Tamil News
Home செய்திகள் இலங்கை :“தவறிழைத்து விட்டேன் ஆனால் பதவி விலகப் போவதில்லை“ -கோட்டாபய ராஜபக்சே

இலங்கை :“தவறிழைத்து விட்டேன் ஆனால் பதவி விலகப் போவதில்லை“ -கோட்டாபய ராஜபக்சே

தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே இன்று ஒப்புக்கொண்டுள்ளதோடு அதே சமயம், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு பொறுப்பேற்று தாம் பதவி விலகப் போவதில்லை என்றும்  கூறியுள்ளார்.

மேலும் இன்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் கருத்து தெரிவித்த கோட்டாபய, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் கோபம் தமக்கு நன்கு புரிகிறது என்று கூறினார்.

அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாகவும், நாட்டின் நன்மைக்காக முன்னோக்கிச் செல்ல அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும். தவறிழைத்து விட்டேன் என்றும்  அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒரு திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) மிகவும் முன்னதாகவே அணுகியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு மத்தியில், மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக மிகவும் வருந்துவதாக கூறிய அவர்,வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரிசையில் நின்று நேரத்தைச் செலவழிப்பதால் ஏற்படும் வேதனையும் அசௌகரியமும் கோபமும் மிகவும் நியாயமானது என்று தெரிவித்தார்.

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான தனது பொறுப்பாகும் என்றும்  எந்த சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிப்பதாக கூறினார்.

மேலும், “அரசுக்கு உதவுவதற்காக பொது மற்றும் தனியார் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவுடன் இணைந்து கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.எண்ணெய், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுள்ளோம். மேலும், உலக வங்கி எரிவாயு, உரம், பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளது.நாட்டு மக்களுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு தற்போது நாட்டுக்கு கிடைக்கப் பெற்றாலும், சமீப நாட்களாக அது முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நாம் தற்போது செயற்பட்டு வருகின்றோம்”  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version