Tamil News
Home செய்திகள் புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்-தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்தியநிலையம்

புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்-தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்தியநிலையம்

இலங்கையில் வரும் 20ஆம் திகதி நடைப்பெறவுள்ள புதிய ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் ரணில் வெற்றிபெற்றால் 21 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில்  ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய  ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடைமுறைகள்  ஆரம்பித்துள்ள நிலையில், யார்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்கள் வரும் 19ம் திகதி பெறப்படுகிறது. 20ம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும். அன்றே யார் ஜனாதிபதி என்பது தெரிந்துவிடும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி அதன் பிறகு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக  பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க பதவியை விட்டு விலக வேண்டும் என்றே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது   ரணில் விக்கிரமசிங்க  பதில் ஜனாதிபதி பதவியை வகித்து வருகின்றார். மேலும் புதிய ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்பதற்கு  முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் “20ஆம் திகதி நடைப்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றால் 21 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபடுவோம். மக்களின் குரலுக்கு செவிசாய்த்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். ரணிலை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும்” என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version