ஒவ்வொரு மாவீரர் வரலாறும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் – புதுக்கோட்டைப் பாவாணர்

 

ஒவ்வொரு மாவீரர் வரலாறும்

ஒவ்வொரு மாவீரர் வரலாறும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்

புதுக்கோட்டைப் பாவாணர்

தேசியத் தலைவர் இந்தியாவில் இருந்த சமயம் அவருடனும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுடன் பழகியவரும், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை தமிழகத்தில் பராமரித்து, அவர்களுக்கு உதவி செய்தவரும், இதனால் சிறைவாசம் அனுபவித்தவருமான புதுக்கோட்டைப் பாவாணர் அவர்கள், விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், தேசியத் தலைவர் தொடர்பாகவும், மாவீரர்கள் தொடர்பாகவும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

பள்ளிக் காலத்திலேயே தூய தமிழ் உணர்வு பெற்றமையால், எனது பெயரையே மாற்றினேன். எனது இயற்பெயர் சிங்காரம். இந்தப் பெயர் தூய தமிழாக இல்லாததால் அதை நீக்கி விட்டு, தமிழே உலகின் முதல்மொழி, தமிழனே உலகின் முதல் மாந்தர் என்று ஆய்வு வழி நிறுவிய ஐயா பாவாணர் அவர்களின் பெயரை எனக்குச் சூட்டிக் கொண்டேன்.

தமிழ்நாடு வெள்ளைக்காரனுக்குப் பின்னர் இந்திக்காரனுக்கு அடிமையாக இருந்தது என்பதை ஆய்வு செய்து அறிந்தோம். அதனால் இந்தியத் துணைக்கண்டம் எல்லோருக்கும் சம உரிமை தர வேண்டும். அல்லது இதிலிருந்து பிரிய வேண்டும் என்று நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலே சொன்னோம். அப்போது பிரிவினைத் தடைச் சட்டம் போட்டார்கள். பேசினாலே 14 ஆண்டுகள் சிறை.

தமிழீழச் சிக்கலுக்குப் பின்னர் தான் தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணர்ந்தார்கள். அதுவரையில் அவர்கள் எல்லோருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற பெருந்தன்மையுடன் வாழ்ந்தார்கள். உலகத்தோடு சேர்ந்து வாழவேண்டும் என்பது தான் தமிழறிஞர்களின் எண்ணம். தமிழீழப் போராட்டத்தின் பின்னர்தான் நமக்கென்றொரு நாடு இல்லையே. உலகத்தில் தமிழனுக்கு என்றொரு நாடில்லையே. கேட்க நாதியில்லையே. படையில்லையே என்று எல்லோரும் பரிதவித்தார்கள். இந்தியப்படையிடம் உதவி கேட்டார்கள். ஆனால் இந்தியப்படை தமிழர்களை அழித்தது. தமிழீழத்தை அழிக்கிற வேலையிலே இறங்கியது. எம்மை அடிமைப்படுத்துவதில் உறுதியாய் நின்றது.

அப்போதுதான் மக்கள் நினைத்தார்கள். தமிழனுக்கு என்று ஒரு படையில்லை. வீதிக்கு வீதி காட்டிக் கொடுக்கும் ஐந்தாம் படை இருக்கிறது. ஏன் படையில்லை என்றால், தமிழனுக்கு என்றொரு நாடில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போரே எங்கள் கண்களைத் திறந்தது. இங்கே இருக்கிற தலைவர்களைத் தோலுரித்துக் காட்டியது. யாரும் நம்பும்படியான தலைவர்கள் ஒருவரும் இல்லை.

இவற்றை நாங்கள் அந்தக் காலத்திலேயே சொன்னதால், இன்று எங்களை வியப்போடு பார்க்கிறார்கள். என் வரலாற்றுப் பதிவு இன்றைக்கு அவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இன்றைக்கு தமிழ்நாடு முழுவதிலும் தமிழினம், தமிழ் என்கிற உணர்வு பொங்கிப் பெருகி வருகின்றது. இந்தப் பணியில் நானும் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்.

