குறைந்த கால அவகாசமே வழங்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறீலங்கா அரசு, மனித உரிமைகளைப் பாதுகப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறைந்த கால அவகாசத்தையே ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை வழங்குவதற்கான நிபந்தனையாக வழங்க வேண்டும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த புதன்கிழமை (22) வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியம் தனது வரைமுறைகளைத் தெளிவாக மற்றும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். சிறீலங்காவில் விரைவாக சீரழிந்து வரும் மனித உரிமை நடைமுறைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தங்கள் நிறுத்த முற்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு வழமைபோல வாக்குறுதிகளை வழங்குகின்றது. ஆனால் அவை நிரந்தரமானவை இல்லை. எனவே ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுவரும் ஆய்வுகள், சிறீலங்கா அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதாக இருக்கவேண்டும்.

கோத்தபாயா ராஜபக்சாவின் ஆட்சியில் பொது அமைப்புக்கள் அடக்கப்படுகின்றன. சிறுபான்மை மக்கள் குறிவைக்கப்படுகின்றனர். பேரணிகள் மௌனமாக்கப் படுகின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகள் புறக்கணிக்கப்படுகின்றன என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பணிப்பாளர் லொற்ரே லிசெற் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளையும், ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் எடுக்க வேண்டும். தற்போதைய இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் நீடிப்பை ஐரோப்பிய ஒன்றியம் ஆக்கபூர்வமானதாகப் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021