அனைத்துலக நீதியின் கையில் ‘கோட்டா’ விரைந்து செயற்படுங்கள் உலகத் தமிழர்களே | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 191

ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 191

அனைத்துலக நீதியின் கையில் ‘கோட்டா’
விரைந்து செயற்படுங்கள் உலகத் தமிழர்களே

சிறிலங்கா அரசத் தலைவர் என்பதற்கான சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி தானும் தனது கட்டளைகளின் அடிப்படையில் சரத்பொன்சேகா தலைமையிலான சிறிலங்காப் படைகளும் ஈழத்தமிழின அழிப்பு நோக்கில் 2009 மே 18 வரையும் செய்த போர்க்குற்றங்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைகள் தொடர்பாக அனைத்துலகச் சட்டங்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளும் இடம்பெறாமல் தடுத்து வந்த சிறிலங்காவின் முன்னாள் அரசத்தலைவர் கோட்டாபாயா ராசபக்சா 15.07.2022 இல் பதவியில் இருந்து விலகியது முதல் அந்தச் சிறப்பு உரிமைகள் பாதுகாப்பை இழந்துள்ளார். இதனால் அனைத்துலக நீதியின் கையில் கோட்டபாய ராசபக்சா இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டிய குற்றவாளியாக உள்ளார். இதனை உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் அந்நாடுகளின் குடிகளாகப் புலம் பதிந்து வாழும் ஈழத்தமிழர்களும் மற்றும் தமிழகத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்து வேறுநாடுகளுக்குச் சென்று அந்நாட்டின் குடிகளாகி இன்று உலகநாடுகளில் வாழும் தமிழர்களும் இணைந்து தங்கள் தங்கள் நாட்டு அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைதிக்காக உழைப்பவர்களுக்கும்  உடன் அறிவித்து கோட்டாபாய ராசபக்சா மேல் அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற அனைத்துலக நீதியின் அழைப்பை தெளிவாக்க வேண்டும். இது தமிழன்னைக்குத் தமிழர்கள் செய்யும் கடமையாக மட்டுமல்ல அனைத்துலக நீதிக்கு ஒவ்வொரு மனிதரும் செய்யும் கடமையாகவும் உள்ளது.

இந்த அவசர வேண்டுகோளை முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறிலங்காவுக்கான மூலக்குழுவாசகச் செயற்பட்டு வரும் ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், கனடா, யேர்மனி, மொண்டேனேக்ரோ, வடக்கு மசிடோனியா, மலாவி ஆகிய நாடுகளுக்கு விடுத்து அவை சரியான முடிவுகளை மேற்கொள்ள அழுத்தங்கள் கொடுக்க வேண்டியவர்களாக இன்று உலகத் தமிழர்கள் உள்ளனர். ‘கோட்டா கோ கம’ ( கோட்டா ஊருக்குப்போ)  வை காலிமுகத்திடலில் அரகலிய (போராட்டக்) குழுவினர் மக்கள் சக்தியை பலப்படுத்துவதன் மூலம் முன்னெடுத்தது போல ‘அரஸ்ட் கோட்டா’  ( கோட்டாவை கைது செய் ) என்னும் மக்கள் போராட்டமாக முன்னெடுப்பதற்கு உலகத்தமிழர்கள் தங்களிடை உள்ள எல்லா வேறுபாடுகளையும் ஒருபுறம் வைத்து விட்டு ஒன்றுபட்ட பொது அமைப்பாகத் தன்னெழுச்சி கொண்டெழ வேண்டும்.

மேலும் இன்று சிறிலங்காவில் சிங்கள ஆட்சி அதிகாரமையத்தில் ஏற்பட்டு வரும் ஆட்சி மாற்றங்களை வெறுமனே சிங்களவர்களுக்குரிய மாற்றங்களாகவே மாற்றுகின்ற தந்திரோபாயத்தை தந்திர அரசியலில் மிகவும் நிபுணரான சிறிலங்காவின் இன்றைய பதில் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்காவும், மகாதந்திரசாலியான சட்டமேதை ஜி எல் பீரிசும், மௌனமாகவே இருந்து கொண்டு தேவையான நேரத்தில் தேவையான முறையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குரலாகத் தன்னையும் வெளிப்படுத்தும் சஜித் பிரேமதாசாவும் ஒன்றிணைந்து செயற்படுத்துவார்கள். இதனால் காலிமுகத் திடல் போராட்டம் புதிய திராட்சை இரசமாக இருந்தாலும் அது பழைய சிங்கள பௌத்த பேரினவாதமென்னும் சித்தைகளிலேயே வார்க்கப்பட்டு அந்த ஓட்டைச் சித்தைகள் வழி வெளியே ஓடி வீணாகும்.

