பெண்ணடிமைத்தனத்தை செயலில் உடைத்த வரலாறு ஈழ விடுதலை காலத்திற்கே உண்டு | பா.அரியநேத்திரன்

பெண்ணடிமைத்தனம்

பெண்ணடிமைத்தனம் உடைத்த வரலாறு

சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் தொடர்பாக ‘சார்புத்தன்மையை உடைப்போம்’ என்பதே இந்த ஆண்டு (2022) ஜ.நாவின் அழைப்பு என கூறப்படுகிறது.

உண்மையில் பெண்ணடிமைத்தனத்தை செயலில் உடைத்த வரலாறு ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் மட்டுமே இருந்தது என்பதற்கு பல வரலாற்றுப் பதிவுகள் சான்றாக உள்ளன.

பெண்ணடிமைத்தனம்தற்போது தமிழ்தேசியப் பரப்பின் 13,வது திருத்தச் சட்டம், இலங்கையிலும், தமிழ்தேசிய அரசியல் பரப்பிலும், ஏன் புலம்பெயர் எமது உறவுகள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக 1987, யூலை, 29இல் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் ஊடாகவே இந்த 13,வது திருத்தசட்டம், மாகாணசபை முறைமை, அதிகாரப்பகிர்வு எல்லாமே ஓரளவு நடைமுறையில் இருந்தாலும், இந்த சட்டத்தின் ஊடாகவே 1987, யூலை, 30 ம் திகதி இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வரவழைக்கப்பட்டது.

இதே இந்தியப் படையுடனேயே முதலாம் கட்ட ஈழப்போரை விடுதலைப்புலிகள் அந்த காலத்தில் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் ஆண் போராளிகளுடன் முதல் முதலாக பெண் போராளிகளும் நேரடி மோதல்களில் ஈடுபட்டனர். அதனால் விடுதலைப்புலிகளுடைய போராளியான மாலதி என்ற பெண், 1987ம் ஆண்டு  முதல் பெண் மாவீரர் ஆனார். அதாவது பெண் போராளி ஒருவர் முதன்முதலாக இலங்கை இராணுவத்துடனான மோதலில் பலியாகவில்லை இந்தியப் படையின் துப்பாக்கி சன்னமே அந்த பெண்ணை பலியெடுத்தது.

இன்னும் சொல்வதானால், பல பெண் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியை வழங்கிய பெருமையும் இந்தியாவுக்கே உண்டு. அதுபோல் முதலாவது பெண் போராளியை சுட்டுக் கொன்ற துர்பாக்கிய வரலாறும் இந்தியாவுக்கே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

இதில் 1988, எப்ரல், 19ல் அன்னை பூபதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இந்தியப் படைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்.

உலகத்தில் ஒரு தாய் இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த வரலாறு, மட்டக்களப்பு தமிழ் தாய்க்கே உண்டு.

இலங்கையில் இடம்பெற்ற ஈழ விடுதலைப் போராட்டத்தில் தந்தை செல்வா காலத்தில் இடம்பெற்ற பல அகிம்சை ரீதியிலா போராட்டங்கள், பாதயாத்திரைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகங்களில் எல்லாம் வடக்கு கிழக்கு தாயகத்தில் இருந்து ஆண்களுடன் பல தமிழ் பெண்களும், முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்ட பல வரலாறுகள் எமக்கு உண்டு.

இருந்தபோதும், பெண் விடுதலை, ஆண் பெண் சம உரிமை என்ற வாய்பேச்சை செயல் வீச்சாக காட்டியவர்கள், கடந்த 2009, மே, 18, க்கு முந்திய காலம் என்பதை மறுதலிக்க முடியாது.

மரணித்த போராளி மாலதியை முதலாவது பெண்போராளியாக அடையாளப் படுத்திய போதும், அதன் பின்னரான முள்ளிவாய்க்கால் மௌனம் வரையும் வடக்கு கிழக்கில் பெண்களுக்கான பூரண சுதந்திரமும் சார்புத்தன்மை அற்ற தன்மையும் கற்பனையாகவோ கதையாகவோ பார்க்கப்படாமல் இயல்பாக இருந்ததை உணர முடிந்தது.

இப்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ள நிலையில், சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் – ‘சார்புத்தன்மையை உடைப்போம்’ என  இந்த ஆண்டு ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில்  பெண் தலைமை தாங்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இனப் படுகொலையிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் இறந்துள்ளனர்.  இவைகளுக்கு எல்லாம் நீதிகள் இதுவரை இல்லை என்பதை உலகம் புரிய வேண்டும்.

Tamil News