கோட்டாபய, மஹிந்த, சுனில் ரத்நாயக்க, சந்தன பிரசாத் ஆகியோர் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி  உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு  வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படுவதுடன், அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆயுதப் போராட்டம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் மனித உரிமை மோசமாக  மீறப்பட்டுள்ளமையால், இலங்கைவாழ் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமையால், சர்வதேச சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக கனடா கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக கனடா வௌிவிவகார  அமைச்சர் கூறியுள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது.