ஜனநாயக விரோத செயற்பாட்டில் அரசாங்கம்-ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

12 1 ஜனநாயக விரோத செயற்பாட்டில் அரசாங்கம்-ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டுஜனநாயக முறையிலான ஆர்பாட்டங்களை நசுக்க முற்படுவதும், பெருந் தொற்றை காரணம் காட்டி தனிமைப் படுத்தலிற்கு உட்படுத்துவதும் ஜனநாயக விரோத செயற்பாடென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

கொத்தலாவலை இராணுவ பல்கலைக் கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகே இடம் பெற்ற கல்விசார் ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப் பட்டிருந்தனர்.

எனினும் தனிமைப் படுத்தல் சட்டத்தினை காரணம் காட்டி தன்னிச்சையான முறையில், ஜோசப் ஸ்டாலின் உட்பட குழுவினர் கட்டாயமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான ஜனநாயக மறுப்பு நடவடிக்கையாக அமைகின்றது. இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறு கோருகிறோம்.

இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள தொழிற்சங்க உரிமைகளின் அடிப்படையிலேயே ஆர்ப்பாட்டங்கள் நடை பெறுகின்றன. இவற்றை நசுக்க முற்படுவதும், கொரோனா பெருந் தொற்றை காரணம் காட்டி, தனிமைப் படுத்தலிற்கு உட்படுத்துவதும், ஜனநாயக விரோத செயற்பாடாகவே அமைகின்றது.

நிர்வாகத்திற்கு இடையூறு இல்லாமல் சுகாதார நடை முறைகளை பின்பற்றி சமூக நீதிக்காக இடம் பெற்ற இப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஜோசப் ஸ்டாலின் உட்பட குழுவினரை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதோடு தொழிற் சங்கங்களின் ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளிற்கு அனுமதி யளிக்க வேண்டும் என கோரி நிற்கின்றோம்.

அத்துடன் ஆசிரியர்களாகிய நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் விடுவிக்கப்படும் வரை மாணவர்களின் இணையவழி வகுப்புக்களை புறக்கணிப் போம் என்றுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 ஜனநாயக விரோத செயற்பாட்டில் அரசாங்கம்-ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு