“என் ஆயுள் முடிவடைவதற்குள், என் மகனை ஒருமுறையாவது ஆரத்தழுவிட வேண்டும்” – பாலநாதன் சதீஸ்

மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் ஜெயலட்சுமி அம்மா

“மகனே! உன் முகத்தைப் பார்க்க வேண்டும், அம்மாட்ட வந்துவிடடா.  கடவுளே உனக்கு கருணை இல்லையா?”   காற்றில் மிதந்து வந்த அந்த முதுமைத் தாயின்  கண்ணீக் குரல்  காதிற்குள் நுழைந்தது. சட்டென என் கவனக் குவிப்பு அந்தத் தாயின் பக்கம் திரும்பியது.

IMG 20210623 210403 “என் ஆயுள் முடிவடைவதற்குள், என் மகனை ஒருமுறையாவது ஆரத்தழுவிட வேண்டும்” - பாலநாதன் சதீஸ்

வவுனியா காணாமல் போனோரின் போராட்டக் கொட்டகையில் ஓர் தாய்.  சுருங்கிய நெற்றியுடன் சிவந்த கண்களில் இருந்து கண்ணீர் சொரிய  “நான் ஆசைப்பட்டு பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த என் மகன். இன்று எட்டாக்கனியாகி விட்டான். எவ்வளவு  போராடியும் என் மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லையே.

இலங்கை அரசாங்கமே! என் அழுகுரல் கேட்கலையா? என் பிள்ளையை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்….” என கூறி மண்ணில் புரண்டு விழுந்து அழுது கொண்டிருந்தார். அந்தக் கணம் அந்தத் தாயின் அவல நிலையைப் பார்த்ததும் என்ன செய்வதென்று புரியவில்லை. அந்தத் தாயின் வேதனையை  எழுதிவிட   என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அவரைப் பார்க்கும் போது என் மனம் கலங்கியது. சரி என்னால் முடிந்த உதவியைச் செய்யலாம் என உடனே அந்தத்  தாயின் பக்கம் சென்று “அம்மா” என்றேன். அந்தத்  தாய், மகனைத்  தொலைத்த ஏக்கத்தோடு என் பக்கம் திரும்பினார். “அம்மா அழாதையுங்கோ” என சமாதனப்படுத்தி விட்டு என்னால் முடிந்தளவு ஆறுதல் கூறி, அந்தத் தாயின் மனநிலையை  மாற்றுவதற்காக,  சற்று பேச்சுக் கொடுத்தேன்.

IMG 20210623 210434 “என் ஆயுள் முடிவடைவதற்குள், என் மகனை ஒருமுறையாவது ஆரத்தழுவிட வேண்டும்” - பாலநாதன் சதீஸ்

அப்போது அந்தத் தாய்,  தன் கையில் வைத்திருக்கும்  காணாமல் போன மகனின் புகைப்படத்தைக் காட்டி, அவரைப் பற்றிக் கூறத் தொடங்கினார்.

“எனது பெயர் கந்தசாமி ஜெயலட்சுமி. நான் தற்போது சாஸ்திரி கூழாங்குளத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு நான்கு பிள்ளைகள். அதில்  எனது மூத்த மகன்  கந்தசாமி பார்த்தீபராஜன். காணாமல் ஆக்கப்பட்டு விட்டார். என் மகனைத் தொலைத்த நாள் தொட்டு இன்றுவரை தேடிக் கொண்டுதான் இருக்கிறன். என்ர பிள்ளை எங்கே இருக்கிறான் எண்டும் தெரியவில்லை.

எனது கணவனைப் பிரிந்து 35 வருடங்கள் ஆகிவிட்டன. கணவனைப் பிரிந்த சோகம் என்னை வாட்டினாலும், என்ர பிள்ளைகள் என்னோடு தான் இருக்கிறார்கள் என்ற ஆறுதலோடு  இருந்தேன். ஆனால் என்ர மூத்த பிள்ளை   ஒரு  நாள் கூட என்ன விட்டிட்டு இருக்க மாட்டான். இப்போ அம்மா இல்லாமல்  எப்படி கஸ்ரப்படுறானோ?

யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து   கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவன். 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கடைக்கு வேலைக்கு போனவன், வீட்டுக்குத் திரும்பி வரவேயில்லை. எல்லா இடமும் தேடிப் பார்த்தும் என்ர பிள்ளையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்  நிலையத்தில் என் மகனைக் காணவில்லை என முறைப்பாடு செய்தேன். ஆனால் ஒரு பதிலும் இல்லை.

என்ர பிள்ளை காணாமல் போகும் போது அவனுக்கு  23 வயது.  அவன் காணாமல் போய் இன்று 25 வருடங்கள் ஆகிவிட்டது. என்ர பிள்ளையை நான் எப்பிடியாவது பார்க்கணும். அவன் வேலைக்குப் போய்  உழைச்சுத் தான் எங்களைப் பார்த்தவன். இண்டைக்கு அவன் இல்லாம சரியா கஸ்ரபடுகிறன். என்னை ஆறுதல்படுத்தி, என்னைப் பார்த்த என்ர மூத்த  பிள்ளை எனக்கு வேணும். எப்பிடியாவது அவன் அம்மாட்ட வந்திடுவான் என்ற நம்பிக்கையில் தான் இப்பவரை   வவுனியாவில் தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரால் நடாத்தப்படுகின்ற  போராட்டக் களத்தில்  கலந்து கொண்டு, நானும்  போராடிக் கொண்டிருக்கிறன்.

IMG 20210623 210622 “என் ஆயுள் முடிவடைவதற்குள், என் மகனை ஒருமுறையாவது ஆரத்தழுவிட வேண்டும்” - பாலநாதன் சதீஸ்

என் மகனைக் கண்டுபிடிச்சுடுவன் என்ற நம்பிக்யில் தான் இருக்கிறன்.  ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ர  இறுதி ஆசை, என் ஆயுள் முடிவடைவதற்குள் என் மகனை ஒரு முறையாவது பார்த்து, ஆரத்தழுவிட வேண்டும். அவனோட என்ர கடைசிக் காலத்தைக் கழிச்சிட வேணும். என்ர பிள்ளை வருவான். ஒருநாள் அதற்காகத் தான் காத்திருக்கிறன்.”

என அந்தத் தாய் கண்ணீரோடு கூறிய ஒவ்வொரு சொல்லும் மகனைப் பிரிந்து  அவர் அனுபவிக்கும் துன்பங்களும், வேதனைகளையும் வெளிக் காட்டுவதாக இருந்தது.

இலங்கை நாட்டில் பல தசாப்தங்களாக இருந்த ஆயுத யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்திருக்கின்றது. எனினும், இலங்கையில்  வடக்கு, கிழக்கு பிரதேசங்களில்   காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்ந்து  கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப் பட்டோரின் குடும்ப உறவுகள்  தமது உறவுகளைத்  தேடி அலைந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.

வீடுகளுக்குச் செல்லாமல், உணவுகளின்றி, வீதியிலே புகைப்படங்களையும், பதாதைகளையும் ஏந்தியவாறு  தம் உறவுகளுக்காகக் காத்திருக்கின்றார்கள். தம் உறவுகளைத்  தொலைத்து விட்டு அவர்களின் வருகைக்காகக் காத்திருப்பவர் களுக்குத் தான் காத்திருப்பின் வலி என்னவென்று தெரியும்.

இனியும் இலங்கை அரசாங்கம், நல்லிணக்கம் என்று பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் நல்லாட்சி அரசாங்கமாகி விட முடியாது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும், காணாமலாக்கப் பட்டவர்களின் உறவுகளுக்குமான உண்மை,  மற்றும் மீள நிகழாமையை இலங்கை அரசு  உறுதிப்படுத்தி, காணாமலாக்கப் பட்டவர்களுக்கான நீதியினை விரைவாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அவர்களின் கண்ணீருக்கும், எதிர் பார்புக்களுக்குமான விடையை விரைவாகத் தேடிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் பெற்றுக் கொடுக்கும் நீதிதான் உங்கள் அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்பதை உறுதிப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தாய் பெயர் : கந்தசாமி ஜெயலட்சுமி

மகன் பெயர்: கந்தசாமி பார்த்தீபராஜன்

இடம் – சாஸ்திரி கூழாங்குளம்

காணாமல் போன திகதி – 1996 ஏப்ரல் 22