தமிழ்மொழி அதிக வேர்ச் சொற்களைக் கொண்ட மொழி என்பதால், தமிழில் எதையும் மொழிபெயர்க்கலாம். மொழிநூல் ஆய்வு என்பது ஒருவகையான அறிவியல்.

இப்படியாகத் தமிழுடன் தொடர்பு பட்டதனாலேயே தமிழீழம் பற்றி எனக்குத் தெரியவந்தது. செல்வா என்கிற செல்வநாயகம், அமீர் என்கிற அமிர்தலிங்கம் பேசிய காலங்கள், மங்கையற்கரசி பேசிய காலம். அமிர்தலிங்கம், மங்கையற்கரசி ஆகியோரை சென்னை, திருச்சியில் கொண்டு வந்து பேச வைத்தவர்களில் நானும் ஒருவன். பின்னர் அவர்களும் விடுதலையில் உண்மையாய் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் வந்தது.

ஒவ்வொரு மாவீரர் வரலாறும்ஆயுதத்தை ஆயுதம் கொண்டு எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது நமக்குப் புரிந்தது, அதற்குப் பின்னர் விடுதலை இயக்கங்களோடு நமக்குத் தொடர்பு ஏற்பட்டது. பாவாலர்ஏறு பெருஞ்சித்தனார் இல்லத்தில் ஒரு நாள் எல்லாப் போராளிகளும் ஒன்றாக இருந்த காலத்தில் அவர்களை நான் சந்தித்தேன். முகுந்தன்(உமாமகேஸ்வரன்), பிரபாகரன் ஆகியோர் ஒன்றாக இருந்த காலத்தில் அவர்கள் எனக்குப் பழக்கமானார்கள். பாவாணர் ஐயா மறைவின் போது அங்கு வந்திருந்த அவர்களை நான் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சந்தித்தேன். நான் பல்வேறு இயக்கங்களுடன் நெருங்கிப் பழகியிருந்தேன். அந்தக் காலத்தில் ‘லங்கா ராணி’ என்று நூல் எழுதிய அருளர் அவர்களையும் நான் சந்தித்தேன்.

உலகத்தில் தமிழனுக்கு என்றொரு நாடு வேண்டும். யார் மூலமாகவேனும் ஒரு நாடு கிடைக்க வேண்டும் என்பதால், போராளிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது எல்லோருக்கும் உதவியாய் இருந்தோம். அவர்கள் முகாம்கள் அமைப்பதற்கு உதவியாய் இருந்தோம். பல்வேறு காலகட்டங்களில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றினோம். இவர்களை நேரில் பார்த்ததும், இவர்களோடு உறவாடியதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. எல்லா இயக்கங்களுடனும் உறவாடிய போதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் போராட்டத்தில் உறுதியாய் இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்னர் முழு நேரமாய் அவர்களோடு நாங்கள் இருந்தோம்.

மிகப்பெரிய தலைவரான பிரபாகரன் அவர்களை தம்பி என்று கூப்பிட்ட பெருமை எனக்கு இருக்கிறது. அது மகிழ்ச்சியாய் இருக்கிறது. அகவையாலே நான் மூத்தவர் என்பதால், அவர் எனக்குத் தம்பியானவர். பின்னர் அவர் எனக்குத் தலைவரானவர். பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு தரப்பினரும் எங்கள் பொறுப்பில் தான் இருந்தார்கள். பின்னர் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தோம். தமிழ்நாடு முழுவதும் அந்த நெருப்பை நாங்கள் கொழுத்தி விட்டோம். இதற்காக பலதடவைகள் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். 1996 தொடக்கம் 2004 ஆண்டுவரையான 8 ஆண்டுகள் காலத்தில் 4 ஆண்டுகள் சிறையில் என்னை வைத்தார்கள்.

நம்முடைய செய்திகள் உண்மையான செய்திகள், நம்முடைய செய்திகள் புலிகளின் செய்திகள், நம்முடைய செய்திகள் தமிழீழச் செய்திகள், தமிழருக்கான செய்திகள் என்று உரைத்ததால், ஒருவரையும் கைநீட்டி அடிக்காத என்னை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பில் போட்டார்கள். இந்தியப் பொடா சட்டத்தை ஒருவன் மீது 2 தடவைகள் போட்டது எனக்கு மட்டும்தான். இது பற்றி எனக்குக் கவலையில்லை. தம்பி பிரபாகரனுடன் நான் தமிழக நகரங்களில் நடந்து சென்றேன் என்பது தான் எனக்குப் பெருமையாகும். என்னை அண்ணா என்று தேசியத் தலைவர் அழைத்தது எனக்கு நெஞ்சம் நிறைந்த பெருமையாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த 50 பேர்வரையில் ஓராண்டு சிறையில் இருந்தார்கள். அதில் ஒரு பெண்மணி சென்னையில் பெண்கள் சிறையில் இருந்தார். இது எவருக்கும் தெரியாது. நாங்கள் இந்த விடுதலைப் போரில் இறுதிவரை ஈடுபட்டோம். இன்றைக்கும் தமிழீழ விடுதலை மலரும் என்று நம்புகிறோம். அன்று நான் மேடையில் பேசும் போது சொல்வேன். “எந்தச் சட்டம் வேண்டுமானாலும் போடு. நான் புலிகளை ஆதரிப்பேன். தம்பி பிரபாகரனை ஆதரிப்பேன். எந்தச் சட்டத்தில் என்னைக் கைது செய்தாலும் நான் அவர்களை ஆதரிப்பேன்.” என்று பேசுவேன்.

ஒவ்வொரு மாவீரர் வரலாறும் இன்றைக்கு உலகத்தில் பதின்மூன்றரைக் கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எங்களில் பாதி எண்ணிக்கை உள்ள அரபுகளுக்கு முப்பத்தி மூன்று நாடுகள் இருக்கின்றது. ஆனால் எமக்கென்று ஒரு நாடுகூட இல்லை என்பது வருத்தமாக உள்ளது. தமிழர்களுக்கு அது வருத்தமில்லை.  தமிழர்களுக்கு நான்கு நாடுகள் வந்திருக்க வேண்டும்.

செல்லக்கிளி அம்மானுடன் நான் பேசிய போது மக்கள் கேட்டார்கள். சிறு பையன்களாக இருக்கிறார்களே. இவர்களை நம்பி என்ன உதவி செய்யலாம் என்று கேட்டதற்கு நான் சொன்னேன். இதுவரை தமிழன் ஒருவன் விடுதலை கேட்டு ஆயுதம் ஏந்தி நிற்கவில்லை. முதன்முதலில் ஆயுதம் ஏந்தி நிற்கிறவர்கள் இவர்கள். வென்றாலும் சரி, தோற்றாலும் சரி உதவி செய்து நான் அவர்களோடு நிற்பேன் என்று சொன்னேன். செல்லக்கிளி அம்மான் எல்லாச் சம்பவங்களையும், செய்திகளையும் எனக்குச் சொன்னார்.

இங்கு இருந்துவிட்டு, சென்றவர்கள் அங்கே களப்பலி ஆகின்ற போது, அந்தச் செய்தி வருகின்ற போது, புதுக்கோட்டையில் குலுங்கிக் குலுங்கி அழுதவர்கள் ஏராளம். இவற்றை இன்று நிகழ்வுகளில் சொல்கின்ற போது உலகம் அதைக் கதையாகக் கேட்கின்றது. நாங்கள் அவற்றை கண்ணால் கண்டோம். இதனால் இது பெரிய மகிழ்ச்சியாய் இருக்கிறது.

ஒவ்வொரு மாவீரர் வரலாறும் காயப்பட்ட போராளியான சீலன் என்பவர் முதல் தடவையாக கடல்வழியாகக் கூட்டி வருகின்றார்கள்.   போர்க்களத்தில் 64 விழுப்புண்களை பெற்றவன் தான் புறநாநூறில் வீரனாகக் கருதப்பட்டான். ஆனால் அவன் உடம்பில் எண்ண முடியாதளவு விழுப்புண்கள் காணப்பட்டன. அவர்கள் மதுரைக்கு சிகிச்சைக்காக போவதற்குப் பணம் இல்லாமையல் என்னிடம் இரண்டாயிரம் ரூபா கேட்டார்கள். ஆனால் என்னால் பெறமுடியவில்லை. அவர்கள் பேருந்தில் ஏற இருந்த சமயம் எனது நண்பன் ஒருவன் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தான். அவன் பையிலிருந்து இரண்டாயிரம் ரூபாவை எடுத்துக் கொடுத்தேன்.

பின்னர் பிரபாகரன் அவர்கள் தாயகம் நோக்கிப் புறப்படவிருந்த சமயம். எங்களை மதுரைக்கு அழைத்திருந்தார். அரச பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும் என்ற புத்தகத்தை கொண்டுவந்து தரும்படி கூறினார். நாங்களும் கொண்டு சென்று கொடுத்தோம். அந்த வேளை நான் கொடுத்த இரண்டாயிரம் ரூபாவை என்னிடம் திருப்பித் தந்தார். இது உங்கள் நண்பனிடம் நீங்கள் வாங்கிய கடன். எனவே இதை கட்டாயம் கொடுக்க வேண்டும். என்று கூறி பணத்தைத் திணித்தார்.

மறுநாள் நான் புதுக்கோட்டை வந்த போது, எனது வீட்டைச் சுற்றி காவல்துறையினர் அணிவகுத்து நின்றார்கள். பிரபாகரன் எங்கே என்று கேட்டார்கள். நான் சொன்னேன். புலி என்றால் காட்டுக்குள் சென்றுவிடும் என்று சொன்னேன். உடனே அவர்கள் பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பி விட்டார் என்று எல்லோரும் ஒருசேரச் சொன்னார்கள்.

ஆண்டுதோறும் மாவீரர் நாள் கொண்டாடப்படுகின்றது. நாங்களும் தமிழ்நாடு முழுவதும் பேசினோம். இது அழுவதற்கான நாள் அல்ல. மீண்டும் எழுவதற்கான நாள் என்று நாங்கள் பேசினோம். மாவீரர்கள் தங்கள் பெயர்களைக்கூட பதிவு செய்யாமல் போய்விட்டார்கள். ஆறடி நிலம்கூட அவர்கள் தங்களுக்காக கேட்கவில்லை. ஆனால் உலகம் வாழ்கிற வரை அவர்கள் வீரத்தைப் பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் இன்றும் இறந்தும் உயிர் வாழ்கிறார்கள். அவர்கள் தான் இன்றைக்கும் நமக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாவீரர் வரலாறும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது மிகப் பெரிய புத்தகங்களாய் தொகுதி தொகுதியாய் வெளிவர வேண்டும். சிறையிலிருந்து தப்பித்து வந்த பெண் போராளிகளைப் பார்த்தோம். கனவும் கற்பனையுடனும் வாழவேண்டிய அவர்கள் சாவை விரும்பி அழைக்கிறார்கள். மாவீரர் நாளில் நான் பல இடங்களில் உரையாற்றியிருக்கிறேன். இந்த மாவீரர் நாளிலும் உரையாற்றவுள்ளேன். அந்த உரையில் மாவீரர்கள் பற்றி பேசும் போது அவர்களின் தியாகங்களையும், அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் பேசவுள்ளேன். நான் கேள்விப்பட்ட போராளிகளின் தியாகங்களை ஒவ்வொரு உரையிலும் நான் சொல்லயிருக்கிறேன்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 ஒவ்வொரு மாவீரர் வரலாறும் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் - புதுக்கோட்டைப் பாவாணர்