மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார் கோட்டாபய; அதற்கு முன் கூட்டமைப்புடன் பேச்சு?

அமெரிக்கா செல்கிறார் கோட்டாபயஅமெரிக்கா செல்கிறார் கோட்டாபய: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார். கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டம், நியூயோர்க்கில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதிவரை அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே ஆகியோர் செல்லவுள்ளனர்.

ஐ.நா பொதுச் சபை கூட்டத்திற்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட உலக அரசியல் தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டா சந்திப்புகளை நடத்த ஏற்பாடாகியுள்ளது. தற்போதைய அரசு பதவிக்கு வந்த காலம் முதல் இதுவரை, தமிழர் பிரச்சினை தீர்வு குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலைமையில், சர்வதேச அரங்கில் அது பாரிய பேச்சு எழலாமென்பதால் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்திற்கு முன்னர் தமிழர் தரப்புடன் அரச தரப்பு உள்ளக கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதி தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் சில பேச்சுகளை நடத்திவரும் நிலையில், அது தொடர்பிலும் ஐ.நாவில் குறிப்பிட ஜனாதிபதி தரப்பு தயாராகி வருகிறது. இதற்கு மேலாக, கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி உலக நாடுகளிடம் உதவியை கோருவாரென சொல்லப்பட்டது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021