Home செய்திகள் காபூலில்  இருக்கும் இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு

காபூலில்  இருக்கும் இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு

merlin 193292616 aa799d35 d975 42ab a4a1 3f781b12d6f2 articleLarge காபூலில்  இருக்கும் இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தற்போதைய மோதல்களுக்கு மத்தியில், அங்குள்ள இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதிபர் மாளிகையின் கட்டுப்பாட்டை தலிபான்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் மாளிகையை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட தகவலை தலிபான்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், இது தொடர்பான தகவல்கள், அந்நாட்டு அரசு தரப்பு உறுதிபடுத்தவில்லை. இருந்தும் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக  அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் இன்று மாலை காபூல் நகருக்குள் இயங்கி வந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றி வந்த தூதர் உள்பட அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக விமான நிலைய வளாகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது காபூல் விமான நிலைய பாதுகாப்பை நேட்டோ கூட்டுப் படையினர் கவனித்து வருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து தாயகத்துக்கு திரும்ப முற்படுவோருக்கு உதவியாக தமது படையினர் விமான நிலையத்தில் இருப்பதாக நேட்டோ செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடக்கலாம் என்று அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை குறிப்பை வெளியிட்டிருந்த நிலையில், அங்கு தற்போது துப்பாக்கிச் சுடு நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“யாரையும் கொல்ல மாட்டோம், நாங்கள் மக்கள் சேவகர்கள். ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் ஆட்சி ஒப்படைக்கப்படுவதையே விரும்புகிறோம்” என்று சர்வதேச ஊடகமான பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தாலிபன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 50 இலங்கையர்கள்  காபூலில்  வேலை செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ள அதே நேரம், அங்கிருந்து   அவர்களை  பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர  முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version