Tamil News
Home செய்திகள் மலையகம்: ‘சிறு தோட்ட உரிமையாளர்’-துரைசாமி நடராஜா

மலையகம்: ‘சிறு தோட்ட உரிமையாளர்’-துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் சம்பள இழுபறி நிலைமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி இவர்கள் அல்லல்படுவதாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக மாற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாகவே குரல்கொடுத்து வருகின்றார்.அண்மையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையக திறப்பு விழா நுவரெலியா மாவட்டத்தின் டிக்கோயா நகரில் இடம்பெற்றபோது சஜித் இதற்கு மேலும் அழுத்தம்  கொடுத்திருக்கின்றார்.

மலையக பெருந்தோட்ட மக்கள் சொல்லொணா துன்பதுயரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.சமகால நெருக்கீடுகளுக்கு மத்தியில் இவர்களின் வாழ்வியல் போக்குகள் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் பல்துறை பாதிப்புக்களையும் இவர்கள் எதிர்நோக்கி வருவதும் புதிய விடயமல்ல.

தோட்டத் தொழிற்றுறையை மட்டுமே நம்பி வாழும் இம்மக்களின மாற்றுத்தொழில் முயற்சிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திடும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்பு கருதி கடன் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிற்றுறையின் மீது இம்மக்களின் நாட்டம் அளப்பரியது என்றபோதும் தோட்டங்களின் எதிர்காலம் குறித்து திருப்தியற்ற வெளிப்பாடுகளே மேலோங்கி காணப்படுகின்றன.தோட்டத் தொழிற்றுறை நிச்சயமற்ற ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் இருந்து வருவதும் தெரிந்தாகும.

பெருந்தோட்ட தேயிலை விளை நிலங்கள் அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரிக்கப்பட்டு வருவதாகவும் இதன் பிண்ணனியில் இனவாத சிந்தனைகள் மறைந்து நிற்பதாகவும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.பல சந்தர்ப்பங்களில் பெருந்தோட்ட தேயிலைக் காணிகள் சுவீகரிக்கப்பட்டு காணியற்ற கிராமிய மக்களுக்கு பகிர்ந்தளித்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.

1980 இல் பயனற்ற தேயிலைக் காணிகள் என்றவாறு கம்பளை, கண்டி, உலப்பனை, கடுகண்ணாவ போன்ற இடங்களில் 10,000 ஹெக்டேயர் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டன.இந்நிலத்தை மாற்றுப்பயிர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்ட நிலையில் உலக வங்கியும் இத்திட்டத்திற்கு அனுசரணையாக இருந்தது.இத்திட்டத்தின் கீழ் ஏலக்காய், கராம்பு, போன்ற வாசனைப் பொருட்களை பயிரிட வேண்டுமென்று அரசாங்கம் திட்டமிட்ட நிலையில், சுவீகரிக்கப்பட்ட தேயிலைக் காணிகளை இறுதியில் காணியற்ற கிராமிய மக்களுக்கே பகிர்ந்தளித்தனர் என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுபோன்றமேலும் பல நிகழ்வுகளையும் தெளிவுபடுத்த முடியும்.பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிப்பதன் காரணமாக தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைவடைகின்றன.இது அம்மக்களின்

வருமான ரீதியான பாதிப்பிற்கு உந்துசக்தியாவதோடு இடப்பெயர்வும்  ஊக்குவிக்கப்படுகின்றது.மேலும் அவர்களின் இருப்பு சிதைக்கப்படும் நிலையில் அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல விடயங்களிலும் பின்னடைவு ஏற்படுவதால் அம்மக்களின் அபிவிருத்தியும் தடைப்படுகின்றது.

தேயிலைத் தொழிற்றுறையை உயிர் மூச்சாகக் கொண்டு  பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உழைத்து வருகின்றனர்.பல தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் பிறந்து, தேயிலை செழிப்புற உழைத்து, தேயிலைக்கே உரமாகிப்போன வரலாறுகளும் அதிகமுள்ளன.எனினும் தொழிலாளர்களின் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய நலனோம்பு விடயங்கள் எந்தளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றால் விடை திருப்தி தருவதாக இல்லை.

உழைப்பதற்குக்கூட தெம்பில்லாது இம்மக்கள் அரை வயிற்றுக்கும்,கால் வயிற்றுக்கும் போராட்டம் நடாத்துவது கொடுமையிலும் கொடுமையாகும்.தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலையில் அவர்களின் சம்பள கோரிக்கைகள் எதிர்பார்த்த சாதக விளைவுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை.  வேலை நிறுத்தம், மெதுவாக பணி செய்தல், கொழும்புக்கு தேயிலையை கொண்டு செல்ல விடாது தடுத்தல் போன்ற பல இவர்களின் போராட்ட வடிவங்களும் சொற்ப சம்பள உயர்விற்கே வித்திட்டன.இதனிடையே தொழிலாளர் சம்பள விடயத்தில்  காட்டிக் கொடுப்புகள், “பெட்டி கைமாறல்கள்” எனப்பலவும் இருந்ததாக தொழிலாளர்கள் காதுபட பேசிக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

இத்தகைய நிலைமைகளுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றியமைத்து அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடிக்கடி பேசி வருகின்றார்.இதனடிப்படையில் சஜித் சார்ந்த புதிய ஜனநாயக முன்னணி, “கொள்கை விளக்கமும் கோரிக்கைகளும்”என்னும் தலைப்பில் கடந்த  2019 ஜனாதிபதி தேர்தலின் போது தோட்டத் தொழிலாளர் தொடர்பில் பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இருந்தது.