எனவே குடிமக்களின் உரிமைகள் என்ற அடிப்படையில் எழுச்சி கொண்டுள்ள சிங்கள இளையவர்களும் விழிப்புணர்வுற்ற சிங்களவர்களும் இலங்கையின் மற்றொரு தேச மக்களான ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை சிங்களதேச மக்களுக்கு எதிரானதோ அவர்களை ஆக்கிரமிக்கும் நோக்குக் கொண்டதோ அல்ல என்பதை உணர வேண்டும். அதற்கு ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினை (Tamil National Question) என்றால் என்ன என்பதைச் சரியாகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மிகச்சுருக்கமாகச் சொல்வதனால் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்” என்னும் தாங்கள் வாழும் மண்மீதான மண்ணுரிமையே ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை. இதனை விரிவாகச் சொல்வதானால், ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினை என்பது இலங்கைத் தீவின் தேச மக்களான ஈழத்தமிழர்கள் தங்களின் தொன்மையானதும் தொடர்ச்சியானதுமான வரலாற்றுத் தாயகத்தில் தங்களுக்கான இறைமையுடன் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளுடன் வாழ்ந்து கொண்டு, இலங்கைத் தீவின் மற்றைய தேச மக்களான சிங்கள தேச மக்களுடனும், இலங்கையின் குடிகளாக உள்ள முஸ்லீம் மக்கள், மலையகத் தமிழ் மக்களுடனும், நாளாந்த வாழ்வில் பாதுகாப்பான அமைதியுடனும் சமத்துவமான வளர்ச்சிகளுடனும் சகோதரத்துவ உறவிலும் சுதந்திரமாக வாழ்தல் என்பதாக உள்ளது. தாமும் சுதந்திரமாக வாழ்ந்து மற்றவர்களும் சுதந்திரமாக வாழ உதவுதல் என்பதே ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை.

காலிமுகத் திடல் போராட்டத்திற்கு அணிசேர்த்த முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரெட்ணம் “மக்களின் இறையாண்மை பலத்தை நடைமுறைப்படுத்தும் புதிய தூண் உருவாகியுள்ளது” எனவும் “இந்தப் பலம் நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம், நீதி மன்றம் என்னும் மூன்று அதிகாரத்தூண்களுக்கு மேலதிக புதிய மக்கள் போராட்டம் என்னும் 4வது அதிகாரத்தூண்” என மிக அழகாக மக்கள் இறைமையின் வலிமையை விளக்கியுள்ளார். இந்த அதிகாரத்தூண் வெறுமனே சிங்கள மக்களை மட்டும் உள்ளடக்காது ஈழத்தமிழர்கள் என்னும் சிங்கள மக்களுக்கு எல்லா வகையிலும் அதே உரிமையும் கடமையும் கொண்டுள்ள இன்னொரு தேச மக்களான ஈழத்தமிழர்களது தனித்துவமான மக்கள் இறைமையையும், முஸ்லீம் மக்கள், மலையகத் தமிழர்கள் என்கிற இலங்கைக் குடிமக்களின் சிங்களவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எல்லா வகையிலும் சமத்துவமாக வாழும் குடியுரிமைகளையும் உள்ளடக்கிய கூட்டு உரிமை என்பதை இலக்கு தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறது. இந்த அரசியல் எதார்த்தத்தை வெளிப்படுத்தி அனைவருக்குமான பாதுகாப்பான அமைதியான அனைவரது வளர்ச்சிகளும் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர முறைமையில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு ஒன்றின் உருவாக்கத்தின் மூலமே இலங்கை மக்கள் அனைவரதும் பொருளாதார நெருக்கடிகள் மாற்றம் பெற முடியும் என்பதைத் திரு குமார் குணரெட்ணம் போன்ற முன்னிலை சோசலிஸ்டுகள் துணிவுடன் அறிவிக்க வேண்டுமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.

Tamil News