விரிசல் போக்கின் அதிகரிப்பும், மலையக சமூகமும் – துரைசாமி நடராஜா

மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்குதுரைசாமி நடராஜா

மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்கு

இந்திய வம்சாவளிச் சமூகம் இலங்கையில் பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்கு அதிகரித்து வருகின்றது. புதுப்புது வடிவங்களில் அவர்கள் நாள்தோறும் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. எனினும் பிரச்சினைக்கான தீர்வுகள் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றன. இதனிடையே  இந்திய வம்சாவளிச் சமூகத்தின் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்ட சம்பவம் அம்மக்களின் வாழ்வில் ஒரு சரித்திரமாகவே இருந்து வருகின்றது.

இதன் தாக்கம் இன்னும் அவர்களுடைய வாழ்வில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. ஏனைய சமூகங்களுக்கும், இம்மக்களுக்கும் இடையிலான விரிசல் போக்கு இதனால் வலுவடைந்துள்ள நிலையில், இந்திய வம்சாவளிச் சமூகம்  மேலெழும்புவதற்கு பகீரதப் பிரயனத்தை மேற்கொண்டு வருகின்றது. எனினும் உரிய இலக்குகளை எல்லா துறைகளிலும் எட்டிப் பிடிப்பதென்பது ஒரு கனவாகவே இன்னுமுள்ளது. அரசியல் அழுத்தங்கள், பேரம் பேசும் சக்தி என்பன வலுவிழந்தமையும், பிரச்சினைகளின் இழுபறிக்கும் , இலக்குகளை எய்தாமைக்கும் உந்து சக்தியாகி இருக்கின்றது.

ஐ.தே.க.வின் வக்கிர எண்ணம்

ஒரு சமூகம் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பிரசாவுரிமையும், வாக்குரிமையும்  இன்றியமையாதாகின்றன. இது சாத்தியப்படாதவிடத்து அச்சமூகத்தின் எழுச்சி தடைப்படுவதோடு, பாதக விளைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியேற்படும்.   இத்தகைய பாதக விளைவுகளைச் சந்தித்த ஒரு சமூகமாக இந்திய வம்சாவளிச் சமூகம் பெயர் பெற்றுள்ளது. 1947 இல் இடம்பெற்ற தேர்தல் இந்திய வம்சாவளிச் சமூகம் எழுச்சியை பறைசாற்றிய நிலையில், ஜ.தே.க.விற்கு தேர்தல் முடிவுகள் பேரிடியாக அமைந்தன. 95 தொகுதிகளில் 42இல் மட்டுமே ஐ.தே.க வெற்றி பெற்றது. இடதுசாரிகள் 18 இடங்களையும், இலங்கை இந்திய காங்கிரஸ் ஏழு இடங்களையும் இத்தேர்தலில் பெற்றுக் கொண்டன. காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினருடன் இணைந்திருந்தது. இந்நிலையில் இடதுசாரிகளை அச்சுறுத்தலாக கருதிய  ஆட்சியாளர்கள் பல தொகுதிகளில் இந்தியர்களின் வாக்கு இடதுசாரிகளுக்கே கிடைத்ததெனவும் எண்ணம் கொண்டனர்.

போக்கின் அதிகரிப்பும் மலையக சமூகமும்1 விரிசல் போக்கின் அதிகரிப்பும், மலையக சமூகமும் - துரைசாமி நடராஜாஇதன் விளைவு இந்திய வம்சாவளிச் சமூகம்  பிரசாவுரிமையிலும்,  வாக்குரிமையிலும் கை வைத்து, அவர்களை நிர்க்கதியாக்கும் வக்கிர எண்ணத்துக்கு வித்திட்டது. 1948ஆம் ஆண்டின் இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1949ஆம் ஆண்டின் இந்திய பாகிஸ்தானியர் (குடியுரிமைச்) சட்டம், 1949 ஆம் ஆண்டின் பாராளுமன்றச் (தேர்தல்கள் திருத்த)  சட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, இந்திய வம்சாவளிச் சமூகம் பிரசாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தெடுத்த ஐ.தே.க.இவர்களை வேரறுக்கும் கனவை நனவாக்கியது. தந்தை செல்வா உள்ளிட்டோர் இதனை வன்மையாகக் கண்டித்ததுடன், யாழ்ப்பாண அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு பிரஜாவுரிமை சட்டம் காரணமானதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.

இம்மூன்று சட்டங்களும் அமுலாக்கப்பட்ட நிலையில் மலையக தேர்தல் தொகுதிகளில் இந்தியத் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கீழிறங்கியது. 1949 – 1953இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 8087 பேர் மட்டுமே இலங்கைக் பிரசாவுரிமையைப் பெற்றுக் கொண்டனர். அத்தோடு இந்தியத் தமிழர்கள் வெற்றி பெற்றிருந்த மலையகத் தேர்தல் தொகுதிகளில் வாக்காளர் பதிவேடுகளிலிருந்து இந்தியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டமையால், அத்தொகுதிகளின் மொத்த வாக்காளர் தொகை முப்பதாயிரத்தில் இருந்து 2500, 4000, 5000 என்றவாறு குறைவடைந்ததது.

மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்குகுறிப்பாக 28000 வாக்காளர்களைக் கொண்ட நாவலப்பிட்டி தொகுதியில் 1952 இல் இத்தொகை 2000 ஆகக் குறைந்தது. இவ்வாறாக இந்தியர்களின் வாக்கு வங்கி சரிவடைந்ததால், 1952 தேர்தலில்  ஐ.தே.க. வின் கை ஓங்கியிருந்தது. ஆசனங்களின் எண்ணிக்கை 42 இல் இருந்து 54 ஆக அதிகரித்தது. இடதுசாரிகளின் ஆசன எண்ணிக்கை 18 இல் இருந்து 13 ஆக சரிவடைந்தது. இதேவேளை சுதந்திரத்தின் பின்னரான குடியுரிமைச் சட்டங்களின் தாக்கங்களால் 1964ஆம் ஆண்டளவில் நாடற்றவர்களின் தொகை 9,71,073 ஆகக் காணப்பட்டது. இந்திய வம்சாவளிச் சமூகம் இருப்பினை சிதறடித்து அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தி இந்தியாவிற்கு திருப்பியனுப்பும் முனைப்பிலேயே இனவாத ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நாட்டில் அவர்களுக்கு எதிராக அழுத்தங்களை உருவாக்கி அம்மக்களை இந்தியாவிற்கு அனுப்புவதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருந்தனர். இந்நிலையில் வேலைவாய்ப்புக்களை நாடியே இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை வந்தனர் என்பது வரலாற்று உண்மை நிகழ்வுகளுக்கு முரணானது என்பதே நேருவின் நிலைப்பாடாக இருந்தது. இந்தியத் தமிழர்கள் இங்கு நீண்ட காலமாக வாழ்ந்த நிலையில் இலங்கை குடியுரிமை பெறுவதற்கே அவர்கள் ஏற்புடையவர்கள் என்பதே இந்தியாவின் ஆரம்பகால நிலைப்பாடாக இருந்தது.

 

போக்கின் அதிகரிப்பும் மலையக சமூகமும்2 விரிசல் போக்கின் அதிகரிப்பும், மலையக சமூகமும் - துரைசாமி நடராஜா
கலாநிதி ஏ.எஸ் சந்திரபோஸ்

எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால் ஒரு தொகை இந்திய வம்சாவளிச் சமூகம் தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனடிப்படையில் 1971 இல் 25,384 பேரும், 1975 இல் 24,570 பேரும், 1978 இல் 29,438 பேரும், 1984  இல் 31,338 பேரும் தாயகம் திரும்பினர். மொத்தமாக 1971 தொடக்கம் 1984 வரை தாயகம் திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 446,338 ஆக இருந்தது. இதேவேளை 1931இற்கும் 1948இற்கும் இடையில் தாமாகவே சிலர் தாயகம் திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது இந்திய வம்சாவளிச் சமூகம் பலமிழப்பிற்கு வழிகோலியது. மேலும் இந்திய வம்சாவளிச் சமூகம் இலங்கைத் தமிழர் என்று பிழையாக பதிவினை மேற்கொண்டதாலும், இம்மக்களின் நிலைமைகள் சிக்கலாகின. 1981ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மக்களின் தொகை 1,031656 ஆக இருந்திருக்க வேண்டுமென்றும், பிழையான பதிவுகள் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்களின் எண்ணிக்கை 818,656 ஆக காணப்படுவதாக கலாநிதி ஏ.எஸ் சந்திரபோஸ் சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில் சுமார் 213,000 இந்திய வம்சாவளியினர் தம்மை இலங்கை தமிழர் என்று பதிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினரின் வகிபாகம் 1911 இல் 12.9 ஆகவும், 1963 இல் 10.6 ஆகவும் இருந்தது. எனினும் இது  2012 இல் 4.1 ஆக வீழ்ச்சி கண்டது. இது மோசமான வெளிப்பாடாகும். இதேவேளை 1931 இல் இந்திய வம்சாவளியினரின் வகிபாகம் 15.4 என்ற கூடுதல் நிலையை அடைந்திருந்தது.

