கோட்டாபயவுக்கு குறுகிய கால பயண அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது: சிங்கப்பூர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூருக்கு வந்ததாகவும் அவருக்கு குறுகிய கால பயண அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது என்றும்   சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் அதிகார சபை  தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி பல மாதங்களாக நீடித்த நிலையில், ஏற்பட்ட மக்கள் எதிர்ப்புகள் காரணமாக கடந்த வாரம் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற  கோட்டாபய ராஜபக்சே, அங்கிருந்த தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

இந் நிலையில்,கடந்த 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான அனுமதி பாஸ் வழங்கப்பட்டது என சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை எனவும் அவருக்கு அடைக்கலம் எதுவும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.