Tamil News
Home செய்திகள் வரலாறு காணாத வறட்சியால் சீனா தவிப்பு

வரலாறு காணாத வறட்சியால் சீனா தவிப்பு

சீனாவில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மின்சார உற்பத்தி, வேளாண் உற்பத்தி குறைவு, ஆறுகளின் தண்ணீரின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு என பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

சீனாவில் கடந்த சில மாதங்களாகவே வெப்ப அலை நிலவுகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பலவற்றில் தண்ணீரின் அளவு குறைந்து வறட்சி தொடங்கியுள்ளது.

புகழ்பெற்ற யாங்சே நதியும், போயாங் ஏரியும் வறண்டு காணப்படுகின்றன. வறட்சி காரணமாக நீர் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு தொழிற்சாலைகளில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

நீர் மீன்சார உற்பத்தி பாதியளவு குறைந்துள்ளதால் மின் சிக்கன நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது.

அவ்வப்போது காடுகள் பற்றி எரியும் நிகழ்வும் நடப்பதால், சுற்றியுள்ள விவாசாய நிலங்களில் பயிர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் நிலவும் வெப்ப அலை காரணமாக சுமார் 2.2 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், அங்கு நிலவும் தீவிர வெப்ப நிலையை சமாளிக்க சாலைகளின் மீது தண்ணீர் லாரிகளைக் கொண்டு வந்து பீய்ச்சி அடிக்கப்படுகிறது. சீனாவில் பல நகரங்களில் தினசரி வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. கடும் வெப்பம் மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.

Exit mobile version