அதானிக்கு மின் திட்டம்: கோட்டாபய, மோடியின் அழுத்தம் பற்றி பேசிய அதிகாரி பதவி விலகல்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தொடர்பாக கருத்து வெளியிட்டு பின்னர் அதை திரும்பப் பெறுவதாக அறிவித்த எம்சிசி பெர்டினன்டோ இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, சமீபத்தில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

ஆனால் மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் எம்சிசி பெர்டினன்டோ தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News