இந்திய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் தூதுவர் மிலிந்த மொரகொட சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பின்னணியில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் நேற்று (ஜன. 31) செவ்வாய்கிழமை டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுடன் பயனுள்ள சந்திப்பு இடம்பெற்றது. எனது சமீபத்திய இலங்கை விஜயத்தை மறுபரிசீலனை செய்து புரிந்துகொள்ளல்களை மேம்படுத்துவதாக இந்த சந்திப்பு அமைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்த சந்திப்பின்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வரும் பின்னணியில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் (இந்து சமுத்திர பிராந்தியம்) புனித் அகர்வால் மற்றும் இலங்கை பிரதி தூதுவர் நிலுக கதுருகமுவ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை தூதுவர் மிலிந்த மொரகொட கடந்த திங்களன்று இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹானையும் டில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கு இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பு நலன்களை பகிர்ந்துகொள்வது குறித்து சுமுகமான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றது.

தூதுவர் மொரகொட, இலங்கையின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பல ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த தொழில்முறை பயிற்சிகளை வழங்கிய இந்திய படைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் தூதுவர் பாதுகாப்பு பிரதானியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.