Tamil News
Home செய்திகள் ஆக்கிரமிக்கும் சிலைகளும் அழிக்கப்படும் சிலைகளும்-அகிலன்

ஆக்கிரமிக்கும் சிலைகளும் அழிக்கப்படும் சிலைகளும்-அகிலன்

திடீரென வைக்கப்படும் சிலைகள்தான் இலங்கையில் இப்போது பேசுபொருளாகியிருக்கின்றது. சிலைகள் தகா்க்கப்படுவதும் புதிய சிலைகள் இரவோடிரவாக வருவதும் இடம்பெறுகின்றது.

மக்கள் அனைவரும் எல்லாவற்றையும் மறந்துபோய் இப்போது சிலைகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றாா்கள். அரசாங்கம் சிங்கள மக்களையும் திசைதிருப்புகின்றது, தமிழ் மக்களையும் திசைதிருப்புகின்றது என்று விமா்சகா் ஒருவா் தெரிவிக்கும் கருத்தையும் புறக்கணிக்க முடியவில்லை.

வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கேஸ்வரா் விக்கிரம் சில வாரங்களுக்கு முன்னா் இனந்தெரியாத குழு ஒன்றினால் தகா்க்கப்பட்டது. இந்தப் பகுதிக்கு உரிமை கொண்டாடக்கூடியவா்கள் யாா் என்பது நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையிலேயே இந்த விக்கிரம் தகா்க்கப்பட்டிருக்கின்றது.தொல்லியல் பகுதியாக அடையாளம் காணப்பட்ட இந்தப்பகுதியில் புதிய கட்டுமானங்களை அமைப்பதோ அல்லது நீக்குவதோ தடைசெய்யப்பட்டிருந்த நிலையில்தான் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

முல்லைத்தீவில் குருந்துாா்மலைப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடா்ந்து வெடுக்குநாறிமலை இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இவை தொடா்பில் பொலிஸாா் மட்டுமன்றி நீதிமன்றமும் மௌனமாகத்தான் இருக்கின்றது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போா் முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து, மற்றொரு வடிவத்தில் அரசாங்கம் முன்னெடுக்கின்றது. முன்னா் படையினா் போரை நேரடியாக முன்னெடுத்தாா்கள். இப்போது அரசாங்கத்தின் இயந்திரங்களான திணைக்களங்கள் இந்தப் போரை முன்னெடுக்கின்றன.இதில் தொல்லியல் திணைக்களம் முக்கியமானது.வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றனவும் குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் கண்டு அங்கிருந்து தமிழரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றன.

தொல்லியல் திணைக்களம் முற்றுமுழுதைாக சிங்கள புத்திஜீவிகளையே உறுப்பினா்களாகக் கொண்டுள்ளது. இதற்கு இரண்டு தமிழ்ப் பேராசிரியா்கள் உள்வாங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த போதிலும், அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என சம்பந்தப்பட்ட பேராசிரியா்கள் தெரிவித்திருக்கின்றாா்கள். இனவாத அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் செயற்படவில்லை என்பதைக் காட்டிக்கொள்வதற்கான ஒரு உபாயமாகவே இந்ச் செய்தியை திட்டமிட்ட முறையில் அரசாங்கம் வெளியிட்டதாகக் கருதப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த தீவுப் பகுதிகளை மையப்படுத்தியதாக தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அண்மைக்காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது.

நயினாதீவைப் பொறுத்தவரையில் அதன் பழமையும் பெருமையும் அனைவருக்கும் தெரியும். ஆனால், அங்கு அமைக்கப்பட்ட பௌத்த விகாரையைத்தான் முக்கியமானதாகக் கூகுள் வரைபடத்தில் காட்டிக்கொள்வதற்கான உபாயங்களையும் அரசாங்கம் வகுத்துச்செயற்படுகின்றது. கச்சதீவில் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பாரிய புத்தா் சிலையில் பெரும் சா்ச்சையை உருவாக்கியிருக்கின்றது.

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை சிங்கள பௌத்த அடையாளமாகக் காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப்பின்னணியில் சைவத் தமிழா்கள் இப்போது எதிா்வினையாற்றத் தொடங்கியிருப்பதுதான் அரச தரப்பையும் சிங்கள – பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் திணைக்களங்களையும் சங்கடத்துக்குள்ளாக்கியிருக்கின்றது. அவா்கள் இலக்கு சைக்கும் பல இடங்களில் நடராஜா், சிவன், சிவலிங்கம் என சிலைகள் வைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகள் தமது ஆளுகைக்குட்பட்டவை என்பதைக் காட்டிக்கொள்வதற்கான ஒரு உபாயமாக இதனை அவா்கள் முன்னெடுக்கின்றாா்கள். அதாவது இருப்பைப் பாதுகாப்பதற்கு இவ்வாறு செய்ய வேண்டியிருக்கின்றது.

இதில் தற்போது சா்ச்சையை ஏற்படுத்தியிருப்பது யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினை நாகபூசணி அம்மனைப் பிரதிபலிக்கும் சிலை. நயினாதீவு உட்பட அனைத்துத் தீவுகளுக்கும் செல்வதற்கான ஒரே நுளைவாயிலாக இருப்பது பண்ணைப் பகுதிதான்.தீவுப் பகுதிக்குச் செல்பவா்கள் மனதில் நாகபூசணி அம்மன் பதிய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த சிலை அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கலாம். அல்லது புத்தா் சிலை ஒன்று அங்கு வைக்கப்படலாம் என்பதால், அதனை முந்திக்கொண்ட செயற்பாடமாகவும் இருக்கலாம்.

புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் இந்தச் சிலை பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கம்பீரமாகக் காணப்பட்டபோது, அது இந்தளவுக்கு சா்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறும் என யாரும் எதிா்பாா்த்திருக்கமாட்டாா்கள்.

இந்த சிலையை அமைத்தது யாா் என்பது இன்றுவரை தெரியவில்லை. ஆனால், அது திடீரென அமைக்கப்பட்ட ஒன்றல்ல என்பது அந்தச் சிலையைப் பாா்க்கும்போது தெரிகின்றது. மிகவும் நோ்த்தியாக – சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் அந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் சிலை அமைக்கப்பட்ட பின்னா் உருத்திரசேனை என்ற அமைப்பினா் அதற்கு பாலாபிஷேகம் செய்யப்போய் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டாா்கள். அந்த அமைப்பின் உறுப்பினா்கள் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்குள்ளாக்கப்பட்டனா்.

அந்த சிலையை செய்தது யாா் என்பதோ அல்லது அங்கு கொண்டுவந்து வைத்தது யாா் என்பதோ தமக்குத் தெரியாது எனத் தெரிவித்த உருத்திரசேனை அமைப்பினா், பாலாபிஷேத்தை மட்டுமே தாம் செய்ததாகக் கூறியிருக்கின்றாா்கள்.

இந்த சிலையை அகற்றுவதற்காக பொலிஸாா் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. அதனையடுத்து நீதிமன்ற உத்தரவை அவா்கள் பெற்றாா்கள். கடந்த செவ்வாய்கிழமை இந்த வழக்கு யாழ். நீதிமன்றத்துக்கு வந்தபோது, மே மாதம் 4 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், என்.சிறீகாந்தா உள்பட 15 வரையான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். முறைப்பாட்டாளர் இன்றி பொலிஸார் இந்த வழக்கை தொடுக்க உரிமை இல்லை என்ற கருத்தை சட்டத்தரணி சுமந்திரன் முன்வைத்து வாதத்தை தொடக்கினார்.

தொலைபேசி மூலம் தமக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் வன்முறைகள் ஏதும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தே தாம் வழக்கு தொடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சட்டத்தரணிகள், சுமந்திரன், சிறீகாந்தா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். சிலை வைக்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் ஆனால், அதற்கு உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்வரும் மே 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.இந்தவிவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து செயற்பட்டிருந்தமை மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது. இந்து அமைப்புக்களும் விட்டுக்கொடுப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுடன்தான் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தாா்கள்.

பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அம்மன் சிலை குறித்து புதிய வரலாற்றுத் தகவல் ஒன்றை இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவா் மறவன்புலவு சச்திதானந்தம் தெரிவித்திருக்கின்றாா். அவா் தெரிவித்திருப்பது இதுதான்-

“யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்த அருள்மிகு நாகபூசணித் திருவுருவம் வரலாற்றுச் சிறப்புடைது. மகாவம்சம் கூறும் மகோதரனும் குலோதரனும் அவன் முன்னோரும் வழிபட்டது. அத்திருவுருவத்தை முதலில் அழித்தவர் போர்த்துக்கேயக் கத்தோலிக்கர். ஒல்லாந்தர் காலத்திலும் அருள்மிகு நாகபூசணித் திருவுருவத்தை மீளமைக்கவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் பண்ணையில் அருள்மிகு நாகபூசணித் திருவுருவத்தை மீளமைத்தனர். மகாவம்சம் கூறும் நாக மன்னர்களான மகோதரனும் குலோதரனும் முன்னோரும் வழிபட்ட திருவுருவத்தையே மீளமைத்தனர்.

பண்ணைப் பாலம் கட்ட முன்பு, படகில் மண்டைதீவு, வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு செல்வோர் பண்ணைக் கடலைக் கடந்தனர். அருள்மிகு நாகபூசணி திருவுருவத்தை வணங்கி வழிபட்டே படகுகளில் ஏறினர். அங்கிருந்து படகுகளில் வந்து கரையிறங்கி யாழ்ப்பாணம் செல்வோரும் வணங்கி வழிபட்டு மாநகர் புக்கனர்.” இவ்வாறு மறவன்புலவு சச்சி சொல்லியிருக்கின்றாா்.

சிலைகள் தமிழ் சிங்கள மக்களை அவா்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து திசை திரும்ப வைக்கின்றது. தமிழ்த் தலைமைகள் அரசியல் தீா்வு, அதிகாரப் பரவலாக்கல் என்பவற்றை விட்டுவிட்டு உள்ள சிலைகளைப் பாதுகாப்பதிலும், புதிய சிலைகளை வைப்பதிலும் கவனத்தை குவித்துள்ளாா்கள். சிங்கள மக்களும் அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து சற்று விலகி தொல்பொருள் திணைக்களத்தின் சாகசங்களைப் பாா்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றாா்கள். பொருளாதார நெருக்கடியால் பாதுக்கப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சிங்கள தேசியவாதத்தை வலுப்படுத்துகின்றது.

Exit mobile version