அடையாள உறுதிப்பாடும் அரசியல்வாதிகளின் வகிபாகமும்

அடையாள உறுதிப்பாடும் அரசியல்வாதிகளின் வகிபாகமும்அடையாள உறுதிப்பாடும் அரசியல்வாதிகளின் வகிபாகமும் – துரைசாமி நடராஜா

இலங்கையின் அரசியல் களம் நெருக்கடி நிலைக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில் மலையக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியத்துடனும், விழிப்புடனும் செயற்பட்டு இம்மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முற்பட வேண்டும் என்று வலியுறுத்தல்கள் பலவும் இடம் பெற்று வருகின்றன. அத்தோடு சந்தர்ப்பவாத அல்லது சுயநலவாத அரசியல் முன்னெடுப்புகள் இடம் பெறுமாயின், இதனால் மலையக தமிழர்களின் நெருக்கீடு மேலும் அதிகரிக்குமென்றும், அரசியல் மற்றும் சமூக ரீதியில் அவர்கள் ஓரங்கட்டப் படுவதோடு சமூகத்தின் எதிர் காலம் கேள்விக் குறியாகி விடுமென்றும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

ஒரு சமூகம் அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதற்கும், தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கும் அச்சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் இன்றியமையாததாகும். இந்த அரசியல் பிரதிநிதித்துவமானது வெறுமனே நாற்காலிகளைச் சூடேற்றும் பிரதிநிதித்துவமாக அமைந்து விடாமல் செயற்றிறன் மிக்கதாகவும், ஆக்க பூர்வமானதாகவும் அமைதல் வேண்டும். இவ்வாறு அமையும் பட்சத்திலேயே அச்சமூகம் பல்வேறு சாதக விளைவுகளையும் பெற்றுக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. எனினும் சமூக அபிவிருத்தி கருதி மேற்கொள்ளப்படாத, சுயநலவாதத்தை மையப்படுத்திய அரசியல் முன்னெடுப்புகளால் எதுவிதமான சாதக விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என்பதும் நிதர்சனமாகும். இந்த வகையில் மலையக அரசியல் பிரதிநிதித்துவங்கள் அல்லது அரசியல்வாதிகள் தொடர்பில் நீண்ட காலமாகவே விமர்சனங்கள் பலவும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

மலையக அரசியல்வாதிகளின் நிலை

அமைச்சு பதவி இருந்தால்தான் மலையக தமிழர்களுக்கு உரிய சேவையாற்ற முடியும் என்று கூறுகின்ற  மலையக அரசியல்வாதிகள் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் இந்த அமைச்சுப் பதவியின் ஊடாக எந்தளவு சேவையினை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக் கின்றார்கள்? என்று மலையக மக்கள் பலரின் மனதிலும் நியாயமான கேள்வி தொக்கு நிற்கின்றது. அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு பந்தா காட்டி வரும் இவர்கள், அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது பலரினதும் வருத்தமாக இருக்கின்றது.

ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட்டு எல்லாவற்றையும் பெற்றுத் தருவதாக மக்களுக்கு நம்பிக்கையூட்டுபவர்கள் பின்னர் இம்மக்களைப் புறக்கணித்து செயற்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இது ஏறிய ஏணியையே எட்டி உதைக்கின்ற ஒரு இழிவான செயலுக்கு ஒப்பானதாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒரு விடயமல்ல. மலையக வரலாற்றில் இது தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. ஆட்சியாளர்களுடன் இணைந்து தமது குடும்பத்தை வளப்படுத்துவதில் காட்டுகின்ற ஆர்வத்தை இந்தப் பச்சோந்திகள் சமூக அபிவிருத்தியில் காட்டத் தவறி வருகின்றமை வருந்தத்தக்க ஒரு விடயமேயாகும்.

அடையாள உறுதிப்பாடும் அரசியல்வாதிகளின் வகிபாகமும்மலையக மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, சமூக நிலை, தொழில் வாய்ப்பு எனப் பலவும் இதில் உள்ளடங்கும். பெருந்தோட்டத் தொழிலாளர் களில் பலர் இன்னும் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட லயத்துக்குள்ளேயே முடங்கிப் போய் தமது வாழ்க்கையினைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் நலன்கருதி தனிவீட்டுத் திட்டம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் ஆமை வேகத்திலேயே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சமகால கொரோனா சூழ்நிலைகளுக்கு மத்தியில் இணையவழிக் கல்விக்கான போதிய வாய்ப்பில்லாத நிலையில் மலையக மாணவர்களின் குறிப்பாக பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிபோய்க் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே கல்வித் துறையில் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் மலையகக் கல்விக்கு கொரோனா மேலும் ஒரு சாட்டையடியைக் கொடுத்திருக்கின்றது. இது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதைக்கு ஒப்பானதாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுத்து விட்டதாக அரசியல் மற்றும் தொழிற் சங்கவாதிகள் மார்தட்டிக் கொண்டுள்ள போதும், தோட்டங்களில் கம்பனியினர் வேலை நாட்களை குறைவாகவே வழங்கி வருகின்றனர். அத்தோடு ஏனைய தொழில் ரீதியான கெடுபிடிகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பால் எவ்வித பயனுமின்றி தொழிலாளர்கள் சிக்கல் நிலைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இளைஞர்களின் தொழில் நெருக்கீடுகள்

ஆசிரியர் தொழிலிலேயே அதிகளவான இளைஞர் யுவதிகள் உள்ளீர்க்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏனைய நிர்வாகத்துறை சார்ந்த தொழில்களுக்கு மலையக இளைஞர் யுவதிகள் உட்புக முடியாதவாறு கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டுள்ளன.

