Tamil News
Home ஆசிரியர் தலையங்கம் 2023 ல் உலகினர்க்கு அமைதியும் ஈழத்தமிழருக்கு இறைமைவழி பாதுகாப்புடனான அமைதியும் உண்டாகுக | ஆசிரியர் தலையங்கம்...

2023 ல் உலகினர்க்கு அமைதியும் ஈழத்தமிழருக்கு இறைமைவழி பாதுகாப்புடனான அமைதியும் உண்டாகுக | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 215

2023 ல் உலகினர்க்கு அமைதியும் ஈழத்தமிழருக்கு இறைமைவழி பாதுகாப்புடனான அமைதியும் உண்டாகுக

2023ம் ஆண்டு உலகில் பாதுகாப்புடன் கூடிய அமைதியும் வளர்ச்சிகளும் நிறைந்த ஆண்டாக அமையவும் ஈழத்தமிழர்கள் இறைமை வழி பாதுகாப்புடனான அமைதியும் வளர்ச்சியும் காணவும் “இலக்கு” வாழ்த்துகின்றது.
2022 உலக வரலாற்றில் திருப்புமுனைகள் பல கொண்ட ஆண்டாக நிறைவு பெறுகிறது. அமெரிக்காவில் முன்னாள் அரசதலைவர் டிரம்பின் மக்களாட்சித் தத்துவங்களுக்கு எதிரான அராஜகப் போக்கில் இருந்து விடுபடும் ஆண்டாகத் தொடங்கிய 2022 உக்ரேனில் அமெரிக்க ஆதரவுடன் உக்ரேன் மக்கள் ரஸ்யாவுடைய படைபல ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுத எதிர்ப்பை நிலைநிறுத்தத் தொடங்கி பத்து மாதங்களாக உலக ஒழுங்கையே உலுப்பும் போராகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“டிப்ளோமட்டிக்” ஆய்வு இதழின் ஆசிரியர் பற்றிக் வின்ரூர் ‘வரலாற்றுப் பழிவாங்கல்’ என வர்ணிக்கும் உக்ரேன் போர் அமைதிப்பேச்சுக்குத் திரும்பாத நிலைக்கு ரஸ்யாவும் உக்ரேனும் மட்டுமல்ல காரணம் யேர்மனி, பிரான்சு, போலந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் பல்டிக் நாடுகள் ஆகியனவும் காரணமாக உள்ளன. இன்றைய உலகில் உக்ரேன் தேசிய பிரச்சினை மட்டுமல்ல ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை உட்பட உலகின் முரண்பாடுகள் பலவும் முடிவுக்கு வராதவாறு அனைத்துலக வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் பாதிப்புற்ற மக்களின் இறைமையாளர்களாகத் தங்களை முன்னிறுத்தி ‘மக்கள் இறைமை’ யின் அடிப்படையில் தீர்வுகள் நோக்கிய முறைமைகளை மாற்றியமைப்பதே இன்றைய உலகின் பாதுகாப்பின்மைக்கும் அமைதியின்மைக்கும் மூலகாரணங்களாக அமைகின்றன.
இலங்கைத் தீவில் 2022 ஈழத்தமிழர்களை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு மூலம் அடிமைப்படுத்தும் சமுக பொருளாதார சமூக ஆன்மீக போக்குகளைக் கொண்ட சிறிலங்கா அரசாங்கம் இரண்டு பெரும் திருப்புமுனைகளைச் சந்தித்தது. ஒன்று கோட்டபாயா தலைமையில் 2022இல் திகழ்ந்து கொண்டிருந்த ராசபக்ச குடும்ப ஆட்சியை சிங்கள மக்களின் காலிமுகத்திடல் மக்கள் போராட்டங்கள் மூன்று தளங்களில் அகற்றின. முதலாவது தளமாக 2022 ஏப்ரல் 3இல் பிரதமர் ராசபக்சாவைத் தவிர ஏனைய 26 அமைச்சரவை உறுப்பினர்களையும் பதவி விலக வைத்து நாட்டின் பாராளமன்றத்தின் நிர்வாகத்தைச் செயலிழக்க வைத்தது. இரண்டாவது தளமாக 2022 யூன் 9 இல் பசில் ராசபக்சாவை அவரது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவைத்தது முதல் சிறிலங்கா ஜனாதிபதி மாளிகையை 2022 யூலை 9இல் மக்கள் கைப்பற்றிய வரலாறு வரை சரியாக ஒரு மாதம் சிறிலங்காப் பாராளுமன்றத்தின் சட்டவாக்க நிர்வாக சட்ட அமுலாக்க வலுக்கள் மூன்றையும் செயலிழக்க வைத்தனர். இந்த வரலாற்று நிகழ்வின் நாலாவது நாளில் 2022 யூலை 13 புதன்கிழமை அதிகாலை சனாதிபதி கோட்டபாயா மனைவியுடன் மாலைதீவுக்கு விமானம் மூலம் தப்பி ஒடிய மூன்றாவது தளவெற்றியை அரகலிய காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் பெற்றனர்.
