இலங்கை சீர்குலைந்தால், இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும் – விமல் வீரவன்ச

இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை கொண்டுள்ளது. இந்த நிலைமையில் கடன்களை விட முதலீடுகளை எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைதந்துள்ள சீன இராணுவத்தின் யுவான் வாங் 5 கப்பலுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துவெளியிட்ட அவர், எமது கடல், வான்வெளியே எம்மை ஏனைய நாடுகளுடன் இணைக்கிறது. அவற்றில் இறையாண்மை அடிப்படையில் எமக்கு சில உரிமைகள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் அதனை பேணவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

இந்து சமுத்திரத்தில் அமைதி நிலவ வேண்டும். யுத்த களமாகவோ, எதிரிகளின் கூடாரமாகவோ மாறிவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.

நாம் பொருளாதார ரீதியில் பலமாகவோ, பலவீனமாகவோ இருந்தாலும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும். சிலர் இதனை உளவு கப்பல் என்றனர். நாம் இதனை தொழில்நுட்ப கப்பல் என்கிறோம்.

சீனா எம்முடன் நீண்டகாலமாக நட்புறவை கொண்டுள்ளது. நாம் பொருளாதார ரீதியில் விழுந்துள்ள சந்தர்ப்பங்களிலும் எமக்கு கைகொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.

நாம் எதனை செய்ய வேண்டும் என்று எமக்கு ஒருபோதும் சீனா அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்ள சீனா ஒருபோதும் செயற்பட்டதில்லை.

இந்த சந்தர்ப்பங்களில் கடன்களை விட முதலீடுகளால் அதிகம் சீனா எமக்கு உதவுமென நாம் எதிர்பார்கிறோம்.
இலங்கை சீர்குலைந்தால், இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும், ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச்செல்லமுடியும் என நாம் நம்புகிறோம் என்றார்.