நாட்டில் தற்போது இயங்கிவரும் பெருந்தோட்ட நிர்வாகக் கட்டமைப்பினை, இதே நாட்டில் இயங்கிவரும் சிறுதோட்ட உடமைக் கட்டமைப்புக்கு மீளமைப்பு செய்தல், இதன் மூலம் தொழிற்றுறை பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சிறந்த வேலைச் சூழல்,அதிக உற்பத்தித் திறன், சுயதொழில் அம்சங்களைக் கொண்டு பெருந்தோட்ட சமூகத்தின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடைதல்.

இதனூடாக ஒரு தொழிலாளியாக அல்லாமல் “தமிழ் விவசாயியாக” 1500 ரூபா அளவில் நாளொன்றுக்கான வருமானமாக கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியிலே பெறக்கூடியதான ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும்  பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கான விசேட ஜனாதிபதி செயலணியை உடனடியாக நிறுவுதல் குறித்தும் புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தி இருந்தமையும் நோக்கத்தக்கதாகும்.

அடிமைத்தனத்தின் வெளிப்பாடு

இந்நிலையில் அண்மையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையக திறப்பு விழா டிக்கோயாவில் இடம்பெற்றபோதும் சஜித் பிரேமதாச பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக மாற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பில் மேலும் அழுத்தம் கொடுத்திருக்கின்றார்.மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு 1000 நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகும்.இதற்கு முற்றுப்புள்ளி வைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவோம் என்று தெரிவித்த சஜித் மலையக மக்களின் எதிர்காலத்தை தான் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பெருந்தோட்ட மக்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பில் மேலும் பல முக்கியஸ்தர்களும் தனது உறுதியான நிலைப்பாட்டை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.தொழிலாளர்களின் வாழ்வில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்துறை அபிவிருத்தியை ஏற்படுத்த இந்நிலைமையானது துரிதமாக வலுசேர்ப்பதாக அமையுமென்றும் அவர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.

1983, இல் இலங்கையில் 75,769 ஹெக்டேயரில் சிற்றுடைமைகள் காணப்பட்டன. இந்த ஆண்டில் கண்டி மாவட்டத்திலேயே கூடுதலாக சிறுதோட்டங்களின் பரப்பளவு காணப்பட்டதோடு இதன் பரப்பளவு 19,269 ஹெக்டேயர்களாகும்.எனினும் 2014 ம் ஆண்டின் தகவலுக்கமைய இலங்கையின் மொத்த தேயிலை நிலப்பரப்பில் 132,335 ஹெக்டேயர் நிலப்பரப்பினை சிற்றுடைமையாளர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

2014 இல் இரத்தினபுரி மாவட்டத்திலேயே கூடுதலான சிறு தோட்டங்களின் பரப்பளவு காணப்பட்ட நிலையில் இது 30,447 ஹெக்டேயர்களாகும்.சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான சிற்றுடைமையாளர்கள் சமகாலத்தில் இத்துறையில் ஈடுபட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை தேயிலை உற்பத்தியிலும்  சிறுதோட்டங்கள்,பெருந்தோட்டங்களை முந்திச்செல்லும் நிலைமை அதிகமாகவே காணப்படுகின்றது.இதனால் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியின் ஆதிக்கம் கை நழுவிப் போயுள்ளது.

பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியினை நோக்குமிடத்து அது 1995 இல் 168.8 மில்லியன் கிலோ கிராமாக அமைந்திருந்தது.2000 இல் 100.1, 2005 இல் 111.5, 2010 இல் 100.8, 2017 இல் 104 மில்லியன் கிலோ கிராம் என்றவாறு பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியானது கடந்த காலத்தில் அமைந்திருந்தது.இதேவேளை சிறு தோட்ட தேயிலை உற்பத்தியானது 1995 இல் 111.3, 2000 இல் 183.8, 2005 இல் 205.7, 2010 இல் 230.1, 2017 இல் 244.0 மில்லியன் கிலோ கிராம் என்றவாறு அமைந்திருந்தது.இதிலிருந்து சிறு தோட்டங்களின் தேயிலை உற்பத்தியின் அதிகரித்த போக்கு வெளிப்படுகின்றது.

சிறுதோட்ட தேயிலை உற்பத்தியின் அதிகரிப்பிற்கும், பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சிக்கும் அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மை பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அரசாங்கம் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு கடன் வசதிகள், மானியங்கள் உட்பட சலுகைகள் பலவற்றையும் வழங்கி அத்துறையின் மேம்பாட்டுக்காக பாடுபடுகின்றது.

ஆனால் பெருந்தோட்டத் தொழிற்றுறை மற்றும் தொழிலாளர்களின் நலன் பேணல் விடயத்தில்  அரசாங்கம் பாராமுகத்துடனேயே செயற்படுவதாக ஒரு பலமான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.இதனை “இல்லை” என்று மறுப்பதற்குமில்லை.இத்தகைய நிலைமைகளால் செல்வம் கொழிக்கும்  பெருந்தோட்ட தேயிலை விளைநிலம் இன்று வறண்டு போயுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.இத்தகைய பல நிலைமைகள் காரணமாக இங்குள்ள மக்களின் வாழ்க்கையிலும் வறட்சியே எதிரொலிக்கின்றது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் பெருந்தோட்ட சமூகத்தினரையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற முனையும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் முயற்சி பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.இதேவேளை இதனை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியமும் புத்திஜீவிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.பெருந்தோட்டட சமூகம் பொருளாதாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் வலுப்பெற்று நிலவுடைமை மற்றும் வீட்டுடைமை  சமூகமாக மறுமலர்ச்சி பெற வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version