குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல்-203 பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு

கண்டி அக்குரண பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக கிடைத்த அநாமதேய தகவலையடுத்து கண்டி பிரதேசத்திலுள்ள இருநூற்று மூன்று பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்புப் வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான மூத்த காவல்துறை அத்தியட்சகர் சமில் கிரிஷாந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார் .

ரமழான் தினத்தில் வழிபாட்டின் போது கண்டி, அக்குறணையில் உள்ள பிரதான முஸ்லிம் பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை அவசர இலக்கத்திற்கு அநாமதேய தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலை பாதுகாப்புப் பிரிவினருக்கு அனுப்பி வைத்த பொலிஸ் மா அதிபர், விசேட பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான  மூத்த காவல்துறை அத்தியட்சகர் சமில் கிரிஷாந்த ரத்நாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் அலவத்துகொட பொலிஸாருடன் அக்குரணை பிரதேசத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு சென்று அதன் நிர்வாக குழுவுடன் கலந்துரையாடினர்.

குறிப்பாக அக்குறணை பிரதேசம் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அலவத்துகொட காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட 72 முஸ்லிம்பள்ளிவாசல்களுக்கு வருவோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு  காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வழிபாட்டுக்கு வரும் ஆண்களும், பெண்களும் சோதனைக்கு உற்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஸ்ரீலங்கா ஜம்இய்யதுல் உலமா அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.