மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்

மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்

முல்லைத்தீவு  மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்டக்களத்தில் தன் மகனுக்காக நீதி கேட்டு போராடுபவரே புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வசிக்கும் இராதாகிருஷ்ணன் மாரியாயி.

54 வயதான இராதாகிருஷ்ணன் மாரியாயி, இந்த  போராட்ட களத்தில்  சுருக்குப்  பையினை கையில் வைத்திருந்தவாறு ஏக்கத்துடன் அமர்ந்திருப்பார். தள்ளாடும் முதுமையிலும் நோய்கள் உடலை தாக்கினாலும்,  தன் மகனை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என  இரவு பகலாக  மன வைராக்கியத்தோடு  போராடி வருபவர்.

மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்தன்  பிள்ளை இருக்கின்றாரா? இல்லையா? என்பது அவருக்கு  தெரியாது. ஆனால் தன் மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்  நாள் தோறும் போராட்டக் களத்திலே காத்திருக்கின்றார்.

தன்  பிள்ளை காணாமல் போனதன் பின்   அந்த  தாய்படுகின்ற வேதனைகளும், கஸ்டங்களும் யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

“என்ரை பெயர் இராதாகிருஷ்ணன் மாரியாயி. எனக்கு ஏழு பிள்ளைகள் அதில் மூன்றாவது மகன் இராதாகிருஷ்ணன் மோகன்ராஜ். இவர் தான் காணாமல் போன மகன் இவருக்கு கீழே நான்கு பெண்பிள்ளைகள்  எனக்கு இருக்கின்றனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமடைந்த போது, கைவேலியிலிருந்து இடம்பெயர்ந்து இருந்தோம். 2009.02.20 அன்று இராணுவம் நாம் இருந்த இடம் நோக்கி முன்னேறிக்கொண்டு வரும் போது, நாங்கள் ஆனந்தபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தோம். அப்போது எமக்கு முன்னும் பின்னுமாக பிள்ளையள் வந்தவை. திடீரென இராணுவத்தினர் நடந்து வந்துகொண்டிருந்த எங்களைப் பார்த்து, அனைவரையும் நிலத்திலே இருக்குமாறு சொன்னவர்கள். அப்படியே நிலத்தில் இருந்து விட்டுத் திரும்பிப் பார்க்கும் போது எனது மூன்றாவது மகனைக் காணவில்லை. இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததனை நான் கண்டிருந்தேன். பின்னர் மகனைக் காணவில்லை. எழும்பிச் சென்று பிள்ளையைத் தேடிப் பார்க்கவும் இராணுவத்தினர் விடவில்லை.

மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்மகனை தொலைத்த வேதனையில் இருந்தனாங்கள். பின்னர் இராணுவத்தினர் பேருந்துகளில் அனைவரையும் ஏற்றி ஆனந்தகுமாரசாமி முகாமிற்கு எங்களை  கொண்டு சென்று முகாமில் விட்டிருந்தார்கள். முகாமிற்கு வந்தும் பிள்ளையை தேடிப்பார்த்தனாங்கள்.ஆனால்  என்ரை பிள்ளை கிடைக்கவில்லை.

என்ரை பிள்ளை காணாமல்போய் 12 வருடங்கள் ஆகியும் இதுவரை எந்த தகவலுமே இல்லை. மகன் காணாமல் போன அன்று  முதல் இன்றுவரை எல்லா இடத்திலேயும் போய் தேடிக்கொண்டிருக்கிறன்.

காவல்துறையிலும் முறைப்பாடு செய்தோம். ஆனால் என்ரை பிள்ளை இருக்கிறானா இல்லையா எண்டு கூட எனக்குத் தெரியவில்லை.

மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்என்ரை பிள்ளை காணாமல் போகும் போது 17 வயது  கள்ளம் கபடம் எதுவுமே தெரியாத வயது. என்ரை பிள்ளை இப்போ எங்க எப்பிடி இருக்கிறானோ தெரியலை. என்ரை பிள்ளையத் தேடிப் போகாத கோவில் இல்ல, தேடித் திரியாத இடமுமில்லை. எங்கை தேடியும் அவனை என்னால் கண்டுபிடிக்க முடியலை. என்ரை பிள்ளை எங்கயோ உயிரோட இருக்கிறான் என்ரை பிள்ளைய கண்டுபிடிச்சு தாருங்கள்.

வறுமைச் சுமை ஒரு பக்கம்,  என் பிள்ளையைத் தொலைத்த வலி இன்னொருபக்கம். காணாமல் போன அண்ணன் திரும்பி வந்து விடுவான் என காத்திருக்ககும் நான்கு தங்கைகள் மறுபக்கம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்ர பிள்ளை வருவான், ஒருநாள் அம்மாவைத் தேடி வருவான் என்ற  நம்பிக்கையில் தான்  மகனுக்காகப் போராடி வாறன்.  காணாமல் போனவர்களுக்கான போராட்டம் எங்கு நடந்தாலும், என் மகன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியாக போவன்.

என்னைப் போல எத்தனையோ பெற்றோர்கள், பிள்ளையள் என்றோ ஒருநாள் எங்களிடம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் போராடி கொண்டிருக்கின்றோம்.” என்று தன் கதையைக் கூறி முடித்தார் அந்தத் தாய்.

3 4 மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் - பாலநாதன் சதீஸ்நான்கு தசாப்தங்களாக இருந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்திருக்கின்றது. எனினும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்ந்து  கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள்  தமது உறவுகளை  தேடியலைந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். இவர்களுக்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை. இவர்களுக்கான எந்த தீர்மானங்களையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டது. மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. மக்கள் சமாதானமாகவே வாழ்கின்றார்கள் என நினைத்து கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை. யுத்த நேரத்தில் தம் பிள்ளைகளை தொலைத்து விட்டும் , இராணுவத்தினரிடம் கையளித்துவிட்டும் பல வருடங்களாக போராடி கொண்டிருக்கும் உறவுகளின் நிலை. இவற்றினை இலங்கை அரசு கவனத்தில் எடுத்து இவர்களுக்கான நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.