Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் இலக்கு மின்னிதழ் – 158 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் – 158 – ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் – 158 – ஆசிரியர் தலையங்கம்

நம்பிக்கை தரும் மாவீரர் நினைவேந்தல்களும்; நம்பிக்கையின்மை தரும் தமிழ் அரசியல்வாதிகளும்

ஈழத்தமிழர்கள் தேசமாக எழுகின்ற தேசிய நாளாகிய மாவீரர்நாள் 1989ஆம் ஆண்டு முதலான அதன் வரிசையில் 32ஆவது ஆண்டு மாவீரர்நாளாக 27.11.2021 இல் ஈழத்தமிழர் தாயகத்திலும்,  ஈழத்தமிழர்கள் புலம்பதிந்து வாழும் உலகநாடுகள் எங்கும், ஈழத்தமிழரின் நன்றிப் பெருவிழாவாகச் சிறப்பாக இடம்பெற்றமையை ஈழத்தமிழர் வரலாறு பதிவுசெய்துள்ளது.

தாயகத்தில் இந்த மாவீரர்நாள், சிறிலங்கா அனைத்துலக நாடுகளின் மன்றத்தின் மனித  உரிமைகள் சாசனத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களின் போரால் மரணித்தவர்களை நினைவு கூருதல் என்னும் மனித உரிமையினையும், போர் நினைவுச் சின்னங்களைப் பேணுதல் என்கிற மனித உரிமையினையும் மீறும் செயல்களான, படைப்பலம் கொண்டு இனங்காணக் கூடிய அச்சத்தைத் தோற்றுவித்து, வழிபாட்டு உரிமையை மறுத்தல், நினைவுச் சின்னங்களை அழித்துப் பண்பாட்டு இனஅழிப்பின் வழி ஈழத்தமிழர்களை வரலாறற்றவர்களாக்குவது என்னும் இரண்டு அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான செயல்களையும் செய்து, மாவீரர்நாளை ஈழத்தமிழ் மக்கள் கொண்டாடுவதற்குப் பலவழிகளில் தடைகளை  ஏற்படுத்தியது.

ஆயினும் ஈழத்தமிழ் மக்கள் இம்முறை முன்னைய ஆண்டுகளைவிட இன்னும் சிறப்பாக மாவீரர்நாளை முன்னெடுத்தமை, ஈழத்தமிழர் தாயகம் உறுதியின் உறைவிடம் என்ற உண்மையை மீளவும் உலகுக்கு உறுதி செய்துள்ளது. இந்த உறுதியான மக்களை ஒரு நாடு ஒரு சட்டம் என்பதனை முன்னிலைப்படுத்தி, இலங்கைத் தீவின் இயல்பு நிலையான ஒரு தீவுக்குள் இரு தேசங்கள் என்ற வரலாற்று வளர்ச்சி நிலையை மாற்றி, ஒரு தேசமென ஆக்குவதற்கு முயற்சிக்கும் கோட்டா அரசியலால், ஈழத்தமிழ் மக்களை அவர்களின் விடுதலை வேட்கையில் இருந்து சிறிதும் அசைக்க முடியாதென்பதற்கு, மாவீரர்நாளை மக்கள் எதற்கும் அஞ்சா நெஞ்சுடன் எதிர்கொண்ட முறைமை உதாரணமாகிறது.

அதே வேளையில், உலகளாவிய நிலையிலும், புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும், உலகத் தமிழர்களும் இவ்வாண்டுக்கான மாவீரர்நாளை போற்றுதற்குரிய எழுச்சிநாள் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக முன்னெடுத்தமை, தமிழினத்தின் தமிழீழ மாவீரர்கள் மேலான பெருமதிப்பை உலகறியச் செய்துள்ளது. கோவிட் 19 வீரியத்தாக்கத்தில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் இலண்டனில் பத்தாயிரம் அளவில் மக்கள் மாவீரர் நினைவேந்தல் மண்டபத்தை நிறைத்தமை எத்தகைய தடைகளுக்கு மத்தியிலும் தமிழினம் தனக்காக வாழாது இனமானத்துக்காக வாழ்ந்த மாவீரர்களை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறைந்த தெய்வமாகவே போற்றுகின்றனர் என்ற உண்மையை உலகறிய வைத்துள்ளது.

