அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்களைச் சிறிலங்கா ஆக்கிரமித்து அரைநூற்றாண்டு 22.05.2022 இல்! | அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்

  • ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சிறுபான்மையினப் பிரச்சினையல்ல

உலக நாடுகள் அமைப்புக்களால் தீர்க்க வேண்டிய அனைத்துலகப் பிரச்சினை

  • ஈழத்தமிழர் பிரச்சினையை இறைமைப் பிரச்சினையாக 2009இன் பின் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுக்காமை தீர்வுக்குத் தடையாகிறது

இலங்கை ஈழத்தமிழ் தேசஇனம், சிங்களத் தேசஇனம் என்பவற்றின் தனித்தனியான இறைமையுள்ள அரசுகளைக் கொண்ட தீவாக இருந்தது. பிரித்தானிய காலனித்துவ அரசால் 1833இல் ஒற்றையாட்சி நாடாகத் தமிழ் சிங்கள தேச இனங்களின் அரசுகளின் எல்லைகள் இணைக்கப்பட்டு ஒற்றையாட்சியுள்ள நாடாக இலங்கைத் தீவு மாற்றப்பட்டது.  செயற்கையான இலங்கையர் தேசியம் என்பது பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட ஆங்கிலம் படித்த சொத்துடைமை உள்ளவர்களிடை பிரித்தானியரால் 115 ஆண்டுகாலம் முயற்சிக்கப்பட்டு வெற்றி பெறாத ஒன்றாகியது. இதனால் பிரித்தானியா இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்கையில் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) விதியின்படி இலங்கைப் பாராளுமன்றம் ஒரு சமூகத்திற்கோ மதத்திற்கோ எதிரான சட்டங்களை நிறைவேற்றினால், பிரித்தானிய பிரிவிக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாம் என அரசியலமைப்புப் பாதுகாப்பினை வழங்கி, சுதந்திரத்தை வழங்கினர்.

இதனால் இலங்கை அரசாங்கத்திலும் பிரித்தானிய அரசாங்கத்திலும் பகிரப்பட்ட நிலையிலேயே இலங்கையின் இறைமை சுதந்திரத்தின் பின்னும் 22.05. 1972 வரை தொடர்ந்து வந்தது. அத்துடன் சோல்பரி அரசியலமைப்பின் 29(4) வது பிரிவின் படி 29(2) வது பிரிவில் மாற்றத்தைச் செய்யும் உரிமை பிரித்தானியப் பாராளுமன்றத்துக்கே உண்டெனவும், இலங்கைப் பாராளுமன்றம் செய்தால், அது சட்டவலுவற்றதாகும் என்றும் தெளிவாக விதந்துரைக்கப்பட்டு இருந்தது.

22.05.1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான கூட்டணி அரசாங்கம் ஈழத்தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகளில் பெரும்பான்மையானவர்கள் பங்குபற்றாத பாராளுமன்றத்துக்கு வெளியே நவரலங்காவில் அமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு நிர்ணயசபை மூலம் சிறிலங்கா பௌத்த சிங்களக் குடியரசை நிறுவினர். ஆயினும் இது சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) 29(4) பிரிவுகளை வன்முறைப்படுத்தியதால் இந்தக் குடியரசு ஈழத்தமிழர்களை ஆளும் தகுதியற்ற அரசாக விளங்கியது. இதனால் சோல்பரி அரசியலமைப்பின் மூலம் சிங்களவர்களின் இறைமையுடன் ஈழத்தமிழர்களின் இறைமை பகிரப்பட்டிருந்த நிலை மாறி காலனித்துவத்தின் வழி பிரித்தானியாவிடம் இருந்த ஈழத்தமிழர்களின் இறைமை ஈழத் தமிழர்களிடமே மீண்டது.

1972இல் இலங்கைத் தமிழர்களின் தலைவராக விளங்கிய மாண்பமை சாமுவேல்.ஜேம்ஸ். வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் சிறிலங்கா குடியரசு ஈழத்தமிழர்களை ஆளும் சட்டத் தகுதியை இழந்துவிட்டமையால், அரசற்ற தேசஇனமாக உள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்குப் பாதுகாப்பான அமைதியை தரும் தங்களின் அரசை தங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகங்களில் அமைப்பதற்கான அடையாளக் குடியொப்பத்தை நடத்துமாறு தனது காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, சிறிலங்காவுக்குச் சவால் விடுத்தார்.

காலதாமதம் செய்து 1975இலேயே சிறிலங்கா இத்தேர்தலை நடாத்திய பொழுது, தந்தை செல்வநாயகம் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று சிறிலங்காப் பாராளுமன்றத்துக்குப் போய் பதவியை சிறிலங்கா அரசியலமைப்பிற்கமைய சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்காது ஈழத்தமிழரின் தன்னாட்சிப் பிரகடனத்தை செய்தார். அதில் “ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அரசியல் உரிமைகளையும், பிரித்தானியாவிடம் இருந்து பெற வேண்டும் என அன்றே காலனித்துவத்திற்கு எதிராகச் சிங்களவர்களுடன் இணைந்து போராடினோம். ஆயினும் கடந்த கால் நூற்றாண்டு அனுபவத்தில் சிங்கள அரசுக்கள் அதனை அனுமதிக்காது என உணர்வதால், இனி எங்களுடைய அரசியல் எதிர்காலத்தை நாங்களே நிர்ணயிப்போம் என்றார்.

