும்” எனக் கூறியுள்ளதைக் கவனத்தில் கொண்டு, புலம்பெயர் தமிழர்கள் தங்களுக்கும், தாயகத் தமிழர்களுக்குமான சுதந்திரமானதும், பொருளாதாரத் தடையற்றதுமான ஊடகமொன்றைக் கட்டியெழுப்பினாலே ராசபக்ச சகோதரர்களின் சர்வதேசச் சதிவலைகளிலிருந்து ஈழத்தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும் என்பதே இலக்கின் எண்ணம்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்