கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா? – மட்டு.நகரான்

கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா?

மட்டு.நகரான்

கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா? தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்கு மாகாணப் போராளிகளின் அர்ப்பணிப்பும், வீரமும் இன்றும் போற்றப்பட்டு வருகின்றது. அதிலும் தமிழ்த் தேசியத்திற்காக வித்தாகிய மாவீரர்களின் தியாகம் என்பது, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களினால் என்றும் மறக்க முடியாத – அழிக்கமுடியாத நினைவாகவே இருந்து வருகின்றது.

வடகிழக்கு தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுயகௌரவத்தோடும் வாழவேண்டும் என்பதற்காகப் புத்தகப் பைகளைத் தூக்கி வீசிவிட்டு, ஆயுதங்களை ஏந்தி, இனத்திற்காகப் போராடி, வீரமரணங்களை தழுவிக்கொண்ட மாவீரர்களின் தியாகங்களை, இன்றைய கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மாவீரர்களை நினைவுகூரும் இந்நாளில், அவர்களின் தியாகங்களையும், வீரத்தினையும் எமது சமூகத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழர்களின் போராட்டத்தினைத் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு வன்முறையாகக் கருதினாலும், வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்தினைத் தமது உரிமைக்கான போராட்டமாகவே கருதி வருகின்றனர்.

இதன் காரணமாகவே இன்றும் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள கட்சிகள், வடகிழக்கில் வெற்றிவாகை சூடுகின்றன. இவர்களின் செயற்பாடுகளில் முரண்பாடுகள் இருந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தக் கட்சிகளை ஆதரிக்கும் நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், இன்றைய காலத்தில் மாவீரர்களை நினைவுகூருவதற்குத் தமிழ் மக்கள் தயாராகி வரும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் இன்றைய நிலையினைப் பார்க்கவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் வாகரை, தரவை, தாண்டியடி, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு, யுத்தத்திற்கு முந்திய காலத்தில் மாவீரர் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர், அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் தரைமட்டமாக்கப்பட்டதுடன், அவற்றில் அஞ்சலி செலுத்துவதற்குப் பாதுகாப்புத் தரப்பினரால் தடை விதிக்கப்பட்டு, அதனை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்டவர்கள் கடந்த காலத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலைமையும் உள்ளது.

கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா?இவ்வாறான நிலையில், 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்த நிலைமைகள் ஓரளவு குறைந்து காணப்பட்டது. வாகரை கண்டலடி துயிலும் இல்லம், தரவை துயிலும் இல்லம், மாவடி முன்மாரி துயிலும் இல்லம் போன்றவை தூய்மைப்படுத்தப்பட்டு, பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் 2019ஆம் ஆண்டு மீண்டும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியதிகாரத்திற்கு வந்த காலம் தொடக்கம் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடைகள் ஏற்படுத்தப் பட்டதுடன், அதனை மீறி நினைவேந்தல் அனுட்டித்தவர்கள் கைது செய்ததுடன், மாவீரர் தொடர்பில் முகப்புத்தகங்களில் பதிவுகளை இட்டவர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களைத் தொடர்ந்து சிறையிலடைத்து வைத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பரவலாக மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. கடந்த காலத்தில் மாவடிமுன்மாரியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் தலைமையில் இந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாவீரர் நாளினை நடாத்துவதில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார். “தற்போதைய அரசினால் கடந்த வருடம் (2020) பல அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும், தடைகளும், நீதிமன்றத் தடை உத்தரவுகளும் வழங்கப்பட்டதால், துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் மாவீரர் நாளை நினைவுகூர முடியாத நிலை ஏற்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

2020இற்கு முன்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டதை எல்லோரும் அறிவார்கள்.

கடந்த வருடத்துக்கு முந்திய வருடங்கள் (2010 தொடக்கம் 2019 வரையும்) எந்தத் தடைகள் இருந்த போதும், நான் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் தொடர்ச்சியாக விளக்கேற்றி வந்தேன். நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, விளக்கேற்றி வழிபட்டு, பெற்றோர்கள் அழுது புலம்பி நினைவு நாளை அனுட்டித்தனர்.