ஆயினும் உலக வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் ராசபக்ச குடும்பமும் அதன் அதரவு அரசியல்வாதிகளும் படையினரும் தப்பிப்பிழைக்க கோத்தபாயா நியமித்த ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையைப் பலப்படுத்தி உறுதிசெய்து, நீதிக்காக உண்மைக்காக சனநாயகத்திற்காகப் போராடிய அரகலிய போராட்டக்காரர்கள் சிறைக்குள்ளும் சிறைக்குள் இருக்க வேண்டிய ராசபக்ச குடும்பத்தினரும் அவர்களின் கைக்கூலி அரசியல்வாதிகளும் படையினரும் வெளியிலும் வாழும் நிலையை 2022 இல் இலங்கையின் அரசியலின் எதார்த்தக் காட்சியாக உலகைக் காணவைத்துள்ளனர். சிறிலங்காவின் ரணில்விக்கிரமசிங்கா உட்பட்ட பிரதமர்களும் ஜனாதிபதிகளும் உருவாக்கிய இலங்கைத் தீவின் இன்றைய நிதிநெருக்கடிக்கு உதவுகிறோம் என்ற பெயரில் உக்ரேன் பாணியிலேயே ஈழத்தமிழர்களும் சிங்களவர்களும் தங்கள் தங்கள் இறைமையின் அடிப்படையில் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும் வளர்ச்சிக்குமான தீர்வு எதனையும் எட்டிவிடாதவாறு அனைத்துலக வல்லாண்மைகளும் மேலாண்மைகளும் தங்களது விருப்புக்களை நிறைவேற்றும் நாடாக இலங்கையை முதன்மைப்படுத்தி வருகின்றனர். உக்ரேன் போலவே நாட்டின் மக்களால் தீர்வு காணப்பட இயலாத உலகின் மற்றொரு நாடாக இலங்கை திகழ்கிறது.
ரணில் விக்கிரமசிங்கா தனது அரசுக்கு உலக ஆதரவைப் பெறும் 2023 இன் முதல் முயற்சியே சனவரி 10 முதல் நான்கு நாட்கள் சிறிலங்கா சனாதிபதிக்கும் சிறிலங்காப்பாராளுமன்றத் தமிழ்ப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகள். 04.02.2023 இல் இலங்கையின் 75வது சுதந்திரதினத்தில் இந்தத் தமிழ்ப் பேச்சுவார்த்தையாளர்களின் ஆசியுடன் தான் இலங்கையின் இனப்பிரச்சினக்குத் தீர்வு கண்டுவிட்டதாகவும் உறுதியான அரசாகத் தனது அரசு மாறிவிட்டதாகவும் பெப்ருவரி இறுதியில் இந்தியாவுடனும் சீனாவுடனும் தனித்தனியாக கடன் மறுசீரமைப்புக் குறித்துப் பேசப்போவதாகவும் உலகினை மயக்கிடும் பிரகடனங்களைச் செய்வார். தனது முயற்சிகளுக்கு இந்தியா முழுஆதரவு எனக் காட்ட 75வது சுதந்திரதின விழாவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களையே முதன்மை விருந்தினராக அழைத்தும் உள்ளார். யப்பானின் அனுசரணையுடன் இந்திய சீனா விதந்துரையின் பேரில் அனைத்துலக நாணயநிதியத்தின் நிதிக்கடனையும் திட்ட உதவிகளையும் பெற்று 2024 முடியும் வரை தான் நிலைபெறுவதே ரணில் விக்கிரமசிங்காவின் முதற்காலாண்டுக்கான திட்டமாகவுள்ளது. இலங்கையை அனைத்துலக வர்த்தகர்களுக்குக் கூறுகூறாக விற்பதன் மூலம் பெறும் வெளிநாட்டுப் பணத்தின் மூலமும் உலகநாடுகளிடம் தெண்டிப் பெறும் கடன்களாலும் குடிமக்களிடம் அவர்களின் பட்டினி நிலையிலும் தண்டிப் பெறும் வரிகளாலும் தற்காலிகமாகச் சில ஆண்டுகள் தங்களின் பதவிகளில் மகிழ்வதே இன்றைய ஜனாதிபதி உட்படச் சிறிலங்கா அரசியல் தலைமைகளின் இலக்கு என்பதை இலக்கு 2023 தொடக்கதிலேயே மக்களுக்குக் கூறி, 2023இல் ஈழத்தமிழ் சிறிலங்காப் பாராளுமன்றத் தலைமைகள் ஈழத்தமிழரின் இறைமையினை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதற்கான ஒரு குடைநிழல் அமைப்பை உருவாக்கினால் மட்டுமே இந்த சிக்கலான 2023 இன் அரசியல் பயணத்தை ஈழத்தமிழர்களுடைய அரசியல் இறைமையை உறுதி செய்யும் பயணமாக மாற்றலாம் என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

Exit mobile version