Home ஆசிரியர் தலையங்கம் உயிர் கொடுத்து உயிர் காத்தோர்க்கான நினைவேந்தல்

உயிர் கொடுத்து உயிர் காத்தோர்க்கான நினைவேந்தல்

390 Views
ஈழமக்கள் தாயக வரலாற்றில் ஆடி மாதத்துக்கு ஒரு தனி இடமுண்டு. ஈழமக்களை அழிப்பதற்கான சிங்கள பௌத்த இனவெறித் தீ சிறீலங்காவால் 1983 ஆடி மாதத்தில் தான் அனைத்துலகச் சட்டங்களுக்கு அஞ்சாது மூட்டப்பட்டது.

இந்தச் சிங்கள பௌத்த இனவெறித் தீயிலிருந்து ஈழமக்களைக் காப்பதற்காக உயிர் கொடுத்து உயிர் காக்கும் விடுதலைப் பேரொளியும் இதே ஆடி மாதத்தில் தான் மில்லர் வரலாற்றால் 1987 இல் ஈழமண்ணில் எழுந்தது.

ஆம். சிறீலங்கா 1983 ஆடியைத் தனது ஈழத்தமிழின அழிப்புத் திட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டுக் கொண்டாட்டமாக மாற்றியது. இந்த ஆடித் தமிழின அழிப்புக் கலவரத்தால், சிறீலங்கா அரச படை பலத்துடன் சிங்களப் பயங்கரவாதிகள், ஆயிரக் கணக்கான தமிழர்களை இனப் படுகொலை செய்தனர். பல மில்லியன் டொலர் பெறுமதியான சொத்து இழப்புக்களையும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தினர். ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப் பட்ட இந்த இனங் காணக் கூடிய அச்சத்தால்  ஆயிரக் கணக்கில் ஈழத் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி, அரசியல் புகலிடம் கோரி, உலகெங்கும் பரந்து வாழும் அலைவு உலைவு வாழ்வையும் தொடக்கி வைத்தனர்.

சிறீலங்கா அரசாங்கப் படைபல ஆதரவுடனான சிங்களப் பயங்கரவாதிகள் இலங்கைத் தீவின் பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களை இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அடித்து அனுப்பித் தமிழர்களின் தாயகம் இதுதானென எல்லை வரைவு செய்த இந்த வரலாற்று நிகழ்வானது, தமிழீழத் தாயகம் என்ற தேசம் ஒன்றின் இருப்பை உலகுக்குத் தெளிவு படுத்தியது. அதே வேளை தமிழர் தாயகத்தைப் பகை நாடொன்றைத் தாக்கி அழிப்பது போல் சிறீலங்கா முப்படைகளையும் கொண்டு தாக்கி அழிக்க முற்பட்டது. தன் ஆளணியும் படைப் பலமும் மிக அதிகமாக உள்ளது என்ற உணர்வில் ஒரு சிறிய மக்கள் கூட்டமான ஈழத்தமிழ் மக்களை அடிமைப்படுத்தி, ஆளுவது இலகு என்ற நோக்கிலேயே அப்பாவித் தமிழர்களுடைய உயிரையும், உடலையும், வீடுகளையும், சொத்துக்களையும், தொழில் முயற்சிகளையும்  விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் வழி சிறீலங்கா அழிக்கத் தொடங்கியது.

இந்தச் சூழலில் எத்தனை பெரிய படைபலம் ஆனாலும் அதனைத் தம் இன்னுயிர்களையே ஈகம் செய்து தடுத்து வாழ வேண்டிய கட்டாயத்துள் ஈழத்தமிழ் இளைய சமுதாயம் சென்றது. இதுவே தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான ஈழமக்களின் எழுச்சிக்குப் பக்கபலம் சேர்த்த மில்லரின் வரலாறாகவும், அங்கயற்கண்ணியின் வரலாறாகவும்  அவர்கள் வழிநடந்த முகம் தெரியாத, பெயர் தெரியாதவர்களின் வரலாறாகவும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகியது.

அறுபதுகளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ‘உயிர் கொடுத்து உயிர் காக்கும் உத்தமர்க்கோர் ஆலயம்’ என்று பிறர் வாழத் தம் இன்னுயிரை ஈகம் செய்யும் உத்தமர் நினைவேந்தி வாழும் ஆலயங்களாக நன்றியுணர்வுள்ள மனித உள்ளங்களைக் கலைதத்துவ உலகில் வெளிப்படுத்தியது. இந்த தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் நினைவேந்தும் யூலை மாதம் 5ஆம் நாள் உயிர் கொடுத்து உயிர் காத்தோரைப் போற்றும் ஈழத்தமிழர் வரலாற்று நாளாகியது. அதே வேளை இந்த செய்நன்றி மறவா நினைவேந்தல், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தன்னலமற்ற செயற்பாடுகளை ஊக்கப்படுத்திச் செயற்பாட்டுச் சக்தி தரும் நாளாகவும் திகழ்கிறது.

தமிழர்களுடைய மரபில் தன்னுயிர் மேலான ஆசையை விடுத்துத் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் உள்ளம் தான் தவவாழ்வு என்பது வள்ளுவர் தரு விளக்கம்.

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்

இந்தத் தவ வாழ்வினையே வையத்தில் வாழ்வாங்கு வாழும் சிறப்புடைய வாழ்வெனப் போற்றும் வள்ளுவர் இதுவே மனிதனுக்குக் கடவுள் தன்மை அளிக்கும் சிறந்த இல்லறம் ஆகும் என இல்லறம் என்னும் இயலை

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப்படும்”

என நிறைவுசெய்துள்ளமையைக் காண்கின்றோம்.

மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தின்  திருச்சதகத்தில் இறைவனைப் பாடும் பாடலான

“வான் ஆகி! மண் ஆகி!  வளி ஆகி! ஒளி ஆகி!

ஊன் ஆகி! உயிர்ஆகி! உண்மையும் ஆய்! இன்மையும் ஆய்!

கோன் ஆகி! யான், எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வான் ஆகி நின்றாயை! என் சொல்லி வாழ்த்துவனே!

என்பதைப் படிக்கையில், முகந் தெரியாமல் பெயர் தெரியாமல் உயிர் கொடுத்து உயிர் காத்த உத்தமர்கள், வானாகவும், மண்ணாகவும், வளியாகவும், ஒளியாகவும் மாறி வாழும் உயிர்களின் ஊனாகவும், உயிராகவும் இருத்தல் கொண்டு வாழ்பவர்களுக்குச் சக்தி தரவல்ல கடவுள் தன்மை கொண்டவர்கள் என்பது தெளிவாகும். இதனாலேயே துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கு இறைவழிபாடு செய்வது போல உயிர் கொடுத்து உயிர் காத்தோர்க்கான நினைவேந்தல் வழிபாட்டுடன் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதத்தைத் தொடங்குவது ஈழமக்கள் தங்கள் துன்பங்களை எல்லாம் மாற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும் என்பது இலக்கின் நம்பிக்கையாக உள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version