இவ்வாறாக இளைஞர்களின் தொழில் நெருக்கீடுகள் பலவற்றுக்கும் மலையக மக்கள் முகம் கொடுத்து வருகின்ற நிலையில்,  மலையக அரசியல்வாதிகள் வழமை போன்றே இப்போதும் வாய்மூடி மௌனித்திருப்தையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பவர்களும், எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கின்ற மலையக அரசியல்வாதிகளும் தமது சமூகம் சார்ந்த மக்களின் அபிவிருத்தி கருதி  உரிய குரல் கொடுக்கின்றார்களா? என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

அடையாள உறுதிப்பாடும் அரசியல்வாதிகளின் வகிபாகமும்இந்த அரசியல்வாதிகள் எவ்வகையிலேனும் தனது வாரிசினை அரசியலில் உள் நுழைப்பதிலும், தமது எதிர்கால அரசியல் இருப்பினைத் தக்க வைத்துக் கொள்வதிலுமே ஆர்வம் செலுத்தி வருகின்றனர் என்பது கசப்பான உண்மையாகும். இதிலிருந்தும் விலகிச் சென்று சமூக நோக்கில் சிந்தித்துச் செயற்பட விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே முன்வந்துள்ளனர் என்பதையும் இங்கு கூறியாதல் வேண்டும்.

சமகாலத்தில் மலையக அரசியல் மற்றும் தொழிற் சங்கவாதிகளிடையே காணப்படும் ஐக்கியமின்மை, தனித்தச் செயற்பாடுகள், பிரித்தாளும் நடவடிக்கைகள் என்பன மலையக தமிழர்களின் எழுச்சிக்கு குந்தகமாகி இருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியப்பாடுகள் மேலெழுந்திருக்கின்றன. இது தொடர்பில் பலரும் தமது நிலைப்பாட்டினை வலியுறுத்தி இருக்கின்றனர். இதனிடையே 12 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தேசிய பெருந்தோட்ட சம்மேளனம் ஒன்றினை உருவாக்கும் முயற்சிகளில் களமிறங்கி வருகின்றன. இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு நோக்குகையில் மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி சிறுபான்மைச் சமூகத்தவர்கள் இவ்வாறு இணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. ஏற்கனவே மலையகத்தைப் பொறுத்த வரையில் தேர்தல் காலத்தின்போது பல கட்சிகளும் இணைந்து கூட்டுகள் உருவாக்கப்பட்டன. எனினும் இக்கூட்டுகள் பெரும்பாலும் நீண்ட காலம் தாக்குபிடிக்க வில்லை.

தேசிய பெருந் தோட்ட சம்மேளன உருவாக்கம்

அடையாள உறுதிப்பாடும் அரசியல்வாதிகளின் வகிபாகமும்இதனிடையே தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பன இணைந்து சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும் களத்தில் இருப்பது மகிழ்ச்சிக் குரிய ஒரு விடயமாகும்.

இதனிடையே தேசிய பெருந் தோட்ட சம்மேளன உருவாக்கம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற இணைய வழிக் கலந்துரையாடலில் பல முடிவுகள் எட்டப் பட்டிருக்கின்றன.

அவையாவன:-

அனைத்து தொழிற் சங்கங்களுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் தொழிற்சங்க தேசிய பெருந்தோட்ட சம்மேளனம் ஒன்றை ஏற்படுத்துதல். தொழிற்சங்கங்களை வழிநடத்த வழிகாட்டல் குழு ஒன்றினை ஏற்படுத்துதல். தொழில் ஆணையாளரின் உதவியுடன் தொழிலாளர்களுக்கு எதிரான அநீதிக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். தேசிய ரீதியில் இயங்கும் ஏனைய தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல். தொழிலாளர்களின் உரிமை மீறல்கள் தொடர்பில் தனிநபர் வழக்குகளை முன்வைத்தல், எதிர்வரும் காலங்களில் தொழிலாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்குகளுக்கு அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்படுதல். தொழிற் சங்கங்களை ஒன்றிணைத்தும் தனித் தனியாகவும் மாவட்ட ரீதியாக தொழில் அடக்கு முறைக்கு வழக்குத் தாக்கல் செய்தல் போன்ற விடயங்கள் தேசிய பெருந்தோட்ட சம்மேளன இணையவழிக் கலந்துரையாடலில் எட்டப் பட்டிருக்கின்றன.

அடையாள உறுதிப்பாடும் அரசியல்வாதிகளின் வகிபாகமும்அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஐக்கியப்பாடு மிகவும் அவசியமாக உள்ள நிலையில் ஒரு புரிந்துணர்வுடன் அவை மேற்கொள்ளப்பட வேண்டும். செயற்பாடுகள் சுயநலம் கருதாததாகவும், ஆக்க பூர்வமானதாகவும் அமைதல் வேண்டும். அதைவிடுத்து பழைய தொழிற் சங்கங்களின் பாணியில் விட்டுக் கொடுப்பின்றி, முரண்பாடு களுடன், இழுபறி நிலையில் நிலைமைகள் தொடருமானால் அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

எனவே பழைய மொந்தையில் புதிய கள் என்றவாறு நிலைமைகள் அமையாது தொழிலாளர்களின் உரிமைகளுக்கு வித்திடுவதாக புதிய தேசிய தொழிற்சங்க சம்மேளனம் அமைதல் வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாகும். இதேவேளை  மக்களின் வாக்குகளை பெற்றுக்  கொண்டு சுயநலத்தை மையப்படுத்தி செயற்படும் அரசியல்வாதிகள் பொதுநல நோக்கில் செயற்பட வேண்டும். இல்லையேல் அடுத்த தேர்தல் அத்தகையோர்களுக்கு சாட்டையடி கொடுப்பதாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

ilakku-weekly-epaper-140-july-25-2021