பொருளாதார நெருக்கடி நீடித்தால் மார்ச்சில் சிவில் யுத்தம் ஏற்படும்; லக்‌ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடி நீடித்தால்நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடித்தால் எதிர்வரும் மார்ச் மாதமாகும்போது சிவில் யுத்தம் ஒன்று ஏற்படுவதனை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்த பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சிறுபான்மை சமூகங்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் அரசுக்கு ஒருபோதும் சர்வதேசத்தினால் நிதி கிடைப்பதில்லை என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு, பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. யும் எதிர்க்கட்சிகளின் கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்ததுடன் அவ் மேலும் கூறுகையில்,

“இந்த அரசு ஆட்சிக்குவந்த அனைத்து காலங்களிலும் சர்வதேசத்துடன் முரண்பட்டே வந்திருக்கின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த 2012, 2013, 2014 காலப்பகுதியில் தொடந்து மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் சபை எமது நாட்டுக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்திருந்தது.

தற்போது கோட்டாபய ராஜபக்‌ஷ அரசும் மஹிந்த ராஜபக்‌ஷ சென்ற வழியிலேயே செல்கின்றது. இந்த அரசின் முதலாவது வருடம் ஐ. நா. மனித உரிமை பேரவை எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தது. அதில் நாங்கள் பாரியளவில் தோல்வியடைந்தோம். மத்திய கிழக்கு நாடுகளும் எமக்கு எதிராக வாக்களித்திருந்தன. அதனால் அமைச்சர் ஜீஎல் பீரிஸ் அடுத்த முறை மனித உரிமை பேரவைக்கு செல்லும்போது எமக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தவேண்டும்.

எமது நாடு மீதான அவர்களின் குற்றச்சாட்டாக சிவில் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரை நியமிப்பதே இருந்தது. ஏனைய நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவராக மருத்துவர் ஒருவரை நியமிக்கும்போது எமது நாட்டில் இராணுவ தளபதியே அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதனால் இதற்கு பதிலளிக்க தயாராகியே அடுத்த கூட்டத்தக்கு செல்லவேண்டும்.

அடுத்ததாக நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும்.  20ஆவது திருத்தம் மூலம் நீதிமன்ற சுயாதீனம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் புதிய அரசியலமைப்பினூடாக சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாவது அமைச்சர் மனித உரிமை பேரவைக்கு தெரிவிக்கவேண்டும். சுயாதீன நீதிமன்றம் அமையாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை எதிர்பார்க்கமுடியாது. அதேவேளை இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக அரசின் உறுப்பினர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவில் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

அதேபோன்று சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் நாட்டுக்கு எதிராகவே உள்ளன. கொரோனா தொற்றுக்குள்ளாகி முஸ்லிம் இனத்தவர் ஒருவர் மரணித்தால் அந்த சடலம் 150 கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு சென்றே அடக்கம் செய்யப்படவேண்டியுள்ளது.. இது அந்த சமூகத்துக்கு வழங்கும் தண்டனை. முஸ்லிம் மக்கள் பல நூறு வருடங்கள் எம்முடன் இணைந்து வாழ்பவர்கள்.கண்டியில் இருக்கும் சில முஸ்லிம்களின் பெயரின் முதல் எழுத்து சிங்கள பெயராகவே இருக்கின்றது. எமது அரசில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை மதித்து நடப்பதை நாங்கள் உள்ளத்தால் காட்டி இருக்கின்றோம். குறிப்பாக தேசிய கீதத்தின் ஒரு பகுதியை நாங்கள் தமிழ் மொழியில் இசைத்தோம். அதன் மூலமே சர்வதேச சமூகத்துக்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் சிறுபான்மை சமூகங்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் அரசுக்கு ஒருபோதும் சர்வதேசத்தினால் நிதி கிடைப்பதில்லை அதனை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் திருப்தியில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று அதுதொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தெரிவுசெய்யப்பட்டே நிறைவேற்றப்படுகின்றன. குற்றப்புலனாய்வு பிரிவில் சதித்திட்டம் இருப்பதாகவும் கர்தினால் மெல்கம் ஆண்டகை தெரிவித்திருக்கின்றார். அவரின் கூற்று உண்மை. ஏனெனில் தாக்குதல் இடம்பெறுவதற்கு 4நாட்களுக்கு முன்னரே அது தொடர்பான தகவல் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்திருந்தும் அதன் பிரதானி நிலந்த ஜயவர்த்தன, அதுதொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்றால் அது சதித்திட்டம் இல்லையா? ஆனால் தகவல் கிடைத்த முதலாவது நபர் இன்று சாட்சியாளராகி இருக்கின்றார். நிலந்த ஜயவர்த்தனவுக்கு வழக்கு தொடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கின்றது. ஆனால் அதனை செய்யவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என ஐ. நா. தெரிவித்திருக்கின்றது. அவர்கள் தெரிவிக்கும் திருத்தம் நியாயமானது. கைது செய்யப்படுபவரை 24மணி நேரத்த்துக்குள் நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தவேண்டும் என தெரிவிக்கின்றனர். அதேபோன்று தடுப்புக்காவல் கட்டளையில் 19 மாதங்கள் தடுத்துவைக்கலாம். அதனை குறைக்குமாறே தெரிவிக்கின்றனர். இந்த திருத்தங்களை கொண்டுவந்தால், அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

இதேவேளை நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. அதனால் எமது கடன் தவணைகளை நீடித்துக்கொள்ள சர்வதேசத்துடன் கலந்ரையாடவேண்டும். இந்த நிலை நீடித்தால் மார்ச் மாதமாகும்போது சிவில் யுத்தம் ஒன்று ஏற்படுவதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 பொருளாதார நெருக்கடி நீடித்தால் மார்ச்சில் சிவில் யுத்தம் ஏற்படும்; லக்‌ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை