‘புதிய அரசாங்கத்துக்கு தலைமைதாங்க, நான் தயார்’-இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இல்லாத புதிய அரசாங்கத்துக்கு தலைமைதாங்க, தான் தயாராக இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  

“தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா? இல்லாவிட்டால் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய கொள்கையை அடிப்படையாகக்கொண்ட அரசியலில் ஈடுபடுவதா? இவ்விடயத்தில் முக்கியமான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.”

“நான் பிரதமர் பதவியை நிராகரித்தேன். நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்காமல், அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ராஜபக்ஷ குடும்பத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உள்ளடங்கலாக அக்குடும்பத்தைப் பாதுகாப்பவர்களின் கூட்டணியின் என்னை இணையுமாறு கோரவேண்டாம். அதனைச்செய்வதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை.”

“ஆனால் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாமல் ஒழித்து, அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவதன் மூலம் நாட்டுமக்களுக்கு சேவையாற்ற நான் தயாராக இருக்கின்றேன். புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கும், அரசியல் பயணத்திற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்”, என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Tamil News