Tamil News
Home செய்திகள் கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் இந்தியாவுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்

கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் இந்தியாவுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்

கடன் மறுசீரமைப்பு செயன்முறை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை  துாதுவர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பிரதமர் அலுவலகத்தின் பிரதம செயலாளர் கலாநிதி பிரமோத் குமார் மிஷ்ரா ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (05)  டில்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறை குறித்து கலந்துரையாடியுள்ள துாதுவர் மிலிந்த மொரகொட , தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை உட்பட பொருளாதாரம் குறித்த தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு முக்கிய பங்கை வகிப்பதாகவும்  துாதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மேலும் பொருளாதார ஒருங்கிணைப்பு, இலங்கையில் இந்திய முதலீடுகள் , சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மின்சாரம் மற்றும் வலுசக்தி துறையில் ஒத்துழைப்பு மற்றும் ரூபாய் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version