ஆனால் கடந்த வருடம் 2020 மிகவும் கண்டிப்பான தடைகள் ஏற்படுத்தப்பட்டன. முன்னின்று நடத்திய நான் உட்பட பலருக்கு நீதிமன்றத் தடை உத்தரவுகள் வந்தமையால், வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினோம்.

இந்த வருடமும் தற்போது முல்லைத்தீவில் 12 பேருக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது மேலும் பல மாவட்டங்களுக்கும் தொடரலாம். இவ்வாறான நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் கடந்த முறை போன்று வீடுகளில்தான் விளக்கேற்றி, அஞ்சலி செலுத்த வேண்டிய நிலை வரலாம். கிழக்கு மாகாணத்திலும் ஆயிரக்கணக்கான மாவீரர்களை தியாகம் செய்த பெற்றோர்கள் உள்ளனர். தமது பிள்ளைகளை நினைவு கூருவதற்குக்கூட முடியவில்லையே என மன வேதனைகளுடன், வெளியில் சொல்லாமல், ஏக்கத்துடன் உள்ளதை அவதானிக்க முடிகிறது. தியாகம் என்பது மறக்க முடியாதது.

ஆனால் நினைவுகூருவதற்கும் சுதந்திரம் இல்லை என்ற மனவருத்தமும், மனம் விட்டுக் கதைப்பதற்கு அச்சமும், கிழக்கு மக்களிடம் உள்ளது. 2015இல் நல்லாட்சி அரசு ஆட்சியில் இருந்தபோது, தடைகள் எதுவும் இருக்கவில்லை. நல்லாட்சி அரசு ஆட்சியில் இருப்பதற்கு முன்பு அதாவது மகிந்த ராசபக்‌ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் (2010 தொடக்கம் 2015 வரையும்) மாவீரர் நாட்கள், மே18 முள்ளிவாய்க்கால் நினைவு என எல்லா நினைவுகளையும் மட்டக்களப்பில் அனுட்டித்தோம். இருந்தபோதும் 2020இல் தற்போதய அரசு ஆட்சியமைத்த பின்பே முழுமையான தடை ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பராமரிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் கவனிப்பாரின்றி காடுகளாக காணப்படுகின்றன. அப்பகுதிக்குச் செல்வோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்குச் சாதகமான சூழ்நிலை காணப்பட வில்லை. அதன் காரணமாக வீடுகளில் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிலைமையே காணப்படுகின்றது.

எனினும் வீடுகளிலும் அஞ்சலி செலுத்துவதைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

குறிப்பாக மாவீரர் நினைவு நாளை அனுஸ்டிப்பார்கள் எனக் கருதப்படுவோருக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடையினை விதிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

தமிழர்களின் தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றினைத் தமிழ் மக்கள் பெறவேண்டுமானால், தொடர்ந்தும் போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆயுதப் போராட்டங்கள் சாத்தியற்ற நிலையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு உள்ளது.

கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா?அந்தப் போராட்டம் முனைப்புப்பெற வேண்டுமானால், மாவீரர்கள் இந்த நாட்டில் செய்த அர்ப்பணிப்புகளை எதிர்கால சமுதாயத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியது அனைவரதும் தார்மீகப் பொறுப்பாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய மாவீரர்களின் தியாகங்களை எதிர்கால சமுதாயத்திற்குக் கொண்டு செல்வதன் ஊடாகவே தமிழர்களின் தாயக எழுச்சிப் போராட்டத்தினை வீரியத்துடன், ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க முடியும் என்பது தமிழ்த் தேசியத்தினை ஆதரித்து நிற்பவர்களின் கருத்தாகவுள்ளது.

யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் இந்த மாவீரர்களின் கனவுகளையும், அர்ப்பணிப்புகளையும் சரியான முறையில் கொண்டு செல்லாமையே, இன்று கிழக்கில் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களும் வடக்கில் டக்ளஸ், அங்கஜன், திலிபன் போன்றவர்களும் வெற்றிவாகைசூடி வலம் வரும் சூழ்நிலையை உருவாகியுள்ளது. இந்த நிலைமையினைத் தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிக்கும் அனைவரும் உணர்ந்து, செயற்படுவதே மாவீரர்களின் கனவை நனவாக்க நாங்கள் செய்யும் கைமாறாகும்.

 

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா? - மட்டு.நகரான்