இப்போது தாயகத்தின் எதற்கும் அஞ்சாது, மாவீரர்களைப் போற்றும் அன்பும், உலகத் தமிழினத்தின் எந்தத் தடைகளையும் தாண்டி மாவீரர்களை வழிபடும் பண்பும், ஒருங்கிணைக்கப்பட்டு, மாவீரர்கள் நினைவில் உலகத் தமிழினம் மாவீரர்களின் உயிர்த்தியாகங்களின் நோக்கை நிறைவேற்றும் கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்குதல் மூலமே ஈழத்தமிழர்களின் சமகாலப் பிரச்சினைகளை அவர்கள் சனநாயக வழிகளில் எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்களுக்கு வழங்குவது நடைமுறைச் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கையை மாவீரர்நாள் நினைவேந்தல்கள் தாயகத்திலும், உலகிலும் அதிகரிக்க வைத்துள்ளன.

மாவீரர்நாளைக் குறித்த தேசியத் தலைவர் அவர்களுடைய உரைகளில் மாவீரர்களுடைய ஈகம் போற்றப்படல் வேண்டும். மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தின் சிற்பிகள். மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கான வித்துக்கள் என்ற மூன்று முக்கிய விடயங்களை வலியுறுத்தி வந்தமையை, அவருடைய உரைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர்கள் அறிவர். தேசத்தலைவனின் இந்த மாவீரர்கள் குறித்த எதிர்வுகூறல், இன்று தாயகத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களிடை நனவாகி வருவதை மாவீரர்நாள் காட்சிகள் தெளிவாக்கியுள்ளன.

ஆனால் மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கான வித்துக்கள் என்பதனை தங்கள் தன்னலத்திற்காக மறைக்க முயலும் சில சிறிலங்காவின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் அச்சத்திலும் சந்தேகத்திலும் தாங்கள் உருவாக்க முயலும் தமது நம்பிக்கையீனத்தின் மீதான அரசியல் சிந்தனைகளை ஈழமக்களின் எழுச்சிக்கான விதைகள் எனத் தவறான விளக்கங்கள் அளித்து, அதற்குப் பிராந்திய மேலாண்மைகள் அனைத்துலக வல்லாண்மைகளின் உதவிகளை நாட முயற்சிப்பது, வங்குரோத்து நிலைக்குப் பொருளாதாரத்திலும், தகுதியற்ற அரசு என அரசியல் செயற்பாட்டு நிலையிலும், உலகப் பார்வையில் விமர்சனம் பெறும் இன்றைய கோட்டா அரசாங்கத்தை பிணையில் விடுதலை செய்யும் அனைத்துலகச் சட்ட முயற்சியாகவும் பரிணாமம் அடைந்து வருகிறது.

இந்நேரத்தில் தேசத்தலைவர் அவர்கள் 1981இல் எழுதிய கவிதையிலே மிக எளிமையான முறையில் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமை நோக்கை எடுத்துரைத்தார். “நாம் அணிவகுத்துள்ளோம் – இழந்த நாட்டை மீட்க” என்பதே அந்தத் தலைமை நோக்கு. இந்த அணிவகுப்பில் ஒளி வாழ்வு பெற்ற மாவீரர் உறுதி, இன்றும் இந்த அணிவகுப்பின் அசைக்க முடியாத பலமாக – வளமாக உள்ளது.  மாவீரர்கள் நினைவேந்தி நன்றியுடன் ஒரே தேசமாக எழும் ஈழத்தமிழர்கள், 01. தங்களின் தாயகத்தின் இறைமையின் ஏற்பும், 02. தங்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தேசியத்தின் இருப்பின் ஏற்பும், 03. தங்களுடைய என்றுமே பிரிக்க இயலாத அடிப்படை மனித உரிமையாகிய தன்னாட்சி உரிமையின் ஏற்பும், என்னும் மூவகை ஏற்புகளே, தங்களுக்கான அரசியல் தீர்வாக மாவீரர்களின் உயிர்களால் முத்திரையிடப்பட்டன என்பதை, உலகுக்குத் தெளிவுபடுத்த, தாயகத்திலும் உலகிலும், ஓரே அணியில் ஒரு பொது வேலைத்திட்டத்தில், ஒரு குடைநிழல் அமைப்பை உருவாக்குவதே மாவீரர்களின் இலட்சியமான பாதுகாப்பான அமைதியை ஈழத்தமிழர் பெற உதவும்  வழி என்பதே இலக்கின் எண்ணம்.

Exit mobile version