Home செய்திகள் பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்த கோட்டாபய சிங்கப்பூர் சென்றார்

பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்த கோட்டாபய சிங்கப்பூர் சென்றார்

கோட்டாபய சிங்கப்பூர் சென்றார்


இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மருத்துவ பரிசோதனைக்காக  சிங்கப்பூருக்கு   இன்று அதிகாலை பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள இந்த தருணத்தில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பிலான முக்கிய அமைச்சரவை கூட்டம் இன்று (13)  இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோட்டபாய ராஜபக்ஷ ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடவில்லை.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பதானது, கடந்த நவம்பர் மாதம் வரை 1587 மில்லியன் அமெரிக்க டாலர் என ராஜாங்க அமைச்சர் ஷெஹென் சேமசிங்க, பாராளுமன்ற உரையின் போது தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

இந்த சூழ்நிலையிலேயே, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவது தொடர்பில் இன்று ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ  நாட்டை விட்டு திடீரென புறப்பட்டு சென்றுள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபபக்ஷ, தனக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களை பயன்படுத்தி, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, பாராளுமன்ற அமர்வுகளை  ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளை அடுத்த மாதம் 11ம் திகதி கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையிலேயே, கோட்டாபய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, பாராளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார். மேலும் பாராளுமன்றத்தின் அமர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டாபய சிங்கப்பூர் சென்றார். பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஒய்வும் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version