பாதக விளைவுகள்

பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில் இந்திய வம்சாவளிச் சமூகம் நடைப் பிணமாக வாழும் நிலை ஏற்பட்டது. அபிவிருத்தியும் அரசியலும் பிணைந்திருக்கும் நிலையில் அரசியலில் இம்மக்கள் ஆதிக்கமிழந்ததால் அபிவிருத்திகள் தடைப்பட்டன. வாக்குரிமையற்ற நிலையில் பெரும்பான்மை அரசியல்வாதிகள் இவர்களைப் புறக்கணித்து மழைக்குக் கூட லயத்தில் ஒதுங்கத் தயங்கினர். தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்று கூறி இவர்கள் கொச்சைபப்டுத்தப்பட்டனர். அரச உத்தியோகத்திற்கு விண்ணப்பத்தைக் கூட அனுப்ப முடியாத நிலைக்கு எம்மவர்கள் தள்ளப்பட்டனர்.

ஆளுமை இழந்த சமூகத்தினர் விரக்தியுடன் வாழ்ந்தனர். தங்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்று உணர்வு அவர்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குறியாக்கியது. உரிமை, சமூக அந்தஸ்து இங்கில்லை என்ற எண்ணம் இவர்களில் ஆழமாக ஊடுருவியது. இனியும் இந்த நாட்டில் வாழ்வதால் பயனில்லை என்று மனோநிலை ஏற்பட்டதால் இந்தியா செல்ல பலர் விண்ணப்பித்தனர். இந்த நாட்டில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்ததற்கு மதிப்பில்லை என்பது நிதர்சனமாகியது.

கல்வியுரிமை, தொழில்வாய்ப்பு, நிலக் கொள்வனவு, வீட்டுவசதி, சுகாதாரம் என்பவற்றில் சாத்தியப்பாடற்ற நிலைமைகளை புரிந்து கொண்டனர். இந்நிலையில் தாயகம் திரும்ப முற்பட்டோர் தவிர இன்னும் சிலர் வடமாகாணம் சென்று குடியேறினர். நாட்டில் 1958, 1977, 1981 களில் ஏற்பட்ட இனக்கலவரங்களும் இதற்கு வலு சேர்த்தன. இவ்வாறு சென்றவர்கள் தமது அடையாளங்களை இழந்து அங்குள்ள மக்களுடன் கலந்து விடும் நிலையும் மேலெழுந்தது. தாயகம்  திரும்பியோருக்கும் எதிர்பார்த்த வாழ்வு கிடைக்காத நிலையில் அநாதைகளாகவே அவர்கள் கருதப்பட்டனர். சமூக வாழ்க்கையும் பெரும் பின்னடைவு கண்டிருந்தது.

எச்சங்கள்

1948 இல் பிரசாவுரிமை, வாக்குரிமையைப் பறித்த ஐ.தே.க.மீண்டும் 1988 இல் அவற்றை வழங்கி தமது பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டது. இதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் ஆதிக்கநிலை இம்மக்களின் அபிவிருத்திக்கு வலு சேர்த்தது. பேரம் பேசும் ஆளுமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உந்துசக்தியானது. அரசதொழில் வாய்ப்புகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஓரளவு மேன்மை கண்டன. பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டு கல்வித்துறை தலைநிமிர்ந்தது. எனினும் ஆரம்பக்கல்வி கண்டுள்ள வளர்ச்சியை  உயர்கல்வி எட்டவில்லை. மருத்துவ, சுகாதார, வீட்டு வசதிகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். அரச தொழிற்றுறையில் எம்மவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவதோடு, நிர்வாகத்துறையிலும் உரிய இடமளிக்கப்பட வேண்டும்.

என்னதான் கூறினாலும் பிரசாவுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டதன் வடுக்கள் இன்னும் மாற்றமடையவில்லை. ஏனைய சமூகங்களை எட்டிப் பிடிக்க வேகமான பாய்ச்சல் அவசியமாகவுள்ளது. இந்நிலையில்  இம்மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு விசேட உதவிகளை அரசாங்கம் வழங்கி இம்மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முற்பட வேண்டும் என்ற கோஷங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்த ஏற்பாடு யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்படுவதோடு அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்களின் அழுத்தங்கள்  இதற்கு அவசியமாகும். அத்தோடு ஏற்கனவே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அரசியலில் இருந்து காலகட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு அதிக அழுத்தத்தை வழங்கி பேரம் பேசும் சக்தியை மையப்படுத்தி உரிமைகள் பலவற்றையும் மலையக மக்களுக்கு தொண்டமான் பெற்றுக் கொடுத்தார். எனினும் தற்போது இந்நிலை சாத்தியமாகாத நிலையில் இனவாத கட்சிகள் இன்று மலையகத்தின் அரசியல்  ஆதிக்கத்தை பின்தள்ளி இருக்கின்றன. இந்த மோசமான நிலை மலையக மக்களின் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் மலையக அரசியல்வாதிகள் தமக்கிடையேயான் வேறுபாடுகளைக் களைந்து மக்கள்  சக்தியை மையப்படுத்தி மீண்டும் அரசியலில் கோலோச்ச வேண்டிய நிலை அவசியமாகவுள்ளது