Tamil News
Home செய்திகள் அரசியலமைப்பிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் 

அரசியலமைப்பிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு   உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

குறுகிய காலத்திற்கு  நான் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க உள்ளேன்.மக்கள் அரசியலில் பாரிய வித்தியாசத்தை எதிர்பார்க்கின்றனர்.அதற்கு என்னால் இயலுமான விடயங்களை செய்வேன்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை புதிய ஜனாதிபதியின் பொருட்டு  முன்னெடுக்கவுள்ளேன்.

நாட்டில் சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றேன் அறவழிப்போராட்டங்களை முன்னெடுக்க மக்களுக்கு உரிமை  உள்ளது.

இருந்தாலும், புதிய ஜனாதிபதி தெரிவின் போது சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க முனைகின்றனர்.இதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.

மேலும் பாசிசவாத முறையில் சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு துப்பாக்கிகளும் குண்டுகளும் காணாமற்போயுள்ளதை சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு தரப்பினர் 24 பேர் காயமடைந்திருப்பதை நினைவுகூர்ந்த அவர், உண்மையான அறவழிப்போராட்டக்காரர்கள் அவ்வாறான வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளர்ச்சிக்காரர்களுக்கும் அறவழிப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாகவும் கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எனினும், அரசியலமைப்பிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என அவர் மேலும் உறுதிமொழி வழங்கினார்.

Exit mobile version