இதனை அடுத்து 1977ம் ஆண்டு பொதுத்தேர்தல் ஈழத்தமிழர் அரசியல் எதிர்காலத்தை அவர்களே நிர்ணயித்து தங்களுக்கான பாதுகாப்பான அமைதியைத் தரக்கூடிய தங்களின் தனியரசையும் நிறுவிக்கொள்வர். இதனை சனநாயக வழிகளில் சிங்கள அரசு ஏற்க மறுத்தால், வேறு எந்த வழியிலும் அடைவோம்” என்பதற்கான மக்களாணையைப் பெறும் குடியொப்பமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தேர்தல் கொள்கைப் பிரகடனம் செய்து அதில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியும் பெற்றனர்.

இதன் அடிப்படையிலேய 1978 முதல் 2009 வரை தேசியத் தலைவர் மாண்பமை வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கான நடைமுறையரசை சீருடை அணிந்த முப்படைகள், நிர்வாகம், நீதிமன்றங்கள் என்ற ஒரு நாட்டுக்கு இருக்க வேண்டிய பண்புகளின் அடிப்படையில் தமிழீழத்தில் நிறுவி, தங்களை தமிழீழ மக்களாக அரசியல் அடையாளப்படுத்தி சட்டபூர்வ அரசாக உலக அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியால் ஒரு இலங்கைத் தீவுக்குள் இரு அரசுகள் என்ற நிலையைத் தோற்றுவித்து முப்பத்தொரு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

இந்த ஈழத்தமிழர்களின் நடைமுறையரசையே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வழி ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து சிறிலங்கா ஆக்கிரமித்து மீளவும் தனது இனஅழிப்பு நோக்கிலான ஆட்சியை இன்றுவரை 13 ஆண்டுகாலம் தமிழர் தாயகத்தில் தொடர்கிறது.

இதனால் இன்று ஈழத்தமிழர் தேசிய பிரச்சினை என்பது அரசற்ற தேசஇனமான ஈழத்தமிழரின் இறைமையைச் சிறிலங்கா கைப்பற்ற முயற்சிப்பதிலிருந்து ஈழத்தமிழரை அவர்களுடைய வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் பாதுகாத்து அவர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களது தமிழ்த்தேசியத்தையும் தன்னாட்சியையும் அவர்கள் மீளவும் நிறுவி வாழ அனுமதித்தல் என்பதாக உள்ளது.

2009 இன் பின்னர் இந்த 13 ஆண்டுகளும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழ் தேசியப் பிரச்சினையை இறைமைப் பிரச்சினையாக முன்னெடுக்காது, உண்மைகளை உரக்கப் பேச மறுப்பதே சிறிலங்கா தனது ஆக்கிரமிப்பு ஆட்சியை ஈழத்தமிழர் மேல் இனஅழிப்பு அரசியல் வழி தொடர்வதை உலகநாடுகளாலும், உலக அமைப்புக்களாலும் தடுக்க இயலாதிருப்பதன் மூலகாரணி.

இதனை உணர்ந்து ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அரசற்ற தேசஇனமாக உள்ள ஈழத்தமிழர்களின் இறைமையை உலக நாடுகளும், உலக அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் ஏற்பதில் காட்டும் காலதாமதமே சிறிலங்கா ஈழத்தமிழின அழிப்புக்களைத் தொடர்வதை ஊக்குவிக்கிறது என்ற உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சிறுபான்மையினப் பிரச்சினையல்ல உலகநாடுகளாலும் அமைப்புக்களாலும் தீர்த்து வைக்க வேண்டிய அனைத்துலகப் பிரச்சினை என்பதை உலகு உணரும்.

அத்துடன் இதற்கான ஈழத்தமிழர்களின் அரசியல் முயற்சிகள் பிரிவினைச் செயற்பாடல்ல என்பதும் வழிமுறைகள் பயங்கரவாதம் அல்ல என்பதும் தெளிவாகும். துப்பாக்கிகள் மௌனித்த நிலையில் ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய தேச உருவாக்கத்தைச் செய்வதை உலகு விரைவுபடுத்தினாலே இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் நெருக்கடிகளும் உரிய தீர்வைப் பெறும்.

இதற்கு உலகெங்கும் புலம்பதிந்து வாழும் உலகத் தமிழர்களும் எல்லா வழிகளிலும் ஈழத்தமிழரின் தேச உருவாக்கத்திற்கு உதவுவது அவர்களின் தாயகக் கடமையாக உள்ளது.

Tamil News